Monday 31 March, 2008

அரபி மொழி தாக்கம்ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அரேபியரின் தொடர்புகளால் சுமார் 1500 அரபுச் சொற்கள் தமிழ் மொழியில் காண முடிகிறது. தமிழ் மயமாகி இருக்கும் அச்சொற்களை அரபுச் சொற்கள் என அடையாளம் கண்டுக் கொள்ள முடியாத அளவுக்கு நம் சொல்வழக்கில் இரண்டரக் கலந்து விட்டன. அவற்றில் சில சொற்களை மட்டும் காண்போம்.

அக்கப்போர், அனாமத்து, அயன், அமினா, அல்வா, அமல், அண்டா, அத்தர், அசல், ஆசாரி, இலாகா, இனாம், ஊதுவத்தி, கசாப்பு, கச்சா, கஜானா, கம்மி, கிராக்கி, கெடுபிடி, கிஸ்தி, குத்தகை, கைதி, குமாஸ்தா, சர்க்கார், சர்பத், சலாம், சிப்பந்தி, டபேதார், தரகர், தண்டோரா, தராசு, நகல், நமூனா, பட்டுவாடா, பந்தோபஸ்து, பலே, பைசல், பேஷ், பூந்தி, மசோதா, மராமத்து, மாஜி, முகாம், மிட்டாய், ரத்து, ரஸ்தா, ராஜினாமா, வக்கீல், வக்காலத்து, வஜா, வாபஸ், வாய்தா, ஜாமீன், ஜாஸ்தி, ஜோர், ஜில்லா, ஜமீன், மைதானம், தஸ்தாவேஜ் ஆகியன.


- அப்துல் கையூம்

Read more...

போர்த்துகீசியரின் தாக்கம்1591-ஆம் ஆண்டிலிருந்து 1658-ஆம் ஆண்டு வரை போர்த்துகீசியரின் செல்வாக்கு சோழ மண்டலத்துக் கடலோரப் பகுதியில் மேலோங்கி இருந்த காலம்.


பல்வேறு மேலைநாட்டு வணிகப் பொருட்கள் நாகை துறைமுகத்து வழியே தமிழகத்திற்கு இறக்குமதியானது. இக்கால கட்டத்தில் போர்த்துகீசிய மொழிச் சொற்கள் கணிசமான அளவில் நாகூர் வட்டார மொழியில் இரண்டறக் கலந்தன. உதாரணத்திற்கு சில வார்த்தைகள் :


அலமாரி (armaario), அன்னாசிப் பழம் (ananaas), ஆசுப்பத்திரி (hospital), கடுதாசி (carta), கோப்பை (copo), துவாலை (toalha), பீங்கான் (palangana), பீப்பா (pipa), பேனா (pena), பிஸ்கோத்து (biscoita), வராந்தா (varanda),


- அப்துல் கையூம்

Read more...

Sunday 30 March, 2008

நாகூர் கந்தூரிகைலிக் கடைகளின்
‘கட்-அவுட்’ திருவிழா..!

‘காதல் தேசம்’
‘காதல் கோட்டை’
புடவைகள் பெயர்கள்..!
பூரிப்பில் பெண்கள்…!
பாரின் சாமான்கள்
மோகத்தில் ஆண்கள்..!

ஹோட்டல் எங்கும்
விடாது ஒலிக்கும்
சட்டுவ சங்கீதம்
முட்டை புறாட்டா மணம்
மூக்கின் நுனியில்..!

கடலில் ஓடும்
கப்பல்கள்
தெருவில் ஓடும்
ஊர்வல விந்தை..!

வெடிகள் போட்டு
கொடிகள் ஏறும்
விமரிசையாக..!
நாகூர் கந்தூரி -

இங்கு
இரவிலும் சூரியன்..!

மொழிகளை எல்லாம்
இரண்டறக் கலந்து
செவிட்டில் அறையும்
கேஸட் அலறல்கள்…!

‘மேட்-இன்’
செவ்வாய்க்கிரகம்
என்றும்
முத்திரை குத்தும்
வித்தைக்காரர்கள்..!

தர்ஹா உள்ளே
காணிக்கை எல்லாம்
உண்டியல் போட
கட்டளைக் குரல்கள்..!

பாதைகள் மறித்து
பாத்திஹா கடைகள்
தாயத்து டிசைன்கள்
விற்பனை அங்கு-
மொத்தமாகவும்
சில்லறையாகவும்..!

பால்டின் தகரத்தில்
சிற்ப வேலைகள்..!
அதை
வெள்ளியாய் மாற்றும்
ரசவாதக் கலைகள்..!

கஜல்கள் கவாலிகள்
நாட்டியத்தோடு
களி நடம் புரியும்
இளைஞர் கூட்டம்..!

கமிஷன் போக
மிச்சப் பணத்தில்
கரும் புகையோடு
வாண வேடிக்கை
கோலாகலங்கள்..!

பீர்சாபு எறியும்
எழுமிச்சைப் பழங்களில்
பிள்ளைவரத்தை
தேடும் பெண்கள்..!

சந்தனக் கூட்டில்
பூக்களை வீசிப்
பரவசப்படும்
பக்த கோடிகள்..!

‘ஐயா..தருமம்..!’
என்ற
அபஸவரத்தோடு
ஊரே நிறைந்த
பிச்சைக்காரர்கள்..
அவர்களுக்கு
சுகத்தைக் கொடுக்கும்
சோத்துச் சீட்டுக்கள்..!

இன்னும்
தொண்டற் படைகள்
உண்டியலோடு..!

இகபர உலகில்
நன்மைகள் வேண்டி
இரண்டே ரூபாயில்
ஆண்டவர் தரிசனம்..!

இந்த ஆராவரங்களின் மத்தியில் கூட -
அந்த -
மகானை -
நினைத்தும் - துதித்தும்
சில
மனித மனங்கள்…


- கவிஞர் Z. ஜபருல்லா

Read more...

விளையும் பயிர் முளையில்நாகூரில் அரசு மேனிலைப் பள்ளிக்கூடம் ஒன்று இருக்கிறது. இது பொன்விழா, வைர விழா, முத்து விழாக் கொண்டாடிய முதுபெரும் பள்ளிக்கூடம்.

இந்தப் பள்ளிக்கு "செட்டியார் பள்ளிக்கூடம்" என்று பெயர். இங்கு நாள்தோறும் காலையில் இறைவணக்கத்துக்குப் பின் வகுப்புகள் தொடங்குவது வழக்கம்.

"பொன்னார் மேனியனே" என்ற பாடல் நாள்தோறும் இறைவணக்கப் பாடலாகப் பாடப்படும். ஒரு ஆசிரியர் பாட அனைத்து மாணவர்களும் அவருடன் சேர்ந்து பாடுவார்கள்.

அந்தப் பள்ளியில் 7-ஆம் வகுப்பில் ஒரு சிறுவன் படித்துக் கொண்டிருந்தான். அவன் இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்தவன்.

ஒருநாள் அந்தச் சிறுவனின் மனதில் ஓர் என்ணம் எழுந்தது. "நான் ஏக இறைவனை வணங்குகிறவன். அல்லாஹ்வைத தவிர வேறு யாருக்கும் வணக்கம் சொல்வதில்லை. "பொன்னார் மேனியனே" என்ற பாடலோ சிவபெருமானை வணங்கக் கூடியது. இப்பாடலை நான் பாடுவது என் இஸ்லாமிய கொள்கைக்கு முரணாயிற்றே?" என்று அந்தச் சிறுவன் சிந்தித்தான்.

பள்ளியில் நிறைய முஸ்லிம் சிறுவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை அழைத்தான். தனது கருத்தை அவர்களுடன் பகிர்ந்துக் கொண்டான். "நாம் அல்லாஹ்வைப் பாடினால் என்ன?" என்று கேட்டான்.

மற்ற மாணவர்களும் இதற்கு ஆதரவு அளித்தார்கள். இதே கருத்தை ஒரு தாளில் எழுதி மாணவர்கள் கையெழுத்திட்டார்கள். அதை தலைமை ஆசிரியர் கையில் கொடுக்கும்படி இரு மாணவர்களை அனுப்பினார்கள்.

அவர்களும் கொண்டுப்போய் கடிதத்தை தலைமை ஆசிரியரிடம் தந்தார்கள். அவர் படித்துப் பார்த்தார். "இது யார் எழுதிய கடிதம்?" என்று கேட்டார். கடிதம் எழுதிய பையனின் பெயரை மாணவர்கள் தெரிவித்தார்கள்.

"கூப்பிடு அவனை" என்றார் தலைமை ஆசிரியர். உடனே அச்சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டு தலைமை ஆசிரியர் முன் நிறுத்தப் பட்டான்.

பையன் பயத்துடன் படபடப்போடு நின்றிருந்தான். "உனது உணர்ச்சியை பாராட்டுகிறேன்" என்று ஆசிரியர் அவனை தட்டிக் கொடுத்தார். "முஸ்லிம் மாணவர்கள் தனியே பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள்" என்று அப்போதே அனுமதியும் அளித்தார். "ஆனால் யார் பாடுவது?" என்று வினவினார்.

"நான் பாடுகிறேன்" என்று சிறுவன் தைரியமாகச் சொன்னான். ஒரு பாட்டையும் பாடிக் காட்டினான்.

வேளை உதவி தாளை தருவீர்
வேந்தர் யா முகம்மதே
நாளை மஹ்ஷர் மூலை உருகும்
நாளில் உதவும் நாயகா"

என்பது அந்தப் பாட்டு. நாகூர் வண்ணக் களஞ்சியப் புலவர் என்று சொல்லப்படும் புலவர் அப்துல் ரசீது எழுதிய பாடல்.

வெண்கல மணி போல "கணீர்" என்று ஒலித்த அந்தப் பாடல் தலைமை ஆசிரியரை மிகவும் கவர்ந்து விட்டது. "பலே! பலே! அருமையாக பாடிகிறாய்" என்று தட்டிக் கொடுத்தார். "நாளை முதல் முஸ்லிம் மாணவர்கள் தனியாகக் கூடி, பிரார்த்தனை செய்து, இந்தப் பாட்டை பாடுங்கள்" என்று அனுமதியும் தந்தார்.

அன்று முதல் பள்ளியில் நாள்தோறும் காலையில் முஸ்லிம் மாணவர்கள் தனியாகக் கூடினார்கள். அந்த மாணவன் இந்தப் பாடலை பாட, பிரார்த்தனை நடத்தினார்கள்.

அந்த மாணவன்தான் - நாகூர் ஹனீபா!

அப்போது அவர் 11 வயதுச் சிறுவன்.

எட்டுக்கட்டையில் எடுப்பாகப் பாடக்கூடிய இனிய குரலை இறைவன் அவருக்கு கொடுத்திருந்தான். அவரும் யார் பாடச் சொன்னாலும் கொஞ்சமும் தயக்கமின்றி பாடி அவர்களின் நெஞ்சகம் இனிக்க வைத்தார்.


- அ.மா.சாமி
தொடர்புடைய சுட்டிகள் :

Read more...

இறைவனின் வீடுஅன்றொரு நாள்
அகஸ்மாத்தாகப்
போக நேரிட்டது
இறைவனின் வீட்டுக்கு.
சப்தங்கள் ஏதுமின்றி
சுத்தமாக இருந்தது வீடு.
அரண்மணை
தரமுடியாத அழகும்
குடிசையில் இல்லாத
குணமும்
இருந்தது அந்த வீட்டுக்கு.
அறைகளுமில்லை திரைகளுமில்லை
கதவுகளுமில்லை சுவர்களுமில்லை
அற்புதமான அந்த வீட்டில்.
மூடிய எதையுமே
தேடியும் கிடைக்கவில்லை அங்கு.
எப்போதென்று தெரியவில்லை
எனினும்
ஏற்கனவே இந்த வீட்டுக்கு
வந்திருக்கிறேன்
என்றுதான் தோன்றியது.

வந்தவீடுதான் என்றாலும்
சொந்தவீடுபோல் இருந்தது
புகுந்த வீடுதான் என்றாலும்
பிறந்த வீடுபோல் இருந்தது.
யார் வீட்டுக்கோ
வந்ததுபோல் இருந்தது
என் வீட்டுக்குத் திரும்பியபோது.
வெகுதொலைவில்
இருப்பதாக நினைத்து
வாணாளை வீணடித்தது
நான்தான்.

அன்றுதான் தெரிந்து கொண்டேன்
என் வீட்டுக்கு அருகில்தான்
இறைவனின் இல்லம்
இருந்ததென்று.
அண்மையை தொலைவாகவும்
தொலைவை அண்மையாகவும்
எண்ணி எண்ணி நான்
இழந்தது எவ்வளவோ.
இனிமேலும் இழக்க மாட்டேன்
என் இறைவனின் வீட்டை.
ஏனெனில் நான்
எங்கே போனாலும்
என்னோடே வருகிறது
வினோதமான அவன் வீடு.
-- நாகூர் ரூமி

Read more...

இறைமாட்சி


மாட்சிமை பொருந்திய இறைவனின் சிறப்பினை யாவும் எடுத்து வைத்தல் இயலாத காரியம். மரங்கள் யாவையும் எழுதுகோலாக்கி, கடல் நீரை மையாக்கி, பூமியைத் தாளாக்கி எழுதினாலும் இறைவனின் பெருமையை எழுதிட முடியாது.

இறை நம்பிக்கையுடைய அத்தனைப் பேரும் பாராட்டக் கூடிய புலவர் ஆபிதீனின் வரிகளைப் பாருங்கள் :


இல்லா திருந்து எங்கும்
இயங்கா தியங்கி வாயால்
சொல்லா தமைந்து சொல்லிச்
செய்யா துவந்து செய்து
எல்லா முனைந்து ஆய்ந்து
எண்ணும் மனத்தை ஈந்த
வல்லா னுனை விளங்க
வன்மை எவர்க்கும் போதா !

தாங்காஓர் தூணு மின்றி
தரணிமுன் வான மைத்தாய்
ஓங்கலை கடல் படைத்தாய்
ஒருவித அணையு மில்லை
தூங்கிநற் பயனே தூவ
தந்தனை இரவை நித்தம்
பாங்கமை உனது சிறப்பு
பகருதல் எளிதே யாமோ?

- புலவர் ஆபிதீன்

Read more...

Saturday 29 March, 2008

உருளைகள்
தவசு மணி
ருத்திராட்சம்
ஜப மணி
ஜப மாலை
மிஸ்பாஹ்
தஸ்பீஹ்
ப்ரேயர் பீட்ஸ்
ரோசரி

பெயர்கள் வெவ்வேறு
நோக்கம் ஒன்று

உருளைகள்
கனத்தை இலகுவாக்கி
சுலபமாய்ஓட வைக்கிறதாம்
இது நியூட்டன் விதி

இந்த உருளைகள்
மனிதனை
இறைவனின்பால்
விரைவாய்
உருட்ட வைக்கிறது

முன்னது நியூட்டன் விதி
பின்னது ஆன்மீகத் துதி

- அப்துல் கையூம்

Read more...

ஆட்டம்விரலை ..
நீட்டிக்கிட்டு தொழுவனுமா ?
நீட்டாமலே தொழுவனுமா ?
ஆட்டிக்கிட்டு தொழுவனுமா ?
ஆட்டாமலே தொழுவனுமா ?
ஆட்டம் … ..
முடிஞ்சுபோகும் முன்னாலே
முதலில் சொல்லுங்க
அப்புறம் ..
ஆட்டவே முடியாதபோது
பெரிய தொல்லைங்க.
கேட்டாலும் கேட்டீக ..
கேள்விகளை போட்டீக ..
வீட்டையுமே ரெண்டாக்கி
நாட்டையுமே ரெண்டாக்கி
போட்டியாக எங்களையும்
புறப்படத்தான் வச்சீக ..
இறப்பு ..

எப்ப வரும் ?
எங்கே வரும் ?
ஒண்ணும் தெரியலே !
எப்ப உங்க
விவாதம் தீரும் ?
எதுவும் புரியலே !
நமக்கு தொழுகை
நடக்கும் முன்னே
நாம தொழுவனும்
நாயனுக்கு நன்றியினை
நாளும் கூறணும்
தொழுபவனே
தொழ விடுங்க
அதுவே போதும்
அப்புறமா வச்சிக்குங்க
உங்க
விதண்டாவாதம்.
- அப்துல் கையூம்

Read more...

ஆன்மாவின் விபச்சாரம்உலகுக் கெல்லாம்
ஒருவனே தலைவன்
தலைவணக் கம்
அந்தத்
தலைவனுக் கேயென
அறவுரை கூறிய
ஆன்றோர் களையே
அவதாரம் என்பதும்
அவரடி வீழ்வதும்
தலைவனை ஆகழும்
தற்குறித் தனமே

அரும்பிய துருவமீன்
அதனை நோக்கியே
திரும்ப வேண்டிய
திசைகாட் டியின்முள்
மின்மினிக் கெல்லாம்
மேனி திருப்பினால்
கப்பல் எப்படிக்
கரைபோய்ச் சேரும் ?

தலைவன் ஒருவனைத்
தலையால் வணங்குவதே
தலைகற் பாகும்

தலைவனை அன்றி
மற்ற வற்றை
மகேசன் என்றே
தொழுவது கொடிய
தொழுநோய் ஆகும்

மேலும் அது
ஆன்மா செய்யும்
விபச்சாரம் ஆகும்.

- கவிக்கோ அப்துல் ரகுமான்

Read more...

கொடுக்கல்
கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?

நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?

உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும்
கொடுக்கப்பட்டதல்ல

உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது

நீ ஒரு கருவியே

இசையைப்
புல்லாங்குழல்
கொடுப்பதில்லை

இசை வெளிப்படுவதற்கு
அது ஒரு கருவியே

இயற்கையைப் பார்
அது கொடுக்கிறோம் என்று நினைத்துக்
கொடுப்பதில்லை

தேவையுள்ளவன்
அதிலிருந்து
வேண்டியதை
எடுத்துக்கொள்கிறான்

நீயும் இயற்கையின்
ஓர் அங்கம் என்பதை
மறந்துவிடாதே

கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே

உன் வார்த்தையும்
ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்

உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்

ஒரு பூவைப் போல்
சப்தமில்லாமல் கொடு

ஒரு விளக்கைப் போல
பேதமில்லாமல் கொடு

உன்னிடம் உள்ளது
நதியில் உள்ள நீர்போல்
இருக்கட்டும்

தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம்
சம்மதம் கேட்பதில்லை

கொடு
நீ சுத்தமாவாய்
கொடு
நீ சுகப்படுவாய்
கொடு
அது உன் இருத்தலை
நியாப்படுத்தும

- அப்துல் ரகுமான்
(சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து)

Read more...

பூக்கள்இறைவன்
பிரசுரிக்கும்
இணையில்லா
பத்திரிக்கை
இந்த பூக்கள்.

வெல்வெட்
இதழ்கள்;
வண்ண வண்ண எழுத்துக்கள்.

அச்சுப்பிழை
இலக்கணப்பிழை
இல்லாத
அழகிய படைப்பு.
காலை பதிப்புமுண்டு
மாலை பதிப்புமுண்டு
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட
பிரதிகள் இவைகள்
எல்லா மொழியினரும்
புரிந்துக் கொள்ளும்
எளிய மொழிநடை
பரமனின்
பத்திரிகையை
பாமரனும் படிக்கையிலே
பரமசுகம்.
சமயச் சார்பற்ற
சஞ்சிகை இது.
தினசரி
வாராந்தரி
மாதாந்தரி
ஆண்டு மலர்
ஏன் ?

அவனது பிரசுரத்தில்
மாமாங்கத்திற்கு
ஒருமுறை வெளியாகும்
குறிஞ்சி மலரும் உண்டு
ஆபாசமே இல்லாத
ஒரே மஞ்சள் பத்திரிக்கை
இதுவாகத்தானிருக்கும்
மனிதனின் பத்திரிக்கை
படித்தால்தான்ஆனந்தம்
இறைவனின்பத்திரிக்கையை
பார்த்தாலேபரவசம்
சமயக் குறிப்பு
மருத்துவக் குறிப்பு
வீட்டுக் குறிப்பு
அனைத்தும் உண்டு
பொடி வைத்து எழுதிய
புதுக்கவிதையும் உண்டு

ஆம் ..
மகரந்தப் பொடி
வசீகர நடையில்
வசமிழந்துப் போன
வாசக வண்டினங்கள்
வரிவரியாய்
மனனம் செய்வது
ரீங்காரமாய் காதில் விழும்
தாவரவியல்
மாணவர்களின்
குறிப்புதவி ஏடு
இணையத்து மின்னிதழோ
இந்த சூரிய காந்தி ?
கதிரவனைக் கண்டதும்
பக்கங்கள்தானாகவே
திறக்கின்றனவே ?

ஊட்டியில்
ஆண்டுதோறும்
திறந்திருக்கும்
நூலகமொன்றில்
நான் படித்த வாசகம்

“பத்திரிக்கைகளை
புரட்டாதீர்கள்”
- அப்துல் கையூம்
- நன்றி : திண்ணை (29.11.07)

Read more...

முஸல்லா


முஸல்லாவே !
முழுமனதாய் நானுன்னை
மோகிக்கிறேன்.
யார் சொன்னது
நீ வெறும்
தொழுகை விரிப்பென்று?
நீ
சுவனத்திற்கு
சுருக்குவழி காட்டும்
ரத்தினக் கம்பளம் !
நன்மாராயம்
ஈட்டித்தரும்
அட்சயப் பாத்திரம் !

உன்னை விரிக்கையில்
சொர்க்கத்தின் தூரம்
சுருங்கி விடுகிறது !

பூக்கள் ..
இதழ்களை விரிக்கையில்
பூரிக்கிறது வண்டினம் !
கதிரவன் ..
காலைப்பொழுதில்
இளங்கீற்றை விரிக்கையில்
களிப்படைகிறது பறவையினம் !
உன்னைத்
தரையில் விரிக்கையில்
என் ஆன்மாவன்றோ
அடைகிறது ஆனந்தம் !
உன் மேல் படும் பார்வை - அது
தீர்க்கமான பார்வை
திடமான பார்வை
திசைமாறா பார்வை
திகட்டாத பார்வை
அதன் ரகசியம்
எனக்குப் புரியும்.
கண்ணியமிக்க
கஃபாவை மட்டுமே
நீ நோக்குவதால்தானே ..?

நீ
என்னைச் சுமந்து
என் பாவச்சுமைகளை
இறக்கி வைக்கிறாய்
தங்கத்தின்
தரத்தை மாற்றும்
தட்டானைப் போல
நீ
என்உள்ளத்தை
உன்னதமாய்
உருமாற்றி விடுகிறாய் !

உன் தூண்டுதலினால்
நன்மைகளே
எனக்குவருவாய் !
அன்றைய தினம்
நீயும் எனக்கு
சாட்சி கூற
வருவாயாமே ..?

வருவாயா?
வருவாய்.
- அப்துல் கையூம்

Read more...

பாங்கு சப்தம்விசாலமற்ற மண்ணறையே
விலாசங்களாக மாற
மக்கிப்போன ஆடைகளினூடே
மரத்துப்போன என் தேகம்.
புழுக்களின் பிரவேசத்தில்
புழுக்கங்களின் பிரதேசத்தில்
புற்றாகிப்போன வெற்றுடல்.
ஊர்வனங்களின் ஊர்வலத்தில்
ஊர்வலமாய் வந்த நான்
கூறுகளாகி குதறிய பிண்டமாய்
குரூரத்தின் சிதறலில்
உதிரங்கள் உறைந்து
உதிர்ந்தொழுகும் சடலமாகி
புரண்டுபடுக்கவும் நாதியற்று
அழுகும் நாற்றங்களில்
அசுத்தங்களே சுவாசங்களாக
பூச்சியின் கடைவாயில்
என் சின்னச் சின்ன
சதைத் துண்டுகள்.
நீட்டவும் மடக்கவும்
ஆட்டவே முடியாமல்
அசைவற்றுப் போன
நீர்த்துப்போன காற்றுப்பை.
கறையான்களுக்கிரையாகி
மேனியாவும் தீனியாக
கரைந்துருகும் மாமிசம்.
மயான பூமியில்
மணலரிப்புகளுக்கு ஏனோ
அவகாசமே இல்லாத
தலைபோகும் அவசரங்கள்.
இடைவெளி குறைந்து
எலும்புகள் நொறுங்க
துர்மணத்தின் வீச்சத்தில்
செத்த உடல்மீது
தத்தம்பணிகளை
நித்தம் புரியும்
சிற்றுயிர்கள்
சற்றே தளர்த்த
என்ன காரணமென
அண்ணாந்து நோக்க
ஆகாயத்தில் ஒலித்தது
“அல்லாஹு அக்பர்” என்ற
அழைப்புச் சப்தம்.

- அப்துல் கையூம்

Read more...

இஸ்லாமியக் கவிதைகள்

பிரமை
---------

இனிக்கிறது
நேற்றைய நினைவுகளும்
நாளைய கனவுகளும்.

இன்று
எப்போதும்போல
கசப்பாகவே...

ஒருவேளை
நாளை இன்றாகி
கசக்கும்போது
இன்று நேற்றாகி
இனிக்குமோ?

- கவிஞர் Z. ஜபருல்லா

Read more...

இஸ்லாமியக் கவிதைகள்

மாறுதல்
-----------

நரக நெருப்பு
பாவிகளை
சுத்திகரிக்கிறது...!

சொர்க்கச் சுகமோ
மெய்யடியார்களை
மறுபடியும்
'பழைய' ஆதமாக
ஆக்கிவிடுகிறது...

- கவிஞர் Z. ஜபருல்லா

Read more...

இஸ்லாமியக் கவிதைகள்இறைவா
என் 'இபாதத்' இலைகள்
சருகாகி வீழ்ந்தாலும்
கிடப்பதென்னவோ உன்
ஏகத்துவ விருட்சத்தின்
காலடியில்தான்

இறைவா
உன்னோடு
அரபு மொழியில் பேசுவதைவிட
அழுகை மொழியில்
பேசும்போதுதான்
உன் அண்மை தெரிகிறது

இறைவா
தொழும்போதுகூட நான்
தூரமாகிறேன்
உன்னை
நினைக்கும்போதெல்லாம்
நெருக்கமாகிறேன்

இறைவா
வானம் வரைகூட
என் எண்ணங்கள்
வியாபிக்க முடிகிறது
இந்த
வார்த்தைத் தடைகள்
என்னை
தரையிலேயே நிறுத்திவிடுகின்றனவே!

இறைவா
உன் அருள் பெட்டகத்துக்கு
பூட்டுக்களே இல்லையெனும்போது
இவர்கள் மட்டும் ஏன்
வெறும் வார்த்தைச் சாவிகளை
பிரார்த்தனை வளையங்களில்
கோர்த்துக்கொண்டு அலைகிறார்கள்?

இறைவா
உண்டுவிட்டு உனக்கு
நன்றி சொல்வதைவிட
பசித்திருந்தும்
உன்னளவில்
பொறுமை கொள்ளும்போதுதான்
என் ஆன்மா
ஆனந்தமடைகிறது

இறைவா
உன்
மகத்துவமிக்க மன்னிப்பால்
மறுபடி மறுபடி
எங்களை
மனிதனாக்குகிறாய்
நாங்களோ
எங்கள் செயல்களால்
மறுபடி மறுபடி
ஷைத்தானாகிறோம்
மறுபடியும் எங்களை
மன்னித்துவிடு நாயனே

இறைவா
தொழுகையில்
உன்னைத் தொலைத்தோம்
வாழ்க்கையில்
எம்மைத் தொலைத்தோம்
'கலிமா'வையும் நாங்கள்
களவு கொடுக்குமுன்
கரையேற்றிவிடு நாயனே

இறைவா
நீ அனுப்பிய
வேத வார்த்தைகளை
உன் தூதர்
வாழ்க்கையாக்கினார்
இவர்களோ
அவைகளை
மறுபடியும்
வார்த்தைகளாக்கிவிட்டார்கள்

இறைவா
நீ
சேதாரமில்லாமல்
பாதுகாக்கும்
திருக்குர்ஆனை
இவர்கள்
ஆதாரத்துக்கு மட்டுமே
அணுகுகிறார்கள்

இறைவா
நீ
உன் தூதரின்
மனதில் இறக்கி வைத்த
திருவசனங்களை
இவர்கள்
மூளைக்குக் கடத்திவிட்டார்கள்
அதனால்
நம்பிக்கை விழுந்தது
சந்தேகம் எழுந்தது

இறைவா
நீ
எழுத்தில் அனுப்பாத
திருமறையை
இவர்கள்
எண்களுக்குள்
சிறைவைத்து விட்டார்கள்

இறைவா
நீ
தர்க்கத்தை
தவிர்க்கச் சொன்னாய்
ஒற்றுமையை
வளர்க்கச் சொன்னாய்
இவர்கள்
தர்க்கித்தே
பிரிந்து போகிறார்கள்

இறைவா
நீ
மறுமை நாளின்
நீதிபதி என்றாய்
இவர்கள்
நீ மறுமைக்கு மட்டுமே
என நினைத்து
இம்மையின் நீதிபதிகளாக
தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்

இறைவா
கரியை வைரமாக்கும்
காரியக்காரனே!
இங்கே
உன் வஹியைச் சுமந்த
வைரங்களெல்லாம்
பணத்தீயில்
கரியாகிக் கொண்டிருக்கின்றனவே
கொஞ்சம் கவனிப்பாயா?

இறைவா
இந்த
'தவ்ஹீது'க் குயில்களெல்லாம்
ஏகத்துவ கானத்தை
எங்கே தொலைத்தன?

இறைவா
'ஒதுவீராக'
எனப்பணித்தாய்
இவர்கள்
ஒலிப்பேழைகளாக்கி
விற்றுக் கொண்டிருக்கிறார்கள்

இறைவா
அடிக்கடி
சிந்திக்கச் சொன்னாய்
இவர்கள்
குழு அமைத்து
நிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்

இறைவா
இவர்களுக்கு
அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய
ஏதாவது செய்யேன்

- கவிஞர் Z. ஜபருல்லா

Read more...

இஸ்லாமியக் கவிதைகள்பாத்திரத்தை ஏனம் என்போம்
பழையதுவை நீர்ச்சோ றென்போம்

ஆத்திரமாய் மொழி குழம்பை
அழகாக ஆணம் என்போம்

சொத்தையுரை பிறர் சொல்லும்
சாதத்தை சோறு என்போம்

எத்தனையோ தமிழ் முஸ்லிம்
எங்களுயிர்த் தமிழ் வழக்கே!


- நாகூர் புலவர் ஆபிதீன்

Read more...

இஸ்லாமியக் கவிதைகள்
இறைவா!

இரவு ஒரு கனவு கண்டேன்
ஹஜ்ஜூக்குப் போவதாக
ஷைத்தானுக்கு கல்லெறிந்தேன்
திடீரேன ஒரு உருவம் தெரிந்தது

‘நான்தான் ஷைத்தான்…
என்னைக் கல்லெடுத்து அடிப்பதற்காக
இவ்வளவு தூரம் வரவேண்டுமா?

உன் மேலேயே நீ
கல்லை எறிந்து கொள்ளலாமே’ என்றது

இறைவா !
என்னை என் ஷைத்தானிடமிருந்து
காப்பாற்று!’

- கவிஞர் Z. ஜபருல்லா

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP