Showing posts with label கவிக்கோ கவிதைகள். Show all posts
Showing posts with label கவிக்கோ கவிதைகள். Show all posts

Tuesday, 6 October 2009

தாயிப் நகரில் தாஹா நபிகள்




நபிகள் பெருமான் -
இல்லாமல் வாடிய
ஏழை உலகம்,
கேட்காமலேயே
கிடைத்த அருட்கொடை !
தட்டாமலேயே
திறந்த கதவு !
தேடாமலேயே
தெரிந்த மூலிகை !

இளமையில் பெற்றோரை
இழந்த இவ்வனாதைதான்
உலகுக்கே தாயாகி
ஊட்டி வளர்த்தவர் !

படிக்கத் தெரியாத – இந்தப்
பாமர நபியிடம்தான்
பள்ளிக் கூடங்களும்
பாடம் பயின்றன
இல்லை ..
பல்கலைக் கழகங்களே
பாடம் பயின்றன !

கந்தல் அணிந்த - இந்தக்
கருணைநபி கையால்தான்
அம்மண உலகம்
ஆடையைப் பெற்றது !

பாலையில் முளைத்த - இந்த
பசுமர நிழலில்தான்
வெயிலும்கூட
இளைப்பாற வந்தது !

இந்த ஏழையை
ஈன்ற பின்னரே
கிடக்காத புதையல்
கிடைத்தது போன்று
இந்த உலகம்
இறுமாப் படைந்தது !

மண்ணில் – இந்த
மணிவிளக்கைக்
கண்டபின்தான்
விண்ணும்தன் சுடர்களுக்காய்
வெட்கம் கொண்டது !

வல்லூறுகளும் – இவர்
வலைக்குள் குடிபுகுந்து
வெள்ளைப் புறாக்களாய்
விண்ணெங்கும் பறந்தன !

உயர்மறை மகுடி – இவர்
ஊதியதகைக் கேட்டவுடன்
நாகத்தின் பற்களிலும்
நல்லமுதம் ஊறியது !

தனித்தனி சாதி
அறைகளில் கிடந்த
மனித எழுத்துக்களை
ஒரே வாக்கியமாக
அச்சுக் கோர்த்து
சகோதரத்துவ
சமுதாயம் கண்டவர் !

பாட்டால் புகழைப்
பலர் பெறுவர் – ஆனால்
பரமனின் நபியைப்
பாடுவதால் நமது
பாட்டுக்கல்லவா
பெரும்புகழ் கிடைக்கும்

அன்று – அந்தத்
தாயிப் நகரில்
தாஹா நபிகள் !

தாயிப் வாசிகளே !
விந்தை மனிதர் நீர்!
கல்லின் மீதுதான்
பூவைத் தூவுவீர்

ஆனால் அன்று
(பூமான் நபியெனும்)
பூவின் மீதல்லவா
கல்லைச் சொரிந்தீர் !

வெல்வதாக நினைத்தீர் !
ஆனால் – தோற்றவர் நீங்களே !
நீங்கள் வணங்கும்
கற்களை அல்லவா
கருணைநபி காலடியில்
மண்டியிட வைத்தீர் !

உங்கள் கற்கள்
ஏற்படுத்தியவை காயங்கள் அல்ல !
பொறுமைக்குக் கிடைத்த
இரத்தினப் பதக்கங்கள் !
இறை சோதனையின்
குங்கும முத்தங்கள் !

பொய்மையை எதிர்த்த
வாய்மைத் தூதருக்கு
ரணங்கள் தானே
ஆபரணங்கள் !

அதோ பாருங்கள் !
நீங்கள் எறிந்த கற்கள்
பச்சை ரத்தம்
படிந்து கிடப்பதை !
காயங்கள் செய்த
பிரச்சாரத்திற்குரிய
பெரிய வெற்றி !
அவை கூட
மதம் மாறி விட்டன !

தாயிப் வாசிகளே !
கனிமரம் என்பதால்
கல்லெறிந்தீரோ?
கல்லடி பட்டால்
கனி மட்டுமா உதிரும்?
காய்கூட உதிருமே !

ஆனால்
கல்லடிக்குக்
கனிமட்டும் உதிர்ந்த
கருணை மரத்தை
வேறு எங்கேனும்
கண்டவருண்டோ?

எங்கள் பெருமான்
காயம்பட்டதோ
அன்றொருநாள் !
ஆனால் இரத்தமோ
இன்றுமல்லவா வழிகிறது
எங்களின்
எழுதுகோல் வழியே !


[1978, நவம்பர் 14-ஆம் நாள் காயல்பட்டினத்தில் நிகழ்ந்த அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டில் கவிக்கோ தலைமையில் நடந்த இஸ்லாமியக் கவியரங்கில் அவர் பாடிய தலைமைக் கவிதையின் ஒரு பகுதி]



கவிக்கோவைப் பற்றி கலைஞர்

“பாரதிக்கு தாசன்
பாரதி தாசனென்றால் – அந்தத்
தாசர்க்குத் தாசர் இவர்
தமிழ்க் கவிதை பாடுவதில்
குடமிட்ட தீபமிவர் – இனிமேல்
குன்றிலிட்ட விளக்காவார் !
புடமிட்ட தங்கமிவர் – இனிமேல்
புகழ் மீட்டும் வீணையிவர் !”

மு. கருணாநிதி

Read more...

Saturday, 29 March 2008

ஆன்மாவின் விபச்சாரம்



உலகுக் கெல்லாம்
ஒருவனே தலைவன்
தலைவணக் கம்
அந்தத்
தலைவனுக் கேயென
அறவுரை கூறிய
ஆன்றோர் களையே
அவதாரம் என்பதும்
அவரடி வீழ்வதும்
தலைவனை ஆகழும்
தற்குறித் தனமே

அரும்பிய துருவமீன்
அதனை நோக்கியே
திரும்ப வேண்டிய
திசைகாட் டியின்முள்
மின்மினிக் கெல்லாம்
மேனி திருப்பினால்
கப்பல் எப்படிக்
கரைபோய்ச் சேரும் ?

தலைவன் ஒருவனைத்
தலையால் வணங்குவதே
தலைகற் பாகும்

தலைவனை அன்றி
மற்ற வற்றை
மகேசன் என்றே
தொழுவது கொடிய
தொழுநோய் ஆகும்

மேலும் அது
ஆன்மா செய்யும்
விபச்சாரம் ஆகும்.

- கவிக்கோ அப்துல் ரகுமான்

Read more...

கொடுக்கல்




கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?

நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?

உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும்
கொடுக்கப்பட்டதல்ல

உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது

நீ ஒரு கருவியே

இசையைப்
புல்லாங்குழல்
கொடுப்பதில்லை

இசை வெளிப்படுவதற்கு
அது ஒரு கருவியே

இயற்கையைப் பார்
அது கொடுக்கிறோம் என்று நினைத்துக்
கொடுப்பதில்லை

தேவையுள்ளவன்
அதிலிருந்து
வேண்டியதை
எடுத்துக்கொள்கிறான்

நீயும் இயற்கையின்
ஓர் அங்கம் என்பதை
மறந்துவிடாதே

கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே

உன் வார்த்தையும்
ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்

உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்

ஒரு பூவைப் போல்
சப்தமில்லாமல் கொடு

ஒரு விளக்கைப் போல
பேதமில்லாமல் கொடு

உன்னிடம் உள்ளது
நதியில் உள்ள நீர்போல்
இருக்கட்டும்

தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம்
சம்மதம் கேட்பதில்லை

கொடு
நீ சுத்தமாவாய்
கொடு
நீ சுகப்படுவாய்
கொடு
அது உன் இருத்தலை
நியாப்படுத்தும

- அப்துல் ரகுமான்
(சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து)

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP