Friday 24 April, 2009

நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம்

நன்றி : திண்ணை
ஏப்ரல் 23, 2009
- அப்துல் கையூம்

சென்ற வாரம் "நாகூர் - ஒரு வேடிக்கை உலகம்" என்ற எனது கட்டுரையை ‘திண்ணை’யில் படித்துவிட்டு நாகூர் ஹனிபாவைப் பற்றி ஒரு வார்த்தையும் எழுதவில்லையே என்று குறைபட்டுக் கொண்டார் நண்பர் வேல். “அவர் எப்போது வேடிக்கை ஆனார்?” என்று கேட்க வேண்டும் போல் தோன்றியது. அவர் - ஒரு சரித்திரம், ஆகையால் 'சரித்திரம்' 'வேடிக்கை'யில் இடம் பெறவில்லை என்று கூறி சமாளிஃபிகேஷன் செய்தேன்.

‘வானளாவிய புகழைக் கொண்ட இந்த வாழும் சரித்திரத்தைக் குறித்து நாம் இதுவரை எதுவும் எழுதாமல் இருக்கிறோமே’ என்று சீத்தலைச் சாத்தனார் பாணியில் பால்பாயிண்ட் பேனாவினால் லேசாக உச்சந்தலையில் குத்திக் கொண்டேன்.

வெள்ளி நரை, வெண்கலக் குரல், வேகமான நடை, விவேகமான பேச்சு, வீறுகொண்ட மிடுக்கு இவற்றின் மொத்த உருவம்தான் இசைமுரசு E.M.ஹனீபா. “கம்பீரத்திற்கு அர்த்தம் யாது?” என யாராவது கேட்டால், பேசாமல் இவரது போட்டோவைக் காட்டி ‘அதுதான் இது’, ‘இதுதான் அது’ என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம்.

நாகூரில் ஹனீபா என்ற பெயரில் இரண்டு பாடகர்கள் இருந்ததால் மற்றவருக்கு ‘பித்தளை ஹனிபா’வென்று பெயர் வைத்து விட்டார்கள் இந்த வேடிக்கை மனிதர்கள். ஒருத்தர் “ஈயம்” என்றால் மற்றவர் “பித்தளை”தானே?

அத்தாவுக்கும் (அப்படித்தான் அவரை நான் அழைப்பேன்) எனக்கும் உள்ள நெருக்கம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அவரும், என் தந்தையும், குடும்ப நண்பர்கள். 1966-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவரது இல்லத் திறப்பு விழாவுக்கு வந்தபோது, ஒன்பது வயது சிறுவனாக இருந்த நான், நாகை அந்திக்கடையில் விற்ற "கருப்பு-சிவப்பு" நிற பெர்லூன் பனியனை அணிந்துக் கொண்டு பந்தாவாக நின்றேன். வீட்டின் மையத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அண்ணாவை உட்கார வைத்து எல்லோரும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். மொட்டை மாடியில் தலைவாழை இலைபோட்டு தடபுடலாக விருந்து ஏற்பாடாகி இருந்தது. கட்சிக்கொடி நிறத்தில் பனியன் அணிந்து அவர் கவனத்தை ஈர்த்த என்னைக் கண்டு "யார் இந்தச் சிறுவன்?" என்று அண்ணா வினவ "இச்சிறுவனின் குடும்பமே காங்கிரஸ் குடும்பம். தன் தந்தையின் பேச்சையும் மீறி உங்களைப் பார்ப்பதற்காக இவன் இந்த பனியனை போட்டுகொண்டு ஓடோடி வந்திருக்கிறான்" என்று அத்தா என்னை அறிமுகம் செய்ய, அண்ணா என்னை அன்புடன் அரவணைத்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.

ஐந்தாம் வகுப்பிலிருந்தே, அவர் மகன் நவுஷாத் படித்த அதே சென்னை பள்ளியில் என்னையும் சேர்க்கச் சொல்லி, என் தந்தையாரிடம் வற்புறுத்தி, எனது நலனில் அக்கறை செலுத்தியவர். அந்த சரித்திர நாயகனுடன் ஒன்றாகச் சேர்ந்து காரில் சென்னை செல்கையில், சிற்றுண்டி அருந்த உணவகத்துக்குள் அடியெடுத்து வைக்க, அவரை அடையாளம் கண்டுகொண்டு "அதோ பார் நாகூர் ஹனீபா" என்று பொதுமக்கள் அவரை வியப்போடு பார்ப்பார்கள். உடன் செல்லும் எனக்கு பெருமிதம் தாங்காது.

ஊரினால் சிலருக்குப் பெருமை. சிலரால் ஊருக்குப் பெருமை. இதில் இசைமுரசு இரண்டாவது ரகம். ஒருமுறை இந்தியாவிலிருந்து அரசியல் பிரமுகர் ஒருவர் ரஷ்ய பயணம் சென்றபோது, “நீங்கள் ராஜ்கபூர் நாட்டிலிருந்தா வந்திருக்கிறீர்கள்?” என்று அங்குள்ளவர்கள் ஆச்சரியம் மேலிடக் கேட்டார்களாம். தாஜ்மகாலும், ராஜ்கபூரும்தான் அவர்களுக்கு இந்தியாவாகத் தெரிந்தது.

நான் பஹ்ரைன் நாட்டுக்கு வந்த புதிதில் மலபாரி நண்பரொருவர் “சாருக்கு ஊரு எவிடே” என்று சோதித்தார். நான் “நாகூர்” என்றதும், “நாகூர் ஹனீபா அறியாமோ?” “நிங்ஙள் அவரை கண்டுட்டுண்டோ” என்று என்மீது அடுக்கடுக்காய் கேள்விக் கணைகளைத் தொடுத்தார். நாகூர் ஹனிபாவை வைத்துதான் அந்த பிரகஸ்பதி நாகூர்பதியையே அறிந்து வைத்திருந்தார்.

வைகைப்புயல் வடிவேலுவை துபாய் நிகழ்ச்சிக்கு காமெடி பண்ண அழைத்தார்கள். அவரோ “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற அனைத்து மதத்தினருக்கும் பொருந்துகின்ற அற்புதமான பாட்டை தன் கட்டைக்குரலில் பாடி, பக்திக்கடலில் அனைவரையும் மூழ்கடித்தார். ஆராய்ந்ததில் அவரும் ஹனிபாவின் ஆத்மார்த்த ரசிகராம்.

‘அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்’ என்று ஒரு வரி அப்பாடலில் வரும். “பிறகு எப்படி அது எல்லா மதத்தினருக்கும் பொருந்துகின்ற பாடல்?” என்ற கேள்வி எழலாம். “அல்லாஹ்” என்பதற்கு முஸ்லீம் கடவுள் என்று பொருள் கொள்ளலாகாது. அது GOD என்பதற்கான அரபுச் சொல். அவ்வளவே.

நாகூர் ஹனிபாவை ‘ஆஹா! ஓஹோ!’வென புகழ்பவர்களைப் போலவே, அவரை நக்கல், நையாண்டி செய்பவர்கள் உள்ளூரிலேயே உண்டு. பழுத்த கனிதானே கல்லடி படும்?

ஹனீபா முறையான சங்கீதம் படிக்காமலேயே நிறைவான புகழை அடைந்தார் என்பது கலப்படமில்லாத உண்மை. வித்வான் எஸ்.எம்.ஏ.காதர், பாகவதர் இசைமணி யூசுப் போன்ற உள்ளுர்க் கலைஞர்களுக்கு இணையாக ஆழமான சங்கீத ஞானம் இவருக்கு இல்லை என்ற விவாதத்தை மறுத்துப் பேச இயலாமல் திணறிப் போயிருக்கிறேன். இசைத்திறன் இவருக்கு இறைவன் கொடுத்த வரம்.

“மணி ஒலித்தால் நாதம் கிளம்பும். ஆனால் முரசு ஒலித்தால் சப்தம்தான் வரும். எனவேதான் ‘இசைமணி’ என்று பெயர் வைக்காமல் ‘இசைமுரசு’ என்று பொருத்தமாக பெயர் வைத்திருக்கிறார்கள்” என்று உள்ளுர்க் கவிஞர் ஒருவர் கிண்டல் செய்வதைக் காதுபட கேட்டிருக்கிறேன்.

அழுத்தம் திருத்தமாக உச்சரித்து ஆணித்தரமாக மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியினால் இவர் மெல்லினத்தைக்கூட வல்லினமாக்கி உச்சரிக்கும் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது என்பார்கள்.

"அருள் வடிவானவர்" "எங்கள் நபிநாதர்" என்று முடியும் வரிகளில் ‘ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று இப்படிப் போட்டு வறுத்து எடுக்கிறாரே என்று இவரை குறை சொல்பவர்கள், இப்பாடலை எழுதிய நபரை தேடிப்பிடித்து கலாய்ப்பதுதான் உசிதம்.

இணைத்து பாட வேண்டிய வார்த்தைகளை சிலசமயம் பிரித்துப் பாடி, அர்த்தங்கள் மாறி, விமர்சனங்களுக்கு உள்ளான இவரது பாடல்களும் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை. இவரைப் போன்று “ஹ” “ஷ” போன்ற அட்சரங்களை தெள்ளத் தெளிவாக உச்சரிக்கும் பாடகர்கள் யாருமே கிடையாது. “முஹம்மது” “மஹ்மூது” என்ற பெருமானாரின் திருப்பெயரை இவரைப் போன்று அட்சர சுத்தமாக வேறெந்த பாடகரும் அட்டகாசமாக உச்சரித்ததில்லை.

ஹனிபாவின் சில பழைய பாடல்களை தேடிப் பிடித்து அதிலுள்ள குறைகளை அலசி ஆராய்ந்து அவரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுபவர்களும் உண்டு.

“நமனை விரட்ட மருந்தொன்று விற்குது நாகூர் தர்காவிலே” என்று இவர் பாடியதைக் கேட்டு, உயிரை எடுப்பது வானவர் இஸ்ராயீல் என்கிறார்களே, இவரோ எமன் என்கிறாரே என்று மண்டையை போட்டு குழப்பிக் கொள்ளும் முஸ்லீம்கள் உண்டு. நமனை விரட்டுவதற்கு மருந்து இங்கே கிடைக்குதென்றால் ஆஸ்பத்திரிக்கு அலைய வேண்டிய அவசியமென்ன? இங்கேயே வந்து ஒரு கிலோ, இரண்டு கிலோ வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளலாமே? – இப்படி விவாதம் செய்வோர் உண்டு.

“நீர் எங்கே எங்கே எங்கே சாஹே மீரானே – உன்
வாசல்தேடி வந்தேன் நாகூர் மீரானே”

என்று இவர் பாடும்போது நமக்குள் பக்தி பரவசம் ஏனோ மிஸ்ஸிங். ஒரு குத்துப்பாட்டு கேட்கின்ற உணர்வு.

“ஹம் தேரே தேரே தேரே சாஹ்னே வாலே ஹேஹம் காலே ஹோதோ க்யா ஹுவா தில் வாலே ஹே”

என்று இந்தி நடிகர் மஹ்மூது ஹிட்லர் மீசை வைத்துக்கொண்டு கோணங்கியாக ஆடிக் கொண்டே பாடும் அந்த ஒரிஜினல் மூலப்பாட்டுதான் மூளையில் உதிக்கும்.

தொடக்க காலத்தில் சர்ச்சைக்குரிய சப்ஜெக்ட்களை தொட்டுக் கொண்டிருந்தவர் நாளடைவில்

“ஒரு கையில் இறைவேதம், மறு கையில் நபிபோதம்
இருக்கையில் நமக்கென்ன தயக்கம்
கண்களில் ஏனிந்த கலக்கம்”

என்பது போன்ற கருப்பொருளை தேர்வுச் செய்து தனது பாதையை சீர்படுத்திக் கொண்டது அவருக்குள்ளேயே ஏற்பட்ட ஒரு இயற்கையான மனமாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘அந்த நாளிலே மக்கா நகரம் இருந்தது’ எப்படியென்றும், ‘ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்த அரபு நாட்டு தியாக’த்தையும், ‘பாத்திமா வாழ்ந்த முறை’யையும், ‘பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை’யையும், ‘கண்களை குளமாக்கும் கர்பலா’ நிகழ்ச்சியையும் பாமரர்கள் ஏட்டில் படித்து தெரிந்துக் கொண்டதைவிட இவர் வாயிலாக இஸ்லாமிய சரித்திர நிகழ்வுகளை அறிந்து கொண்டவர்கள் ஆயிரமாயிரம்.

“மெளத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா?
மாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமா?”

என்று இவரது பாடல், “தழுவாது எனக்கு மரணபயமே” என்று பாடிய ஆசைக்கவிஞன் கண்ணதாசன், “காலா என் கண்முன் வாடா, உன்னைக் காலால் உதைக்கின்றேன்” என்று பாடிய மீசைக் கவிஞன் போன்ற கேரக்டர் மனிதர்களையும், ‘மரணபயம்’ ஆட்கொண்டு தெளிவு பிறக்க வைத்து விடும்.

“கன்னியரே! அன்னையரே! கொஞ்சம் நில்லுங்கள்” என்று அன்புடன் இவர் அழைக்கையில் கடுக்கண்களை காதில் போட்டுக் கொள்ளும் கன்னியர்கள் இந்த கனிவான அறிவுரையை காதில் போட்டுக் கொள்ள ஆயத்தமாகி விடுவார்கள்.

“காணக் கண் கோடி வேண்டும் கஃபாவை
ஹஜ்ஜூ காட்சிக்கிணை யாகஉலகில் எதுவுமே இல்லை”

என்று இவர் இசைக்கையில் மக்கமா நகரத்து இறையில்லக் காட்சிகள் கண்முன் தத்ரூபமாக காட்சிதரும்.

“நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு
மாறாத ஈமானோடு யாரசூலுல்லாஹ்”

என்று அவர் உருகும்போது கல்லும் கனியாகும்; உள்ளம் பனியாய் இளகிவிடும்.

“ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா?
கானத்தினால் அதை இன்னும் கொஞ்சம் சொல்லவா?”
என்று அவர் ஆரம்பம் செய்கையில் “ஓ! தாரளாமாகச் சொல்லுங்கள். நாங்களும் கேட்கிறோம்” என்று நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் குரலை நாமே உணர முடியும்.

தனக்கு பாட்டெழுதி கொடுத்த புலவர்களுக்கு உரிய மரியாதை அவர் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் என்றால் பாடலுக்கு இசையமைத்துத் தந்த இன்பராஜ் போன்ற இசையமைப்பாளர்களை அவர் வெளிச்சத்துக்கு கொண்டுவரவே இல்லை என்ற குற்றச்சாட்டு வேறொரு புறம் நிலவுவதும் உண்மை.

ஆனால் இந்த 'பிஸ்கோத்து' குறைகள் யாவும் இந்த மனிதனுக்குள்ளே பொதிந்திருக்கும் மனிதநேயப் பண்பு, கொள்கைப் பிடிப்பு, அசாத்தியத் துணிச்சல், இவைகளுக்கும் முன்பு பவுடராகி தூள்தூளாகி விடுகிறது.

இசையால் மயங்க வைக்கும் இந்த லாகிரி வஸ்தாது எத்தனையோ இஸ்லாமிய பாடகர்களுக்கு அழகிய-முன்-மாதிரி. கவ்வாலி பாடலில் ஒரே சங்கதியை பல ‘மாடுலேஷனில்’ ஏற்ற இறக்கத்தில் பாடி "ரிபீட்டு" செய்வதைப் போல, இஸ்லாமிய பாடல்கள் என்றாலே எட்டுக் கட்டையில்தான் பாடவேண்டும் என்ற எழுதப்படாத இலக்கணத்தை ஏற்படுத்தி வைத்தவர் இவர். ஊசி உடைகிற உச்சஸ்தாயிலும் பூசிமொழுகுகிற பூத்த குரல்வளம் இவரது.

இவரை விட ஒரு கட்டை கூடுதலாக பாடி சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் "உலக முஸ்லீம்களே நில்லுங்கள்!" என்ற விவகாரமான பாட்டை வேறொருவர் பாட, நின்றுக் கொண்டிருந்த உலக முஸ்லீம்களையும் பயந்து ஓட வைத்தது கைக்கொட்டிச் சிரிக்க வைத்த கதை.

இவரைப்போலவே ஏழுகட்டை, எட்டுக்கட்டை என்று பாடுவதோடு மட்டும் நிறுத்திக்கொண்டால் பரவாயில்லையே. சாய்வாக அணிந்த ‘Fur’ தொப்பி, உள்ளங்கையை இறுக்கிப் பிடித்து மூக்கு நுனிவரை இழுத்துப்பிடித்தவாறு சைகை செய்வது, காதோரத்தில் கையை குவித்து வைத்துக் கொள்வது இது போன்ற மேனரிஸங்களைக்கூட இவரது ‘டூப்ளிகேட்’கள் விட்டு வைக்காததைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

எல்விஸ் பிரெஸ்லிக்கு அடுத்தப்படியான ‘Look Alike’ ‘எதிரொலி’ ஆசாமிகள் வாய்க்கப் பெற்றது நாகூர் ஹனீபாவாகத்தான் இருக்க முடியும்.

மேடைக் கச்சேரியின்போது, இசைக்குழு ஆசாமிகளின் காதில் இவர் ஏதோ ‘கிசுகிசு’ப்பதை பலர் கவனித்திருக்கக்கூடும். அடுத்த பாடலுக்கான சுதி எத்தனை கட்டை என்ற விவரத்தை காதில் ஓதுகிறாரோ என்று பார்த்தால், “ஒழுங்கா வாசியேண்டா உதவாக்கரை” என்பதைப்போன்ற அர்ச்சனைகளை அனாயசமாக ஆராதித்துக் கொண்டிருப்பார். (‘டோஸ்’களை மிகவும் நாசுக்காகவே இங்கு உளறியிருக்கிறேன்)

ஒருமுறை உணர்ச்சிவசப்பட்டு மேடையின் விளிம்பில் உட்கார்ந்திருந்த நரிபோன்று பிறாண்டும் ஒரு தபேலாக்காரரை லேசாக தள்ளிவிட அவர் தொபுக்கடீரென்று தலைக்குப்புற விழுந்தது ஊள்ளூர் ஜனங்கள் இரசித்த ‘சிச்சுவேஷன் காமெடி’.

“இவரின் இசைக் கச்சேரி
ஒரு யாகம் .. .. ..
மூன்று மணி நேரம் –
மேடையில் சுற்றியுள்ள
வாத்யக் காரர்கள் மட்டுமல்ல .. ..
இவர் சுருதியும்
கீழே இறங்காது”

என்று இவருக்கு புகழாரம் சூட்டுவார் கவிஞர் இசட் ஜபருல்லாஹ்.

"நாகூர் ஹனீபாவைப் போன்ற ஒரு பாடகர் ஐரோப்பாவிலோ , மொராக்கோ போன்ற தேசத்திலோ இருந்திருந்தால் உலகப் புகழ் அடைந்திருப்பார். அப்பேர்ப்பட்ட குரல் வளம் அவருடையது” என்று பாரட்டுப் பத்திரம் வழங்குகிறார் எழுத்தாளர் சாரு நிவேதிதா.

நாகூர் முஸ்லிம் சங்கத்தின் சார்பாக இந்த மாமனிதனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்தனர். போஸ்டர் ஒட்டி, ஒலி பெருக்கியில் அறிவிப்புச் செய்து கூட்டியிருந்த கூட்டத்தை கண்டபோது என் கண்கள் ரத்தக்கண்ணீரை வடித்தது, சிறப்பு பேச்சாளராக மேடை ஏறிய கம்பம் பீர் முகம்மது "இதே விழாவை எனதூரில் கூட்டியிருந்தால் அலைமோதும் கூட்டத்தை திரட்டியிருப்பேன்" என்று தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.

நாகூர் அல்வா பிரசித்திப் பெற்றது. ஆனால் அரசியல் நாகூர் ஹனிபாவுக்கு அக்காலத்திலிருந்தே 'அல்வா' கொடுத்து வந்தது.

1957- ஆம் ஆண்டு தி.மு.க. முதன்முறையாக சட்டசபை தேர்தலில் களமிறங்கியபோது, நாகை தொகுதியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

மீண்டும் 2001- ஆம் ஆண்டில் வாணியம்பாடியில் தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கியபோதும் அந்த ஊர்க்காரர்கள் அவருக்கு அல்வா கொடுத்தார்கள்.

பாட்டு பாடியே ஓட்டுக்களைச் சேகரித்தார் இந்த பைந்தமிழ்ப் பாடகர். பாவம் A right person in a wrong place. கவ்வாலி பாடகர் அதா அலி ஆஜாத் நின்றிருந்தாலாவது ஜெயித்திருப்பாரோ என்னவோ.

“ஹனீஃபா சாஹேப் பத்தி நம்பள்கி ஜனங்களுக்கு அவ்ளோ தூரம் மாலுமாத் இல்லீங்கோ” என்று சொன்னார் அந்த ஊரைச் சேர்ந்த தோல் வியாபாரி என் இனிய நண்பர் அன்வாருல்லா.

கழக இயக்கத்திற்கும் இந்த கருப்புக் குயிலுக்கும் உள்ள தொடர்பு இன்று நேற்று எற்பட்ட ஒன்றா?

“வாடா கருப்பா” என்று இவரை வாஞ்சையுடன் அழைப்பார் திராவிட இயக்கத்து முன்னோடிகளில் ஒருவரான ‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரி.

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு”

என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடலை, இந்த பாசறை மறவனைக் கொண்டு பாடவைத்து இயக்கத்தை வளர்த்தார் அந்த பட்டுக்கோட்டையார்.

தந்தை பெரியார் தான் செல்லுமிடம் யாவும் தமிழுணர்ச்சி பொங்கும் பாடல்களைப் பாட இந்த தன்னிகரில்லா பாடகனைத்தான் தன்னோடு அழைத்துச் செல்வார். “அனிபா அய்யாவுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை” என்பார். இவரது குரல் பெருமைக்குரிய குரல் மட்டுமல்ல. “பெரு-மைக்”குரிய குரலும் கூட என்பது அ.மா.சாமியின் கூற்று.

“தூங்கிக் கிடந்த உனைத் தூக்கி துடைத்தணைத்து
தாங்கித் தரைமேல் இட்டார் – தமிழா
தாத்தாவாம் ஈ.வே.ரா”
என்று ஹனீபா தொண்டைக் கிழிய பாட, தந்தை பெரியாரின் சிந்தைக்கினிய பேச்சுக்கு முந்திக்கொண்டு வருவார்கள் செந்தமிழ்ச் சீலர்கள்.

“ஓடி வந்த இந்திப்பெண்ணே கேள் – நீ
தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!” என்று உரமேற்றி

“ஆறிலும் சாவு நூறிலும் சாவு அஞ்சாமல் ஓடிவா” என்று இவரது உணர்ச்சி பொங்கும் பாடலைக் கேட்டுவிட்டு இந்தி எழுத்துக்களை தாரு பூசி அழிக்க வீறு கொண்டு எழுவார்கள் வீர மறவர்கள்.

“பாடல்களில் சுருதி, லயம், ராகம்தான் இருக்கும் என்பார்கள். இவர் பாடல்களில் இவைகளை மீறி உணர்ச்சி இருக்கிறது. அது இப்போது தமிழர்களுக்கு தேவையாக இருக்கிறது” என்று அறிஞர் அண்ணா புகழ்ந்தார்.

1954- ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர் துயர் துடைக்க அறிஞர் அண்ணாவுடன் சேர்ந்து ஊர் ஊராக துணிமூட்டைகளைச் சுமந்துச் சென்று உடுமலை நாராயணகவி எழுதிய

“செந்தமிழ் நாட்டுக் கைத்தறி நெசவு
சேலைகள் வேட்டிகள் வாங்குவீர்
திராவிட நாட்டின் சேமம் வேண்டி
சிங்கார ஆடைகள் வாங்குவீர்”

என்று பாடி தெருத் தெருவாக கூவி விற்றார் இவர்.

கலைஞர் அரைக்கால் சட்டையணிந்து கழகச் சேவை புரிந்த காலம் முதற்கொண்டு ஹனிபா மேடை ஏறி பாடி வருகிறார். நீதிக்கட்சியின் தலைவரான பன்னீர் செல்வம் லண்டனுக்கு பயணிக்கையில் ஓமான் அருகே விமான விபத்துக்குள்ளாகி உயிர் துறந்தார். 1940-ஆம் ஆண்டு நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் “பறந்தாயோ எங்கள் பன்னீர் செல்வமே!” என்று இவர் நெஞ்சுருக பாடியபோது, மாநாட்டு பந்தலில் அமர்ந்திருந்த அத்தனை பேரும் விம்மி விம்மி அழுதக் காட்சி ஒரு சரித்திர நிகழ்வு.

“அனிபாவின் கம்பீரத் தொண்டையைப் போலவே அவரது கழகத் தொண்டும் சற்றும் மாறவில்லை” என்று கலைஞர் இவருக்கு ‘அக்மார்க்’ முத்திரை வழங்கினார்.

இப்போதுகூட, டாக்டர் கலைஞர் தோளில் ஒரு கையையும், பேராசிரியர் அன்பழகன் தோளில் மற்றொரு கையையும், ஜாலியாக போட்டுக் கொண்டு பேசக்கூடிய லைசன்சு ஹனீபாவுக்கு மட்டுமே உண்டு.

அரசியல் துறையில் ‘அட்ஜஸ்ட்’ பண்ணத் தெரிந்து ‘ஆமாம் சாமி’ போட கற்று வைத்திருந்தால் எப்போதோ இவர் அமைச்சர் ஆகியிருப்பார். ‘தூக்குத்தூக்கி’ கலை அறியாது ‘வணங்காமுடி’யாக இருந்தமையால் ‘சக்கரவர்த்தி திருமகனாக’ இருக்க வேண்டிய இந்த ‘உத்தம புத்திரன்’ ஊர் ஊராக பாட்டுப் பாடிக்கொண்டு ‘நாடோடி மன்னனாகவே’ காலத்தைத் தள்ளிவிட்டார்.

தன் மேன்மையான எழுத்துக்களால் தமிழ்மொழிக்கு மீசை வரைத்த பாரதியைப் போல, கம்பீரமான தன் குரல்வளத்தால் தமிழுக்கு தலைப்பாகை கட்டி அழகு பார்த்தவர் இந்த வெள்ளிநரை வேந்தன்.

ஒருமுறை விழுப்புரத்தில், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள் கலந்துக் கொண்ட முஸ்லீம்லீக் மாநாட்டில், நாகூர் ஹனிபா பாடினார். கூட்டம் முடிந்து ‘கெஸ்ட் ஹவுஸில்’ ஹனிபா அசந்து தூங்கிக் கொண்டிருக்கையில் நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. கதவைத் திறந்தபோது காயிதேமில்லத் நின்றுக் கொண்டிருந்தார். “ஹனிபா சாஹேப் எனக்குத் தூக்கமே வரவில்லை. எனக்காக அந்த பாட்டை பாடுவீங்களா?” என்று நடுநிசியில் சின்னக்குழந்தைபோல் அடம் பிடித்தபோது ஹனிபாவுக்கு உள்ளூர ஒரே ஆனந்தம்.

“மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே!
மாநிலத்தைத் தாங்கிடவோ எங்கள் பெருமானே
!”


என்று உள்ளமுருக பாடினார். “இன்னும் ஒருமுறை பாடுங்களேன் ஹனீபா சாஹேப்” என்று காயிதேமில்லத் மறுபடியும் வேண்டுகோள் விடுக்கிறார்.

“பல்லுடைந்த நேரத்திலும் எங்கள் பெருமானே
பின்வாங்கி ஓடவில்லை எங்கள் பெருமானே
கல்லடிகள் பட்டபோதும் எங்கள் பெருமானே
கயவர்களைச் சபிக்கவில்லை எங்கள் பெருமானே”


என்ற வரிகளை ஹனிபா பாடியபோது காயிதேமில்லத் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து தாரை தாரையாக வழிந்தோடுகிறது. தேம்பித் தேம்பி அழுகிறார். தாயிப் நகரத்து பாதகர்கள் சாந்தநபி மீது புரிந்த கொடுஞ்செயல் காயிதேமில்லத்தின் கண்முன் நிழலாடி அவரை கலங்கடித்திருக்க வேண்டும்.

நபிகள் நாயகத்தின் சகிப்புத்தன்மைக்கும், கருணையுள்ளத்திற்கும் எடுத்துக் காட்டாய்த் திகழ்கிறது தாயிப் நகரத்தில் நடந்த இந்நிகழ்ச்சி !

நாயகத் திருமேனியின் ஏகத்துவ போதனைகளை ஏற்க மறுத்த தாயிப் நகர மக்கள் அவர்கள் மீது கல்மாரி பொழிந்தார்கள். அண்ணலாரின் புண்பட்ட மேனியிலிருந்து செந்நீர் குருதி மண்மீது வழிந்தோடுகிறது.

"தாயிப் நகரத்தின் வீதிகளில் - ஒரு
தங்க நிலவைத் துரத்துகிறார்
அருமை நபியை ஆருயிரை
அணையா விளக்கை வருத்துகிறார்"

என்று இந்தக் காட்சியை மு.மேத்தா கவிநயத்தோடு வருணிப்பார்.

'கவிக்கோ' அப்துர் ரகுமானின் உவமைப் படிமம் வித்தியாசமாக இருக்கும்

"கல்லின் மீது
பூவை எறிபவர்கள்
இப்போது
பூவின் மீது
கல்லை எறிகிறார்கள்"
என்பார்

இதே காட்சியினை தனக்கே உரிய பாணியில் வடிப்பார் இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர்.

"சொன்மாரி பொழிந்ததற்காய்க்
கன்மாரி பெய்துவிட்ட
வன்மனத்தார் திருந்துதற்கு
வழிவகுத்த நாயகமே"
என்று.

அருமை நபிகளுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை ஹனிபாவுக்கு ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியதாலோ என்னவோ “எத்தனை தொல்லைகள், என்னென்ன துன்பங்கள்” என்று தொடங்கும் இன்னொரு பாடலிலும்

“கல்லடி ஏற்று
கடுமொழி கேட்டு
உள்ளம் துடித்து
உதிரத்தை வடித்து”


என்ற வார்த்தைகள் வலம் வரும். “அண்ணல் நபி பொன்முகத்தை கண்கள் தேடுதே!” என்ற பாட்டிலும்

“தாயிப் நகரில் கல்லடிகள்
தந்த தழும்பிலே – இமைகள்
தழுவதற்கும் அழுவதற்கும்
கண்ணீர் பொங்குதே..”


என அந்த சோகத்தை நினைவூட்டுவார். எல்லாவற்றிற்கும் மேலாக

“தாயிப் நகரத்து வீதியிலே - எங்கள்
தாஹா இரசூல் நபி நடக்கையிலே
பாவிகள் செய்த கொடுமையினை - எண்ணிப்
பார்த்தால் நெஞ்சம் பதைக்குதம்மா!”

என்ற பாடலில் அந்த வேதனையான நிகழ்ச்சியை முழுவதுமாகவே படம்பிடித்துக் காட்டியிருப்பார்.

இவரைப்போன்று ஒரு தான்ஸன் தமிழ்நாட்டில் இதுவரை பிறந்ததுமில்லை; இனி பிறக்கப் போவதுமில்லை. ஒவ்வொரு முறை இவர் சுகவீனம் அடையும் போதெல்லாம் “நாகூர் ஹனீபா இறந்து விட்டார்” என்ற புரளியை கிளப்பி நம்மை கலங்கடிக்க வைக்கும் அந்த சோதனையைத்தான் நம்மால் தாங்க முடிவதில்லை.

84 வயதை எட்டியிருக்கும் இந்த மார்க்கண்டேய குரலுக்குச் சொந்தமான இந்த மாமனிதன் இன்னும் பல ஆண்டுகள் நீடுழி வாழ வேண்டும் என்பதுதான் அனைவரும் செய்யும் பிரார்த்தனை.

அருஞ்சொற்பொருள்:

மெளத்து : மரணம்
யா ரசூலுல்லாஹ்! : ஓ இறைவனின் தூதரே!
தாயிப் : சவுதி அரேபியாவிலிருக்கும் ஒரு நகரம்
ஈமான் : இறையச்சம்
திண்ணையில் அப்துல் கையூம்

Read more...

Tuesday 21 April, 2009

மறைமலை அடிகளாரின் இரங்கற்பா




நாகூர் குலாம் காதிர் நாவலர் தன் 74- வது வயதில் 28-01-1908 அன்ற் உயிர் நீத்தபோது அவரது மாணவராக விளங்கிய மறைமலை அடிகள் கையறு நிலையில் கவிதை பாடினார்.

வாடுகின்ற வையத்தின் வகைவிளங்க வசைபடுத்து
பீடுகெழு தமிழ்த் தெய்வ குலாம்காதிர் பெரும்புலவோய்
நீடுவளப் புத்தேளிர் நினைவின் மாசகற்றிவிட
ஓடிமறைந் துற்றாயோ இனியெங்குற் றுணர்வேனோ

Maraimalai Adikal was born on 15 July 1876 at Nagapattinam in Tamil Nadu. He studied Tamil under Ve. Narayanasamy Pillai. He had his schooling in the Wesleyan Christian High School. He enjoyed the friendship of Sundaram Pillai, author of Manonmaniyam. He settled in Madras thanks to the efforts of Sandamarutam Somasundara Nayakar. He joined the Madras Christian College as a Tamil teacher. He founded the Saiva Siddhanta Maha Samajam.

He edited 'Gnanasagaram' in which appeared Kokilambal's letters, and Kumudavalli. He edited the English journal, 'Oriental Mystic Myna.' He was a research scholar proficient in Tamil, Sanskrit and English. He translated Kalidasa's Sakuntalai into Tamil. He advocated purism in Tamil and changed his very name 'Vedachalam' into 'Maraimalai Adikal'. He later renounced family life. Contrary to practice, he began writing a commentary on the Thiruvasagam. His famous research work is Manikkavacakarin varalarum kalamum. He passed away on 15 September 1950.

Read more...

நாகூர் - ஒரு வேடிக்கை உலகம்

நன்றி : திண்ணை
April 16 2009

“வேடிக்கை” என்ற வார்த்தைக்கு நாகூர் அகராதியில் விதவிதமான அர்த்தங்கள் உண்டு. ஒரே வார்த்தையை ஓராயிரம் அர்த்தத்தில் உபயோகிப்பதே ஒரு வேடிக்கைதானே? ஓராயிரம் என்றால் துல்லியமாக ஓராயிரம் என்று கணக்கில் கொள்ளலாகாது. ஓராயிரம் மைனஸ் ஒன்றிரண்டாகவும் இருக்கக்கூடும்.

வீதியிலே கூட்டத்தைக் கூட்டி, மகுடி ஊதி, “பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுகிறேன் பார்” என்று வித்தை காட்டும் காட்சி மட்டுமே வேடிக்கை என்று நாம் நினைத்தால் அது தப்புக் கணக்கு.

‘வேடிக்கை’ என்றால் வினோதம், விசித்திரம், ஆச்சரியம் என்ற அர்த்தமும் உண்டே என்று நீங்கள் வினவலாம். அதையும் தாண்டி எத்தனையோ அர்த்தங்களை எங்களூர் இயல்பாய் கற்பித்திருக்கிறது.

வேடிக்கைச் செய்திகள், வேடிக்கை நிகழ்வுகள், வேடிக்கைப் பழக்கங்கள், வேடிக்கை மனிதர்கள் நிறைந்த வேடிக்கை உலகம் அது. நகைச்சுவை உணர்வு நாகூர் மக்களின் நரம்பினில் ஓடுவது. புன்முறுவலை உதடுகளில் அழியாத லிப்ஸ்டிக்காய் பூசிக் கொண்டவர்கள் இவர்கள். புன்னகையை பொன்நகையாய் கவசகுண்டலமாக்கிக் கொண்டவர்கள்.

வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

என்று மகாகவி சொல்லும் வேடிக்கை மனிதர்கள் வேறு, இந்த வேடிக்கை மனிதர்கள் வேறு. பாரதி சாடிய வேடிக்கை மனிதர்கள் வீணர்கள். இவர்களோ கவிவாணர்கள், இசைவாணர்கள்.

நாகூரில் தடுக்கி விழுந்தால் பாடகன் அல்லது கவிஞன் காலில்தான் விழவேண்டும் என்று சமுதாயக் கவிஞர் தா.காசீம் கூறுவார். “புலவர்கோட்டை” என்ற பழம் பெயர் பொருத்தமே என்பார்.

வடமொழி "தேவபாஷை" தமிழ் மொழி "நீசபாஷை" என்று கருத்து பரவி மணிபிரளாத்தமிழ் ஓங்கியிருந்த காலத்திலும் தன்னிலை இழக்காது சோறு/ ஆணம்/ தேத்தண்ணி (தேயிலைத்தண்ணீர்)/ மிளகுத்தண்ணி/ திறப்பு/ சூலி/ விளக்குமாறு/ சோத்துக்களறி/ உண்ணுங்க/ பசியாறுங்க என்று தூயதமிழ் பேசிய இவர்களை ‘வேடிக்கை மனிதர்கள்’ என்றுதானே உலகம் அன்று விமர்சித்திருக்கும்?

‘ஏற்பது இகழ்ச்சி’ என்ற உண்மை அறிந்திருந்தும் “ஈவது விலக்கேல்” என்ற சொல்லை மறவாது கையேந்தி நிற்கும் யாசகனிடத்தில், ஈவதற்கு ஏதும் இல்லாத சூழ்நிலையில்; “மாப்பு செய்யுங்க பாவா” என்று பிச்சைக்காரர்களிடத்திலேயே மன்னிப்புக் கேட்கும் பண்பு வேடிக்கையான ஒன்றுதானே?

மண்பாண்டம் மணம் வீசும் சுவைமிகுந்த ‘குண்டாச்சோறினை’ மிஸ்கீனிடத்திலேயே காசு கொடுத்து வாங்கும் கனவான்களின் வாடிக்கையை ‘வேடிக்கை’ என்றுதானே வர்ணிக்க வேண்டும்?

ஒருவேளைச் சோற்றுக்கு கையேந்தப்போய் இரண்டு. மூன்று சோத்துச்சீட்டை கைவசம் வைத்துக்கொண்டு எதைக் கொடுத்து சாப்பிடுவது? எதை விடுவது? என்று திணறும் வேடிக்கை மனிதர்களை இந்த ஊரில் காணலாம்.

“எனக்குப் பெரிதாக ஊர்ப்பாசம் கீர்ப்பாசமெல்லாம் கிடையாது. இருந்தாலும் நாம் பிறந்து வளர்ந்து பொறுக்கிய இடங்களைப் பற்றிப் படிக்கும் போது தவிர்க்க முடியாமல் ஒரு ‘நாஸ்டால்ஜிக்‘ உணர்வு வந்து குந்திக் கொள்கிறது” என்று ஏனோ தானோவென்று வேண்டா வெறுப்பாக தன் ஊர்ப்பாசத்தை உலகறிய பிரகடனப்படுத்தும் என் சகஊர்த்தோழர் சாரு நிவேதிதாவை என்னவென்று விமர்சிப்பது? எதிர்மறையாக பேசிப்பேசியே விளம்பரம் தேடிக்கொள்வது அவர் பாணி என்று விட்டுத்தள்ள வேண்டியதுதான்.

ஊர்ப்பாசம் மிகுதியால் தங்கள் சொந்தப் பெயரே மறைந்து குன்னக்குடி, வளையப்பட்டி, மகாராஜபுரம், பட்டுக்கோட்டை, சீர்காழி என்று அறியப்படும் கலைஞர்களை இவருடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

ஆனைக்கு தும்பிக்கை எப்படி முக்கியமோ, மனிதனுக்கு நம்பிக்கை எப்படி முக்கியமோ, அதுபோன்று ‘வேடிக்கை’ இந்த ஊருக்கு முக்கியம்.

“நல்ல வேடிக்கை போங்க” என்று மூக்கின் மேல் விரலை வைத்து கொள்வார்கள் எங்களூர் தாய்க்குலங்கள். அந்த ‘வேடிக்கை’யில் எதிர்பார்ப்பு, பெருவியப்பு பொதிந்துள்ளது என்று பொருள் கொள்ள வேண்டும்.

“இந்த வேடிக்கையெல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க” என்று நண்பர் கோபப்பட்டால் ‘பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் நம்ம கிட்ட வேண்டாம்’ என்று அர்த்தம்.

“மச்சான், இன்னிக்கு கடைதெருவிலே செம வேடிக்கை” என்று நண்பன் தகவலோடு வந்தால் அதில் கேலி, கிண்டல், கூத்து, கும்மாளம், கேளிக்கை, பொழுதுபோக்கு அடங்கியுள்ளது என்று அர்த்தம்.

செட்டியார் பள்ளியில் படிக்கையில் “அங்கே என்ன வேடிக்கை?” என்று ஒரு அதட்டலை உதிர்ப்பார் சரவணா சார். சொம்பும் கையுமாய் ஒதுக்குப்புறத்துக்கு யாராவது போய்க் கொண்டிருப்பார். அதில் என்ன வேடிக்கை வேண்டிக் கிடக்கு? அப்படியென்றால் வெளியில் நடக்கும் யாவும் வேடிக்கை என்றுதானே அர்த்தம்?

நகர்புறத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமெனில் ஜன்னல், பால்கனி அல்லது வாயிற்படியில் வந்து எட்டிப்பார்க்க வேண்டும். நாகூர்வாழ் மக்களுக்கு அதற்கு அவசியமே இல்லை. முற்றத்தில் படுத்துக் கொண்டே காற்றுப்பந்தல் வழியே அண்ணாந்து வெளியுலகை ஆசைதீர கண்டு இரசிக்கலாம். இந்த “Wind Tower Technology” விலாசத்தினால் இவர்களின் சுவாசப்பை போலவே இதயமும் விசாலமாகி விடுகிறது.

பக்கத்து வீட்டு முத்தாச்சி மாமி “இந்த வேடிக்கையை கேட்டிஹலா புள்ளே” என்று ஆரம்பித்தால் அதில் வில்லங்கம் இருக்கிறது என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். “கலியாணம் ஆயி இன்னும் ஒரு மாசம் கூட ஆவலே அதுக்குள்ளே புது மாப்பிள்ளைக்கி அஹ வூட்லே கடை சமுசா வாங்கி வச்சிருக்காஹா” என்று நாட்டு நடப்பை போட்டு உடைப்பார். இதில் என்ன வேடிக்கை? என வினவலாம். இந்த ஊரை பொறுத்தவரை இது ஒரு வேடிக்கையான கெளரவப் பிரச்சினை.

வியாழக்கிழமை வந்தாலே வேடிக்கைமயம்தான். சுற்றுப்புற ஊர்களிலிருந்து கூட்டம் வரத் தொடங்கிவிடும். பக்தி முற்றி பரவசம் பொங்க வரும் பக்தகோடிகளை விட வேடிக்கை நாடி ஓடி வரும் ஆடியன்ஸ்தான் அதிகம்.

கடைத்தெருவில் கமகமக்கும் கடலை வறுக்கும் வாசம் முதற்கொண்டு, அனாடமி படிக்கும் மாணவர்களுக்கு உபயோகப்படும் கை, கால், கண், காது, மூக்கு, தொடை என்று விற்கும் வெள்ளித்(?) தகடுகள் உட்பட எல்லாமே வேடிக்கைமயம்தான்.

அலங்கார வாசலில் தர்கா யானையை சீவி சிங்காரித்து ஆடை அணிகலன்கள் அணிவித்து பரிவட்டம் கட்டி நிற்க வைப்பார்கள். எதற்கு? தர்காவிற்கு செக்யூரிட்டி அதிகரிக்கவா? எல்லாம் ஒரு வேடிக்கைக்காகத்தானே?

வெளியூரிலிருந்து உள்ளூருக்கு வேடிக்கை பார்க்க வருகின்ற கூட்டம் ஒருபுறம் என்றால் வெளியூர்க்காரர்களை வேடிக்கை பார்க்கின்ற உள்ளூர்க்காரர்கள் மற்றொருபுறம். இவர்களுக்கு அவர்கள் வேடிக்கை. அவர்களுக்கு இவர்கள் வேடிக்கை. என்ன ஒரு வேடிக்கை பார்த்தீர்களா?

நேர்த்திகடனுக்காகாக மொட்டை போட்டு தலைமுழுக்க சந்தனம் பூசி பளபளவென்று பவனிவரும் ஆந்திரா ஆசாமியைக் கண்டால் இவர்களுக்கு வேடிக்கை. கொஞ்சம் ‘தபுரூக்’ எடுத்துக் கொள்ளலாமா என்று அந்த ஆசாமியின் தலையில் ஒட்டியிருக்கும் சந்தனத்தை பிய்த்து அவர் ‘ஆ’வென்று கத்துவதை வேடிக்கையாகக் கருதும் விஷமத்தனமான இளவட்ட பசங்களின் குறும்பினை என்னவென்று சொல்வது?

பொழுது சாயும் வேளையில் “குண்டு போட்டாச்சா?” என்று ஒருவர் வினவ “இல்லை இன்னும் போடலே” என்று மற்றவர் பதிலுரைக்க இந்த உரையாடலைக் கேட்கும் வெளியூர்க்காரர் “நாம் ஏதோ ஈராக் போன்ற ஒரு War Zone-க்குள் வந்துவிட்டோமோ என்று துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்ற ரேஞ்சுக்கு ஓடக்கூடும்.

அந்த பொன்மாலைப் பொழுதில் தர்காவிலிருந்து குண்டுச் சத்தம் (வெடிச்சத்தம்) கேட்க, சிறகடித்து வானுயர்ந்த கோபுரங்களை வட்டமிடும் புறாக்களின் கூட்டம் கண்கொள்ளாத வேடிக்கையாக இருக்கும்.

காற்று வாங்க கடற்கரைக்கு காலாரச் செல்லும் வெளியூர்க்காரரின் காதில் விழுமாறு குறும்புக்கார என் நண்பன் “அதோ சிங்கம் வருது பாரு” என்று கமெண்ட் அடிக்க அசந்துப் போய் நடந்து வந்த அவரோ கம்பீரமாக ராஜநடை நடக்க, “என் நண்பன் சொன்ன சிங்கத்திற்கு அர்த்தம் வேறு சார்” என்று அவரிடத்தில் நான் சென்று போட்டுக் கொடுக்கவா முடியும்?

வேடிக்கை காட்டுவதில் நாங்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. சின்ன ஹந்திரி, பெரிய ஹந்திரி, வாஞ்சூர் ஹந்திரி, சில்லடி ஹந்திரி, மவுலூது, ஆஸுரா, ஒடுக்கத்து புதன், மீலாது நபி, என்று வேடிக்கையே வாடிக்கையாகி விட்ட ஊர் எங்களூர். மினாராவுக்கு சாந்து (சாயம்) பூசுவதும், பாம்பரம் ஏற்றுவதும் கூட எங்களுக்கு வேடிக்கைதான்.

இன்னபிற ஊர்களில் தேரோட்டம் வேடிக்கையெனில் எங்களூரில் பீரோட்டம் வேடிக்கை. சமுத்திரத்தில் செல்லுகின்ற கப்பல்கள் சாலையில் சென்றால் அது வேடிக்கை அல்லவா? தண்டவாளத்தில் செல்லும் புகைவண்டி தார்ரோட்டில் சென்றால் அது வேடிக்கைதானே?

“குவா குவா மொம்மது காக்கா கொத்துப் பரட்டா” என்று துருக்கி உடை அணிந்த கோரஸ் குழு, அவர்களுக்கு மட்டுமே புரிந்த பாஷையில் ரைம்ஸ் பாடுவது என்னவொரு வேடிக்கை தெரியுமா?

ஊரு உலகத்தில் உள்ளங்கை சைஸில் விற்கும் ஜிலேபி இங்கே ஓரடி விட்டத்தில் தயாராவது வேடிக்கைதானே?

புரோட்டாவின் சைசுக்கு ஏற்றார்போல் Single, Double, Triple என்று கூட்டிக் கொண்டுபோகும் நாகூர் மக்கள், விலைவாசி ஏற ஏற, Tetra, Penta, இன்று நாளடைவில் புதுப்பெயர் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வாணவேடிக்கை என்று ஒரு நாளையும் வைத்து அக்கம் பக்கத்தாரை திரட்டுவதும் இந்த வேடிக்கை மனிதர்களின் சிறப்பு.

“The Great Show man” என்று இந்தி தயாரிப்பாளர் ராஜ்கபூருக்கு பட்டத்தை அளித்ததைப்போன்று நாகூரார்களுக்கும் யாராவது பட்டம் கொடுத்திருக்கலாம்.

பாரதி இருந்திருந்தால்

வேடிக்கை மனிதரைப்போல் – நான்
வாழ்வேனோ சர்வேசா”

என்று பாடி மகிழ்ந்திருப்பான்.

அருஞ்சொற்பொருள் :

தபுரூக் = பிரசாதம்
மிஸ்கீன் = வறியோர்
ஹந்திரி = கந்தூரி உற்சவம்

Read more...

கவிஞர் ஜபருல்லாஹ்வின் தூது




கவிஞர் இஸட் ஜபருல்லாஹ் எழுதிய "நிலவு சொன்னது!" என்ற வித்தியாசமான கவிதையை நான் அண்மையில் படித்து இரசித்தேன். "தூது விடு படலம்" என்பது ஒரு தனி 'ட்ராக்' இலக்கியம். பக்தியை ஊட்டும் நூலாகப் பிறந்த இது, நாளடைவில் சிற்றின்ப இலக்கியமாக மாறியது தனிக்கதை. 'அஃறிணை' பொருட்களை; அவை பேசாது என்று நன்கு தெரிந்திருந்தும் அவைகளோடு உரையாடுவது கவிஞர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள 'ஸ்பெஷல் லைசன்சு'.

அன்னம் விடுதூது, புறா விடு தூது, நாரை விடு தூது, கார் விடுதூது, வண்டு விடு தூது என்று நிற்பன, நடப்பன, பறப்பன என்று அனைத்தையும் (போஸ்ட்மேனைத் தவிர) தூது அனுப்புவார்கள் இந்த 'லைசன்சு ஹோல்டர்கள்'. "நாராய் நாராய்! செங்கால் நாராய்!" என்ற செய்யுளை பள்ளிப்பாடத்தில் படித்தது நினைவிருக்கலாம்.

(நாகூர்ப்புலவர்களாக இருந்திருந்தால் காடை, கவுதாரி, கொசு உல்லான், கோட்டுல்லான், குயில், பொன்னாந்தட்டான் என்று உண்ணும் பறவைகளாகப் பார்த்து தூது அனுப்பியிருப்பார்கள்)

காளிதாசன் 'மேக சந்தேசம்' என்ற காவியம் படைத்தான். "ஓடும் மேகங்களே! ஒரு சொல் கேளீரோ" என்று கண்ணதாசன் டி.எம்.எஸ். வாயிலாக மேகத்தை தூது விட்டான். "தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு; எங்கள் திருநபியிடம் போய்ச் சொல்லு" என்று கவிஞர் தா.காசிம் இசைமுரசு நாகூர் ஹனீபா வாயிலாக தூதுவிட்டார். "போகும் மேகங்களே! பூமான் நபிக்கு ஸலாத்தைச் சொல்லுங்களேன்! மதினாவில் வாழும் மஹ்மூது நபிக்கு மனத்தூதைக் கூறுங்களேன்" என்று அடியேனும் பாடகர் ஜெய்னுல் ஆபிதீன் மூலமாக தூதுவிட்டேன்.

இவையாவும் 'ஒன் வே டிராபிக்' தூது. இதோ கவிஞர் இஸட் ஜபருல்லா விடுத்திருக்கும் தூதை கவனியுங்கள். இது "டூ வே டிராபிக்". இங்கிருந்து நிலவை அனுப்புகிறார் தூது. அது போகிறது. போய் பதில் செய்தியையும் கொண்டு வருகிறது

"அண்ணல் நபி பொன்முகத்தை கண்கள் தேடுதே" என்ற இசைமுரசின் இனிமையான பாடலில் ஒரு அற்புதமான வரி வரும். "தென்றல் அதை தூது விட்டேன் திரும்பவில்லையே..!" என்று. அது எப்படி திரும்பி வரும்? காரணம் அது போன இடம் அப்படிப்பட்ட இடம். திரும்பி வர மனம் இசையாது. புஷ்பங்களின் மகரந்தாமாம் மதினப் பூமியில் அதற்கு புரள வேண்டும்; உருள வேண்டும்; போலிருந்திருக்க வேண்டும். இல்லாமல் போனால் அந்த கஸ்தூரி மணத்தில் லயித்துப் போய் அங்கேயே சங்கமித்திருக்க வேண்டும். அதனால்தான் தூத் போன தென்றல் திரும்பவில்லை.

கவிஞர் இஸட் ஜபருல்லாஹ் தூதுவிட்டது நிலவை அல்லவா? தென்றல் திரும்பாமல் போனால் என்ன? இருக்கவே இருக்கிறது வாடைக் காற்று. அதை வைத்து நாம் 'அட்ஜ்ஸ்ட்' செய்துக் கொண்டு போய் விடலாமே?

ஆனால் நிலவு அப்படியா? இருப்பது ஒன்றே ஒன்று அல்லவா? அது இல்லாமல் போனால் இரவு வெளிச்சத்திற்கு என்னச் செய்வது? எப்படி பிறை பார்ப்பது? எங்ஙனம் பெருநாள் கொண்டாடுவது? மாதத்தை எப்படி கணக்கெடுப்பது? இடுப்பில் இருக்கும் குழந்தைகளுக்கு தாய்மார்கள் எப்படி நிலாச்சோறு ஊட்டுவது? கவிஞர்கள் கவிதை எழுதுவதற்கு ஒரு முக்கியமான 'கரு' மிஸ்ஸிங் ஆகி விடுமே? இவ்வளவு பிரச்சினை இருக்கிறதே?

எனவேதான் எங்கள் பூமான் நபியைக் கண்டபின்பும் அதை திரும்ப வரச் செய்கிறார் நம் கவிஞர். விவரமான மனிதரிவர். அத்தனை ஒரு மகத்துவம் நிறைந்த இடத்திற்குச் சென்ற நிலவானது வெறுமனே எப்படி வரும்?

சில நல்ல செய்திகளைத் தாங்கி வருகிறது. அறிவுரைகளைச் சுமந்து வருகிறது. புத்திமதிகளை ஏந்தி வருகிறது. போதனைகளோடு புறப்பட்டு வருகிறது. இனி கவிஞர் இஸட் ஜபருல்லாஹ் அவர்களின் கவிதை வரிகளில் மூழ்குவோம் :


நிலவு சொன்னது---------------

விண்ணகத்தில் சதிராடும்
வெண்ணிலவை நான் கேட்டேன்
அண்ணல்நபி பூமுகத்தைக் கண்டாயா....? அவர்
சொன்னமொழி எனக்கெடுத்துச் சொல்வாயா?

கன்னல்நபி நாயகத்தை
கண்டுவந்த உணர்வதனை
விண்டுரைக்க வார்த்தையில்லை என்றது..! அதை
விடவில்லைநான் அதனால் சொன்னது...!

அண்ணலாரின் ஒளிமுகத்தை
என்முகத்துக் கீடாக்கி
பாட்டெழுதும் அறியாமை சொல்லிவந்தேன்..! - நெஞ்சைப்
பண்படுத்தும் போதனைகள் அள்ளி வந்தேன்..!

ஏழைகளுக் கிரங்கச் சொல்லி
என்னிடத்தில் சொல்லச் சொன்னார்...!
ஏற்றுவந்து கூறிவிட்டேன் செல்வர்களே..! பணம்
எத்தனை நாள் நிலைத்திருக்கும் சொல்லுங்களேன்...?

இம்மைதரும் சுகங்களிலே
மறுமையினை மறந்திடாதீர்..!
என்றுஎன்னை நினைவூட்டச் சொன்னார்கள்..! நபிகள்
என்றும் உலகம் சதமில்லை என்றார்கள்..!

ஆளுகின்ற பதவியெல்லாம்
'அல்லாவின் அடிமை' யென்ற
பதவிக்குமுன் ஈடாகாது என்றார்கள்..! நபிகள்
பக்குவமாய் எடுத்துரைக்கச் சொன்னார்கள்..!

மூமீன்கள் பிளவுபட்டால்
ஏமாளி ஆனார்கள்...!
ஏனிந்த வேற்றுமைகள்..? என்றார்கள் - நபிகள்
என்னைத்தான் கேட்டுவரச் சொன்னார்கள்..!

சுவனசுகம் துறந்தவராய்
நரகநெருப்பை நாடுகின்றார்..!
சொல்லிவிடு வெண்ணிலவே என்றார்கள்...! இதை
சொல்லும்போது முகத்தில்வாட்டம் கொண்டார்கள்...!

எம்பெருமான் சொன்னவைகள்
எல்லாமும் சொல்வதென்றால்
எந்தன்மனம் தாங்காது என்றது..! நிலவு
என்னை விட்டு வானில்விரைந்து சென்றது...!

(இந்த தேர்தல் களத்தில் ஒற்றுமை காட்ட வேண்டிய மூமீன்களாகிய நாம் பிளவுபட்டு ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும் இத்தருணத்தில் இக்கவிதை மிகவும் பொருத்தமாக உள்ளது)

- அப்துல் கையூம்

Read more...

Thursday 16 April, 2009

நீதிபதி மு.மு.இஸ்மாயீல்




(நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் அவருடனிருந்து பழகிய வழக்கறிஞர் த. இராமலிங்கம், தம் நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்)

நாகூரில் ஒர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர், நீதிபதி இஸ்மாயீல் அவர்கள். வறுமை சூழ்ந்த இளமை என்றாலும் படிப்பிலும் இலக்கியத்திலும் இளமை யிலேயே சிறந்து விளங்கியவர். பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் பேச்சுப் போட்டிகளில் பரிசுகள் பெற்ற கதையை, ஓய்வாகப் பேசும் நேரங்களில் சொல்லிக் கொண்டே இருப்பார்.

முயற்சியினால் முன்னுக்கு வந்தவர், அவர். டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதி பதியாகப் பதவியேற்று அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் தலைமை நீதிபதியாகவும், நீதித் துறைக்கு அவர் ஆற்றிய சேவை மகத்தானது.

பண்பட்ட இலக்கியவாதியாக அவர் திகழ்ந்தார். இலக்கியத்தில் நயம் பாராட்டிப் பேசிக்கொண்டிருப்பது அவருக்குப் பிடிக்காது. நகைச்சுவை சொன்னால் கோபமே வந்துவிடும். மேடையில் பேசப்படும் ஒவ்வொரு சொல்லும் இலக்கியத்துக்கோ, சமுதாயத்துக்கோ நேரிடையாகப் பயன்படவேண்டும் என்பார்.

சென்னை கம்பன் விழாவில் ஒருமுறை மாலை நிகழ்ச்சிக்கு அவர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பேச்சாளர் ஒருவர், ஒரு நகைச்சுவை சொன்னார். துரதிருஷ்டவசமாக அதே நகைச் சுவையைக் காலை நிகழ்ச்சியிலும் வேறு பேச்சாளர் ஒருவர் சொல்லியிருந்தார். இவரும் அதையே சொல்ல, தலைமைப் பொறுப்பிலிருந்த நீதிபதி இஸ்மாயீல் அவர்களுக்குச் சட்டென்று கோபம் வந்துவிட்டது. “இந்த கத்திரிக்கா ஜோக்கெல்லாம் காலையிலேயே சொல்லிவிட்டாங்க, நீங்க உங்க கருத்தைப் பேசுங்க’ என்று ஒலிபெருக்கியிலேயே சொன்னார்.

நீதித் துறையில் மட்டுமல்ல. இலக்கிய உலகிலும் அவர் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அவர் மேடையில் இருக்க வேண்டும் என்பதில்லை. பார்வையாளர்கள் வரிசையில் இருந்தால் கூட பேச்சாளர்கள் தயங்கித் தயங்கிப் பேசுவார்கள்.

இலக்கிய உலகில் அடுத்த தலைமுறை வளர வேண்டும் என்பதில் உறுதியான எண்ணம் கொண்டிருந்தார். அவருடைய எண்ணத்தைச் செயலாக்கத் துணை நின்ற பெருமை, செயலாளராக இருந்த பழ.பழநியப்பன் அவர்களையே சாரும். நீதிபதி இஸ்மாயீல் அவர்களும் பழ.பழநியப்பன் அவர்களும் வழி காட்டாமல் இருந்திருந்தால் நாங்கள் எல்லாம் இலக்கிய உலகத்திற்குள் காலடி வைத்து இருக்கமுடியாது.

மாநில அளவில் மாணவ-மாணவியர்க்குப் பேச்சு, கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளை அவருடைய வழியில் கம்பன் கழகம் இன்றும் நடத்தி வருகிறது. பேச்சுப் போட்டியில் வெற்றிபெறும் மாணவ-மாணவியரைக் கம்பன் விழா மேடையில் ஏற்றிப் பேச வைக்கும் வழக்கத்தை நீதிபதி இஸ்மாயீல் அவர்களும் பழ.பழநியப்பன் அவர்களும்தான் உருவாக்கினார்கள். இன்று பல கழகங்கள் அதைப் பின்பற்றி வருகின்றன.

மதுரை கம்பன் கழகம், அவருடைய தமிழ்த் தொண்டைப் பாராட்டி பெரும் தொகை ஒன்றை விருதாகக் கொடுத்தது. அவர் வீட்டுக்கே சென்று நாங்கள் அனை வரும் வழங்கினோம். அப்போது பெற்றார். ஆனால் மறுநாள் ஒரு கடிதம் எழுதி, அந்தப் பணத்தையும் வைத்து, கம்பன் கழகத்தின் துணைத் தலைவர் ஏ.வி.எம்.சரவணன் அவர்களுக்கு அனுப்பிவிட்டார். “இந்தப் பணத்தை நான் வைத்துக்கொள்வது முறையாக இருக்காது’ என்று கடிதத்தில் எழுதியிருந்தார். பின் அவருடைய அனுமதியின் பேரில், கம்பன் கழகத்தின் அறக்கட்டளையில் அப்பணம் சேர்க்கப்பட்டது.

எவருக்கும் எக்காலத்திலும் தலை வணங்காத தகைமையாளராக வாழ்ந்து, தன் வாழ்வை நிறைவு செய்து கொண்டிருக்கிறார், நீதிபதி இஸ்மாயீல் அவர்கள். வளர்ந்து வரும் தலை முறைக்கு அவரது நேர்மையும் மன உறுதியும் தலைவணங்காத் தன்மையும் என்றும் வழிகாட்டி நிற்கும்.

- நன்றி (SIFY - TAMIL)

மறைவுச் செய்தி (The Hindu)

Read more...

இறைவனும் இருட்டும்




இறைவனும் இருட்டும்
- அப்துல் கையூம்

கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் அவர்களின் எழுத்துக்களை மிகவும் நேசிப்பவன் நான். அவரது பாடல்களில் சிந்தனையைத் தூண்டும் சீரிய கருத்துக்களை காண முடியும். நாகூர் ஈன்றெடுத்த நற்றமிழ்க் கவிஞர்களில் அவரும் ஒருவர்.

நாலுகால் கட்டிலிலே நித்தம் நித்தம் தூக்கம்
நாலுபேர் தூக்கையிலே நிரந்தர தூக்கம்

என்ற உணர்ச்சி பூர்வமான வரிகளை கேட்கையில் மரண பயம் நம்மைக் கவ்விக் கொள்ளும்.

பூவிருக்கும் மேனி
புழுக்களின் தீனி
புரிந்தவன் ஞானி
புத்தி பெறுவாய் நீ
என்ற இரண்டிரண்டு வார்த்தை வரிகளில் "வீதி வரை உறவு" என்ற கவியரசு கண்ணதாசன் பாடலில் காணப்படும் அதே தத்துவார்த்த கருத்துக்களை நாம் உளமார உணர முடியும். (பாடல் வரிகளை நினைவில் இருந்ததை வைத்து இதை எழுதுகிறேன்)

அந்த ஒரு தூக்கத்துக்கு
ஆளாகும் முன்னே
இந்த ஒரு தூக்கத்திலும்
என்ன சுகம் கண்ணே?

என்ற வரிகள் பக்குவமடைந்த ஒரு தத்துவவாதியின் பண்பட்ட சிந்தனைகள்.

"But I have Promises to keep
Miles to go before I sleep
Miles to go before I sleep"

என்ற ஆங்கிலக் கவிஞன் ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் வரிகளை எனக்கு அது நினைவுறுத்தும். அந்த ஒரு "தூக்கம்" நம்மைத் தழுவுவதற்கு முன்பு நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நாம் சரிவரச் செய்ய வேண்டுமே என்ற உணர்வு நம்மை ஆட்கொள்ளும். ஆழ்ந்த சிந்தனை மிகுந்த அற்புதமான பாடல் அது.

கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் அவர்களின் மற்றொரு பாடலில் ஏனோ எனக்கு சற்றும் உடன்பாடில்லை.

உலக முஸ்லீம்களே நில்லுங்கள்!
உண்மைதானே சொல்லுங்கள்?

என்று அவர் எழுதி, காயல் ஷேக் முகம்மது அவர்கள் பாடிய உச்ச ஸ்தாயி பாடலின் இனிமை நம் காதுகளில் தேனாகப் பாயும். அந்த பாடல் வெளிவந்த காலத்தில் இதன் உள்ளர்த்தத்தை முழுமையாக புரிந்துக் கொள்ளக்கூடிய பக்குவம் எனக்கில்லை. பாடலின் இசையில் லயித்ததோடு சரி. இப்பொழுது சிந்தித்துப் பார்க்கையில் இந்த பாடலில் உள்ள கருத்துக்களோடு என்னால் அறவே ஒத்துப் போக முடியவில்லை. "உலக முஸ்லீம்களே!" என்று தொடங்குவதால் உலக முஸ்லீம்களில் ஒருவனாக நான் இருக்கும் பட்சத்தில் என்னையும் விளிப்பதாக இருப்பதால் நான் இப்பாடலை காது கொடுத்து கேட்க வேண்டியுள்ளது. "உண்மைதானே சொல்லுங்கள்?" என்று நம்மையும் இழுத்துப் பிடித்து கேள்வி கேட்பதால் இதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமையும் நமக்கு ஏற்படுகிறது.

பாடலின் அடித்த அடி :

இறைவனை யாருக்குத் தெரியும் - நபி
இரசூல் இல்லை யென்றால்
நபியை யாருக்குப் புரியும் - வல்ல
நாயன் இல்லையென்றால்!
இஸ்லாத்தின் நிறுவனர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் என்னும் தவறான கருத்து மேலை நாட்டவரிடம் குடி கொண்டுள்ளது. எனவேதான் நம்மை "Mohammadans" என்று கூறும் அவர்களிடம் நாங்கள் "முஸ்லீம்கள்" என்று அவர்களுக்கு புரிய வைக்கிறோம். ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட நபிமார்களை இறைவன் இந்த அவனிக்கு அனுப்பி வைத்ததை நாம் அறிகிறோம். இறைவனின் தூதர்கள் அனைவருக்கும் இஸ்லாம்தான் மார்க்கமாக இருந்திருக்கிறது. அத்தனை தூதர்களும் ஓரிறைக் கொள்கையைத்தான் போதித்து வந்திருக்கின்றனர்.
ஆகையால் மேற்கூறிய நாலு வரிகளில் முதல் இரண்டு வரிகள் சற்றும் பொருந்தவில்லை. அடுத்த வரிகள் இப்படியாகத் தொடர்கிறது :

ஆயிரமாயிரம் தூதர்கள் வந்தார்
ஆண்டவனை யார் காட்டிவைத்தார்?
ஓயாதுழைத்த உயர்நபி யன்றோ
ஓரிறைக் கொள்கையை நாட்டிவைத்தார்!
வேதம் கொடுத்தான் இறைவன்! - செயல்
விளக்கம் கொடுத்தார் நபிகள்!

நபி ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரை எல்லா நபிமார்களும் ஓரிறைக் கொள்கையைத்தான் வலியுறுத்தினார்கள். அடிப்படைக் கொள்கைகள் எவ்வித மாற்றமும் இல்லாமல், எல்லா நபிமார்களுக்கும் ஒரே மார்க்கமே அருளப்பட்டது. பெருமானார் (ஸல்) அவர்கள் மட்டுமே ஆண்டவனை அடையாளம் காட்டினார்கள் என்பது முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது.

(முஹம்மதே) ”உமக்கு முன் தூதர்களுக்கு கூறப்பட்டதுவே உமக்கும் கூறப்பட்டுள்ளது.” (திருக்குர்ஆன், 041:043)

அனைத்து இறைத்தூதர்களுக்கும் ஒரே மாதிரியான உபதேசங்களே அருளப்பெற்றது என்று திருக்குர்ஆன் 041:043வது வசனம் கூறுகிறது.

எல்லா இறைத்தூதர்களும் சேர்ந்து இஸ்லாம் என்ற ஒரு வீட்டைக் கட்டி முடித்திருக்கிறார்கள் என்ற அழகிய உதாணத்தை நபிமொழி கூறுகிறது.

இதற்கு விளக்கமாக திருக்குர்ஆனில் பல வசனங்களைப் பார்க்கலாம். குறிப்பாக திருக்குர்ஆன், 022:078வது வசனத்தில் ”உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில்…” என நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கமும் இஸ்லாம் என்றே இறை வசனங்கள் கூறுகிறது.

கவிஞரின் முடிவுரை மீண்டும் முரண்பட்ட கருத்தை முன்வைக்கிறது.

இருட்டில் இருந்தான் இறைவன் - நபி
இங்கே பிறந்திடும் முன்பு!
அறிந்திட வைத்தார் அண்ணல் - அவன்
அற்புதம் தெரிந்தது பின்பு!
காவியம் வடித்தான் இறைவன் - அதன்
கருவாய் அமைந்தார் நபிகள்!

நபிகள் நாயகத்தை உயர்த்திப் பாடவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கலைமாமணி அவர்கள் ஒளிபொருந்திய அந்த மூலவனை இருட்டில் அடைத்து விட்டாரோ?

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP