இறைவனும் இருட்டும்
இறைவனும் இருட்டும்
- அப்துல் கையூம்
கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் அவர்களின் எழுத்துக்களை மிகவும் நேசிப்பவன் நான். அவரது பாடல்களில் சிந்தனையைத் தூண்டும் சீரிய கருத்துக்களை காண முடியும். நாகூர் ஈன்றெடுத்த நற்றமிழ்க் கவிஞர்களில் அவரும் ஒருவர்.
நாலுகால் கட்டிலிலே நித்தம் நித்தம் தூக்கம்
நாலுபேர் தூக்கையிலே நிரந்தர தூக்கம்
என்ற உணர்ச்சி பூர்வமான வரிகளை கேட்கையில் மரண பயம் நம்மைக் கவ்விக் கொள்ளும்.
பூவிருக்கும் மேனிஎன்ற இரண்டிரண்டு வார்த்தை வரிகளில் "வீதி வரை உறவு" என்ற கவியரசு கண்ணதாசன் பாடலில் காணப்படும் அதே தத்துவார்த்த கருத்துக்களை நாம் உளமார உணர முடியும். (பாடல் வரிகளை நினைவில் இருந்ததை வைத்து இதை எழுதுகிறேன்)
புழுக்களின் தீனி
புரிந்தவன் ஞானி
புத்தி பெறுவாய் நீ
அந்த ஒரு தூக்கத்துக்கு
ஆளாகும் முன்னே
இந்த ஒரு தூக்கத்திலும்
என்ன சுகம் கண்ணே?
என்ற வரிகள் பக்குவமடைந்த ஒரு தத்துவவாதியின் பண்பட்ட சிந்தனைகள்.
"But I have Promises to keep
Miles to go before I sleep
Miles to go before I sleep"
என்ற ஆங்கிலக் கவிஞன் ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் வரிகளை எனக்கு அது நினைவுறுத்தும். அந்த ஒரு "தூக்கம்" நம்மைத் தழுவுவதற்கு முன்பு நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நாம் சரிவரச் செய்ய வேண்டுமே என்ற உணர்வு நம்மை ஆட்கொள்ளும். ஆழ்ந்த சிந்தனை மிகுந்த அற்புதமான பாடல் அது.
கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் அவர்களின் மற்றொரு பாடலில் ஏனோ எனக்கு சற்றும் உடன்பாடில்லை.
உலக முஸ்லீம்களே நில்லுங்கள்!
உண்மைதானே சொல்லுங்கள்?
என்று அவர் எழுதி, காயல் ஷேக் முகம்மது அவர்கள் பாடிய உச்ச ஸ்தாயி பாடலின் இனிமை நம் காதுகளில் தேனாகப் பாயும். அந்த பாடல் வெளிவந்த காலத்தில் இதன் உள்ளர்த்தத்தை முழுமையாக புரிந்துக் கொள்ளக்கூடிய பக்குவம் எனக்கில்லை. பாடலின் இசையில் லயித்ததோடு சரி. இப்பொழுது சிந்தித்துப் பார்க்கையில் இந்த பாடலில் உள்ள கருத்துக்களோடு என்னால் அறவே ஒத்துப் போக முடியவில்லை. "உலக முஸ்லீம்களே!" என்று தொடங்குவதால் உலக முஸ்லீம்களில் ஒருவனாக நான் இருக்கும் பட்சத்தில் என்னையும் விளிப்பதாக இருப்பதால் நான் இப்பாடலை காது கொடுத்து கேட்க வேண்டியுள்ளது. "உண்மைதானே சொல்லுங்கள்?" என்று நம்மையும் இழுத்துப் பிடித்து கேள்வி கேட்பதால் இதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமையும் நமக்கு ஏற்படுகிறது.
பாடலின் அடித்த அடி :
இறைவனை யாருக்குத் தெரியும் - நபிஇஸ்லாத்தின் நிறுவனர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் என்னும் தவறான கருத்து மேலை நாட்டவரிடம் குடி கொண்டுள்ளது. எனவேதான் நம்மை "Mohammadans" என்று கூறும் அவர்களிடம் நாங்கள் "முஸ்லீம்கள்" என்று அவர்களுக்கு புரிய வைக்கிறோம். ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட நபிமார்களை இறைவன் இந்த அவனிக்கு அனுப்பி வைத்ததை நாம் அறிகிறோம். இறைவனின் தூதர்கள் அனைவருக்கும் இஸ்லாம்தான் மார்க்கமாக இருந்திருக்கிறது. அத்தனை தூதர்களும் ஓரிறைக் கொள்கையைத்தான் போதித்து வந்திருக்கின்றனர்.
இரசூல் இல்லை யென்றால்
நபியை யாருக்குப் புரியும் - வல்ல
நாயன் இல்லையென்றால்!
ஆகையால் மேற்கூறிய நாலு வரிகளில் முதல் இரண்டு வரிகள் சற்றும் பொருந்தவில்லை. அடுத்த வரிகள் இப்படியாகத் தொடர்கிறது :
ஆயிரமாயிரம் தூதர்கள் வந்தார்
ஆண்டவனை யார் காட்டிவைத்தார்?
ஓயாதுழைத்த உயர்நபி யன்றோ
ஓரிறைக் கொள்கையை நாட்டிவைத்தார்!
வேதம் கொடுத்தான் இறைவன்! - செயல்
விளக்கம் கொடுத்தார் நபிகள்!
நபி ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரை எல்லா நபிமார்களும் ஓரிறைக் கொள்கையைத்தான் வலியுறுத்தினார்கள். அடிப்படைக் கொள்கைகள் எவ்வித மாற்றமும் இல்லாமல், எல்லா நபிமார்களுக்கும் ஒரே மார்க்கமே அருளப்பட்டது. பெருமானார் (ஸல்) அவர்கள் மட்டுமே ஆண்டவனை அடையாளம் காட்டினார்கள் என்பது முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது.
(முஹம்மதே) ”உமக்கு முன் தூதர்களுக்கு கூறப்பட்டதுவே உமக்கும் கூறப்பட்டுள்ளது.” (திருக்குர்ஆன், 041:043)
அனைத்து இறைத்தூதர்களுக்கும் ஒரே மாதிரியான உபதேசங்களே அருளப்பெற்றது என்று திருக்குர்ஆன் 041:043வது வசனம் கூறுகிறது.
எல்லா இறைத்தூதர்களும் சேர்ந்து இஸ்லாம் என்ற ஒரு வீட்டைக் கட்டி முடித்திருக்கிறார்கள் என்ற அழகிய உதாணத்தை நபிமொழி கூறுகிறது.
இதற்கு விளக்கமாக திருக்குர்ஆனில் பல வசனங்களைப் பார்க்கலாம். குறிப்பாக திருக்குர்ஆன், 022:078வது வசனத்தில் ”உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில்…” என நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கமும் இஸ்லாம் என்றே இறை வசனங்கள் கூறுகிறது.
கவிஞரின் முடிவுரை மீண்டும் முரண்பட்ட கருத்தை முன்வைக்கிறது.
இருட்டில் இருந்தான் இறைவன் - நபி
இங்கே பிறந்திடும் முன்பு!
அறிந்திட வைத்தார் அண்ணல் - அவன்
அற்புதம் தெரிந்தது பின்பு!
காவியம் வடித்தான் இறைவன் - அதன்
கருவாய் அமைந்தார் நபிகள்!
நபிகள் நாயகத்தை உயர்த்திப் பாடவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கலைமாமணி அவர்கள் ஒளிபொருந்திய அந்த மூலவனை இருட்டில் அடைத்து விட்டாரோ?
0 comments:
Post a Comment