பாங்கு சப்தம்
விசாலமற்ற மண்ணறையே
விலாசங்களாக மாற
மக்கிப்போன ஆடைகளினூடே
மரத்துப்போன என் தேகம்.
புழுக்களின் பிரவேசத்தில்
புழுக்கங்களின் பிரதேசத்தில்
புற்றாகிப்போன வெற்றுடல்.
ஊர்வனங்களின் ஊர்வலத்தில்
ஊர்வலமாய் வந்த நான்
கூறுகளாகி குதறிய பிண்டமாய்
குரூரத்தின் சிதறலில்
உதிரங்கள் உறைந்து
உதிர்ந்தொழுகும் சடலமாகி
புரண்டுபடுக்கவும் நாதியற்று
அழுகும் நாற்றங்களில்
அசுத்தங்களே சுவாசங்களாக
பூச்சியின் கடைவாயில்
என் சின்னச் சின்ன
சதைத் துண்டுகள்.
நீட்டவும் மடக்கவும்
ஆட்டவே முடியாமல்
அசைவற்றுப் போன
நீர்த்துப்போன காற்றுப்பை.
கறையான்களுக்கிரையாகி
மேனியாவும் தீனியாக
கரைந்துருகும் மாமிசம்.
மயான பூமியில்
மணலரிப்புகளுக்கு ஏனோ
அவகாசமே இல்லாத
தலைபோகும் அவசரங்கள்.
இடைவெளி குறைந்து
எலும்புகள் நொறுங்க
துர்மணத்தின் வீச்சத்தில்
செத்த உடல்மீது
தத்தம்பணிகளை
நித்தம் புரியும்
சிற்றுயிர்கள்
சற்றே தளர்த்த
என்ன காரணமென
அண்ணாந்து நோக்க
ஆகாயத்தில் ஒலித்தது
“அல்லாஹு அக்பர்” என்ற
அழைப்புச் சப்தம்.
- அப்துல் கையூம்
0 comments:
Post a Comment