Sunday, 30 March 2008

விளையும் பயிர் முளையில்



நாகூரில் அரசு மேனிலைப் பள்ளிக்கூடம் ஒன்று இருக்கிறது. இது பொன்விழா, வைர விழா, முத்து விழாக் கொண்டாடிய முதுபெரும் பள்ளிக்கூடம்.

இந்தப் பள்ளிக்கு "செட்டியார் பள்ளிக்கூடம்" என்று பெயர். இங்கு நாள்தோறும் காலையில் இறைவணக்கத்துக்குப் பின் வகுப்புகள் தொடங்குவது வழக்கம்.

"பொன்னார் மேனியனே" என்ற பாடல் நாள்தோறும் இறைவணக்கப் பாடலாகப் பாடப்படும். ஒரு ஆசிரியர் பாட அனைத்து மாணவர்களும் அவருடன் சேர்ந்து பாடுவார்கள்.

அந்தப் பள்ளியில் 7-ஆம் வகுப்பில் ஒரு சிறுவன் படித்துக் கொண்டிருந்தான். அவன் இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்தவன்.

ஒருநாள் அந்தச் சிறுவனின் மனதில் ஓர் என்ணம் எழுந்தது. "நான் ஏக இறைவனை வணங்குகிறவன். அல்லாஹ்வைத தவிர வேறு யாருக்கும் வணக்கம் சொல்வதில்லை. "பொன்னார் மேனியனே" என்ற பாடலோ சிவபெருமானை வணங்கக் கூடியது. இப்பாடலை நான் பாடுவது என் இஸ்லாமிய கொள்கைக்கு முரணாயிற்றே?" என்று அந்தச் சிறுவன் சிந்தித்தான்.

பள்ளியில் நிறைய முஸ்லிம் சிறுவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை அழைத்தான். தனது கருத்தை அவர்களுடன் பகிர்ந்துக் கொண்டான். "நாம் அல்லாஹ்வைப் பாடினால் என்ன?" என்று கேட்டான்.

மற்ற மாணவர்களும் இதற்கு ஆதரவு அளித்தார்கள். இதே கருத்தை ஒரு தாளில் எழுதி மாணவர்கள் கையெழுத்திட்டார்கள். அதை தலைமை ஆசிரியர் கையில் கொடுக்கும்படி இரு மாணவர்களை அனுப்பினார்கள்.

அவர்களும் கொண்டுப்போய் கடிதத்தை தலைமை ஆசிரியரிடம் தந்தார்கள். அவர் படித்துப் பார்த்தார். "இது யார் எழுதிய கடிதம்?" என்று கேட்டார். கடிதம் எழுதிய பையனின் பெயரை மாணவர்கள் தெரிவித்தார்கள்.

"கூப்பிடு அவனை" என்றார் தலைமை ஆசிரியர். உடனே அச்சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டு தலைமை ஆசிரியர் முன் நிறுத்தப் பட்டான்.

பையன் பயத்துடன் படபடப்போடு நின்றிருந்தான். "உனது உணர்ச்சியை பாராட்டுகிறேன்" என்று ஆசிரியர் அவனை தட்டிக் கொடுத்தார். "முஸ்லிம் மாணவர்கள் தனியே பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள்" என்று அப்போதே அனுமதியும் அளித்தார். "ஆனால் யார் பாடுவது?" என்று வினவினார்.

"நான் பாடுகிறேன்" என்று சிறுவன் தைரியமாகச் சொன்னான். ஒரு பாட்டையும் பாடிக் காட்டினான்.

வேளை உதவி தாளை தருவீர்
வேந்தர் யா முகம்மதே
நாளை மஹ்ஷர் மூலை உருகும்
நாளில் உதவும் நாயகா"

என்பது அந்தப் பாட்டு. நாகூர் வண்ணக் களஞ்சியப் புலவர் என்று சொல்லப்படும் புலவர் அப்துல் ரசீது எழுதிய பாடல்.

வெண்கல மணி போல "கணீர்" என்று ஒலித்த அந்தப் பாடல் தலைமை ஆசிரியரை மிகவும் கவர்ந்து விட்டது. "பலே! பலே! அருமையாக பாடிகிறாய்" என்று தட்டிக் கொடுத்தார். "நாளை முதல் முஸ்லிம் மாணவர்கள் தனியாகக் கூடி, பிரார்த்தனை செய்து, இந்தப் பாட்டை பாடுங்கள்" என்று அனுமதியும் தந்தார்.

அன்று முதல் பள்ளியில் நாள்தோறும் காலையில் முஸ்லிம் மாணவர்கள் தனியாகக் கூடினார்கள். அந்த மாணவன் இந்தப் பாடலை பாட, பிரார்த்தனை நடத்தினார்கள்.

அந்த மாணவன்தான் - நாகூர் ஹனீபா!

அப்போது அவர் 11 வயதுச் சிறுவன்.

எட்டுக்கட்டையில் எடுப்பாகப் பாடக்கூடிய இனிய குரலை இறைவன் அவருக்கு கொடுத்திருந்தான். அவரும் யார் பாடச் சொன்னாலும் கொஞ்சமும் தயக்கமின்றி பாடி அவர்களின் நெஞ்சகம் இனிக்க வைத்தார்.


- அ.மா.சாமி
தொடர்புடைய சுட்டிகள் :

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP