பூக்கள்
இறைவன்
பிரசுரிக்கும்
இணையில்லா
பத்திரிக்கை
இந்த பூக்கள்.
வெல்வெட்
இதழ்கள்;
வண்ண வண்ண எழுத்துக்கள்.
அச்சுப்பிழை
இலக்கணப்பிழை
இல்லாத
அழகிய படைப்பு.
காலை பதிப்புமுண்டு
மாலை பதிப்புமுண்டு
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட
பிரதிகள் இவைகள்
பிரதிகள் இவைகள்
எல்லா மொழியினரும்
புரிந்துக் கொள்ளும்
எளிய மொழிநடை
பரமனின்
பத்திரிகையை
பாமரனும் படிக்கையிலே
பரமசுகம்.
சமயச் சார்பற்ற
சஞ்சிகை இது.
தினசரி
வாராந்தரி
மாதாந்தரி
ஆண்டு மலர்
ஏன் ?
ஏன் ?
அவனது பிரசுரத்தில்
மாமாங்கத்திற்கு
ஒருமுறை வெளியாகும்
குறிஞ்சி மலரும் உண்டு
ஆபாசமே இல்லாத
ஒரே மஞ்சள் பத்திரிக்கை
இதுவாகத்தானிருக்கும்
மனிதனின் பத்திரிக்கை
படித்தால்தான்ஆனந்தம்
படித்தால்தான்ஆனந்தம்
இறைவனின்பத்திரிக்கையை
பார்த்தாலேபரவசம்
சமயக் குறிப்பு
மருத்துவக் குறிப்பு
வீட்டுக் குறிப்பு
அனைத்தும் உண்டு
பொடி வைத்து எழுதிய
பொடி வைத்து எழுதிய
புதுக்கவிதையும் உண்டு
ஆம் ..
மகரந்தப் பொடி
வசீகர நடையில்
வசமிழந்துப் போன
வாசக வண்டினங்கள்
வரிவரியாய்
வரிவரியாய்
மனனம் செய்வது
ரீங்காரமாய் காதில் விழும்
தாவரவியல்
மாணவர்களின்
குறிப்புதவி ஏடு
இணையத்து மின்னிதழோ
இந்த சூரிய காந்தி ?
கதிரவனைக் கண்டதும்
பக்கங்கள்தானாகவே
திறக்கின்றனவே ?
ஊட்டியில்
ஆண்டுதோறும்
திறந்திருக்கும்
நூலகமொன்றில்
நான் படித்த வாசகம்
“பத்திரிக்கைகளை
புரட்டாதீர்கள்”
- அப்துல் கையூம்
- நன்றி : திண்ணை (29.11.07)
0 comments:
Post a Comment