இறைவனின் வீடு
அன்றொரு நாள்
அகஸ்மாத்தாகப்
போக நேரிட்டது
இறைவனின் வீட்டுக்கு.
சப்தங்கள் ஏதுமின்றி
சுத்தமாக இருந்தது வீடு.
அரண்மணை
தரமுடியாத அழகும்
குடிசையில் இல்லாத
குணமும்
இருந்தது அந்த வீட்டுக்கு.
அறைகளுமில்லை திரைகளுமில்லை
கதவுகளுமில்லை சுவர்களுமில்லை
அற்புதமான அந்த வீட்டில்.
மூடிய எதையுமே
தேடியும் கிடைக்கவில்லை அங்கு.
எப்போதென்று தெரியவில்லை
எனினும்
ஏற்கனவே இந்த வீட்டுக்கு
வந்திருக்கிறேன்
என்றுதான் தோன்றியது.
வந்தவீடுதான் என்றாலும்
சொந்தவீடுபோல் இருந்தது
புகுந்த வீடுதான் என்றாலும்
பிறந்த வீடுபோல் இருந்தது.
யார் வீட்டுக்கோ
வந்ததுபோல் இருந்தது
என் வீட்டுக்குத் திரும்பியபோது.
வெகுதொலைவில்
இருப்பதாக நினைத்து
வாணாளை வீணடித்தது
நான்தான்.
அன்றுதான் தெரிந்து கொண்டேன்
என் வீட்டுக்கு அருகில்தான்
இறைவனின் இல்லம்
இருந்ததென்று.
அண்மையை தொலைவாகவும்
தொலைவை அண்மையாகவும்
எண்ணி எண்ணி நான்
இழந்தது எவ்வளவோ.
இனிமேலும் இழக்க மாட்டேன்
என் இறைவனின் வீட்டை.
ஏனெனில் நான்
எங்கே போனாலும்
என்னோடே வருகிறது
வினோதமான அவன் வீடு.
-- நாகூர் ரூமி
0 comments:
Post a Comment