மனிதனையும் கடவுளையும் பற்றி : மஆரியின் 'தியானங்கள் ' கவிதைத் தொகுப்பிலிருந்து (கி.பி.973-1057)
ஆங்கிலத்திலிருந்து தமிழில் : நாகூர் ரூமி
அரபியிலிருந்து ஆங்கிலத்தில் : ஆர். ஏ. நிகல்சன் (1868-1945)
அறிமுகம்
பாரசீகக் கவிஞர் உமர் கய்யாமைப் பற்றி நல்ல அபிப்ராயம் வைத்திருக்கும் வாசகர்கள் அனைவரும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய அரபு கவிஞர் மஆரி. எந்த காரணத்திற்காக உமர் கய்யாம் தனது நாட்டு பாரசீக மக்களிடம் ஆரம்பத்தில் பிரபலமாகவில்லையோ அதே காரணத்திற்காகத்தான் மஆரியும் தனக்கு முந்தைய
கவிஞரான முதனப்பி-யைவிட பிரபலமடையவில்லை. ஏனென்றால் மஆரி கட்டுப்பாடுகள் எதையுமே ஏற்றுக்கொள்ளாத ஒரு சுதந்திரமான முஸ்லிமாக இருந்தார். பல தரப்பட்ட விஷயங்களையும் பரந்து விரிந்த ஒரு தத்துவார்த்த அடிப்படையில் உள்வாங்கக் கூடியதாக அவருடைய பகுத்தறிவு மனம் இருந்தது. அது ஒரு ஒழுங்கற்ற முறையில் இருந்தாலும். உமர் கய்யாமுடையதைப் போலவே மஆரியின் கலாச்சாரமும் பரந்துபட்டதாக இருந்தது.
அவருடைய கவிதைகளை வாழ்வு, இறப்பு, மனித சமுதாயம், தத்துவம், சமயம் என பல பிரிவுகளில் ஆர்.ஏ. நிகல்சன் வகைப்படுத்துகிறார்.
ஒரு முக்கியமான விஷயத்தில் மஆரி உமர் கய்யாமிடமிருந்து வேறுபடுகிறார். அதாவது மஆரி ஒரு ஆன்மீக கவிஞராகவும் இருக்கிறார். உமர் கய்யாம் இந்த வாழ்வின் அவலங்களிலிருந்து தப்பிக்க புலன் இன்பங்களுக்குள் தஞ்சம் புகுந்து தப்பித்துக் கொள்வார். ஆனால் மஆரியோ ஒரு துறவு நிலை ஞானியின் வாழ்வை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். அவருடைய தனிப்பட்ட வாழ்வை வைத்து அவருடைய ஆளுமையின் இந்த அம்சத்தை எளிதில் விளங்கிக் கொள்ளலாம். ஆரம்ப காலத்திலேயே அவருக்கு கண் பார்வை போய்விட்டது. ஆனாலும் அவர் இதையும் மீறி வியக்கத்தகு முறையில் கல்வியைப் பெற்றுக்கொண்டார். எனினும் இந்த விஷயம் வாழ்க்கையின் மீது ஒரு கசப்பை ஏற்படுத்தத்தான் செய்தது.
தனக்கான வாழ்வையும் வளத்தையும் தேடி அவர் தன் இளம் வயதில் காவியப் பெரு நகரமான பாக்தாதுக்குச் சென்றார். ஆனால் அங்கு அவர் பெற்ற அனுபவங்கள் அவருடைய கனவுகளையெல்லாம் தகர்ப்பதாக இருந்தது. அவர் வாழ்வின் மீது கொண்டிருந்த கசப்புணர்வை அது பரிபூரணப்படுத்தவே உதவியது. இந்த விரக்தி நிலையின் காரணமாக மனிதனை வேதனையில் இருந்து காக்கின்ற வழி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான் என்று கருதினார். அவருடைய வாழ்வின் பிற்பகுதி, படிப்பதும் எழுதுவதும் கற்றுக் கொடுப்பதுமாக கழிந்தது.
அவருடைய படைப்புகளாக மூன்று கவிதைத் தொகுதிகளையும் ஒரு உரை நடை தொகுதியையும் என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா 99 குறிப்பிடுகிறது. அவை முறையே : 1. ஸக்த் அல் ஜந்த், 2. லாஸும் மாலம் யல்ஸம் அல்லது லுஸுமியத், 3. ரியாலத்தல் குஃப்ரான், 4. அல் ஃபுசுல் வல் கய்த். முதல் தொகுதி அவருக்கு புகழைத்தேடித் தந்தது. நான்காவது உரை நடைப் படைப்பு திருக்குர்ஆ 'னைக் கிண்டல் செய்யும் தொனியில்
அமைந்திருந்தது.
தியானங்கள் என்று நிகல்சனால் பெயரிடப்பட்ட படைப்புகள் மூலமாகவே மரியை மேற்கத்திய உலகம் அறிந்து கொண்டது. அதிகாரம், பாரம்பரியம் கியவற்றைவிட அறிவையும் மனசாட்சியையும் மேலாக நினைத்த ஒரு ஞானத்தெளிவு பெற்ற முஸ்லிமுடைய வாழ்க்கையின் மீதான மறைமுகமான விமர்சனமாக அவை இருந்தாலும் மிகவும்
கூர்மையானதாகவும் சக்தியுடையதாகவும் செறிவு கொண்டதாகவும் இருந்தன அவருடைய கவிதைகள்.
கீழ்வரும் மொழி பெயர்ப்புகளில் சந்தம், எதுகை, மோனை, அளவு போன்ற விஷயங்களில் சுதந்திரம் எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிறது. சாறுகள் பழங்களாக்கப் பட்டுள்ளன. ஆனால் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது கவிஞரின் சிந்தனை மற்றும் வெளிப்பாடு ஆகியவற்றுக்கு துரோகம் செய்யாத முறையிலேயே மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
1
மறுமையின் பெட்டிக்குள்
ஆழப்புதைந்து காத்திருக்கின்றன நிகழ்வுகள்
பாதுகாப்பு வானவர்கள்
மூடியைத் தூக்குவதற்காக.
காலத்தை கவிதையாகக் கொண்டிருக்கும்
நித்தியப் படைப்பாளன்
நெய்ய வேண்டியதில்லை அதற்குள்
புதுமையற்ற செயற்கையான சந்தத்தை.
இப்படியே கழிகின்றன இரவுகள்
குரல்கள் ஊமைகளாக.
வேகமாகவோ மெதுவாகவோ
வருவதென்னவென்று தெரியாமல்.
* * *
அல்லாஹ்வின் விருப்பம் கொண்டு
பாதுகாப்பாய்
பாதைவிலகாமல் காலத்தின் முனைகள்
இறங்குகின்றன நம்மீது.
அவன் கொடுத்ததெல்லாம் கடனே
திரும்ப எடுத்துக்கொள்ள;
அவன் பரிசில் மகிழ்ந்து வாழ்கின்றன
மனிதர்களின் முட்டாள்தனங்கள்.
2
நான் தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லை
பிறப்பையோ முதுமையையோ வாழ்வையோ;
நேற்று தரவிரும்பாத எதை இன்று தரப்போகிறது ?
இங்குதான் நான் தங்கவேண்டும், விதியின் இரு கைகளாலும் கட்டப்பட்டு
போகவும் முடியாது, போகச்சொல்லும் வரை.
இருட்டு மாயையிலிருந்து எனக்கு வழிகாட்டும் நீங்கள்
பொய் சொல்கிறீர்கள் - உங்கள் கதை குழப்பவே செய்கிறது
மாற்ற முடியுமா நீங்கள் வெட்கமுடன் முத்திரை குத்துவதையெல்லாம் ?
மாற்ற முடியாததால்தானே அவை அப்படி உள்ளன ?
3
சில இதயங்கள் லேசாக எடுத்துக்கொள்கின்றன கட்டளைகளை
எனினும் யாருக்கு அழிவு என்று எவருக்குமே தெரியாது
முஹம்மதின் குர்ஆனும், ஆமாம், மூஸாவின் தவ்ராத்தும்
மர்யத்தின் மகனின் இன்ஜீலும் தாவூதின் ஸபூரும்
அவை தடுத்தவை பற்றி தேசங்களுக்கு அக்கறையில்லை,
அழிந்தது அவைகளின் அறிவு வீணாக,
மக்களோடு சேர்ந்து.
மனிதன் தங்க இரண்டு வீடுள்ளது, வாழ்க்கையோ
நிற்காமல் கடந்து செல்லும் பாலத்தைப் போல் உள்ளது.
வீட்டை விட்டுவிட்டு கல்லறையில் கூடுகிறது கும்பல் !
இருப்பில் இருப்பதில்லை இல்லமோ இடுகுழியோ.
4
காலம் காலமாக காரிருளே கவிழ்ந்திருந்தது
எந்த விடியலும் எழுப்பவில்லை ஒரு சூரியனை.
எல்லாம் மாறுகிறது, இம்மை மட்டும் நிற்கிறது அசையாமல்
தன் அனைத்து மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய நிலங்களுடன்.
எழுதுகோல் இயங்க, கட்டளை நிறைவேறிவிட்டது
உலர்ந்து விட்டது மை எழுதுதோலின்மீது, விதியின் விருப்பப்படி
பாதுகாவலர்களால் காப்பாற்ற முடியவில்லை கிஸ்ராக்களை
பிரபுக்களால் கல்லறையிலிருந்து சீசரை.
5
இஷ்டத்துக்கு சுற்றி வந்தவனை
இடுகுழிக்குள் போ என்று ஒரு நாள் சொல்லுவது
மனிதனுக்கு மிகவும் துன்பமானதே.
எத்தனை முறை நமது பாதங்கள் மிதித்துள்ளன மண்ணுக்குக் கீழே
பெருமை கொண்ட புருவத்தையோ மிருதுவானவரின் எலும்புகளையோ !
6
நான் வரவேற்கிறேன் இறப்பின் வருகையையும் புறப்பாட்டையும்
தன் ஆடைகளினால் என்னை மூடிவைப்பான் என்பதால்
இவ்வுலகம் எப்படிப்பட்ட இடமெனில்
இங்கிருப்பவர் இருக்கும் அறிவனைத்தும் பெற்றால்
அழமாட்டார் இங்கு இல்லாதவருக்காக.
எண்ணிலடங்காத் துன்பங்கள் எத்தனை பேரை கொண்டுவந்தன
தன் கைகளின் கீழும் நெஞ்சோடணைத்தும் !
வகிர்ந்தெடுக்கிறது, வெட்டிச் சாய்க்கிறது தன் வாட்களைக் கொண்டு நம்மை
வீட்டிலேயே நம்மை ஈட்டி கொண்டு குத்துகிறது,
நிச்சயச் சிறகுகள் கொண்ட அம்புகளால்.
செல்வமும் செல்வாக்குமாய் அதன் பரிசுகளை வென்றவர்கள்
கொஞ்ச தூரம்தான் தள்ளி நிற்கின்றார்கள்
பரிசுகளை இழந்தவர்களை விட்டும்.
* * *
என்ன வினோதம், எவ்வளவு விரும்புகிறான் மனிதன்
துர் நாற்றத்தின் தாயை, திட்டிக்கொண்டே !
7
காலம் உன் வெற்றிக்கு உதவுமானால் விரைவில்
உன் எதிரியையும் பழி தீர்க்க வைக்கும்.
பகலின் உஷ்ணங்கள் எடுத்துக்கொள்கின்றன யுத்தத்தில் எஞ்சியதென
ஈரவிடியல்கள் விட்டுச் சென்றதை.
8
ஓ தாமின் மகனே, போகும்போதே தங்கிக்கொள்கிறாய் நீ
உறங்கியும் கொள்கிறாய் உனக்கான உறைவிடத்தில்,
இரவு முழுவதுமான பயணத்தில்.
இவ்வுலகில் தங்குவோர் அனைவருக்கும் உள்ளது லாபம் பற்றிய நம்பிக்கை
எனினும் வாழும் மனிதர் அனைவரும் எப்போதும் நஷ்டவாளிகளே
கிழக்கிலும் மேற்கிலும் எங்கு நோக்கினும் குருடர்கள்
தாங்கள் சாய்ந்து கொள்ளும் கழிகளை சொத்தாக எண்ணிக்கொண்டு.
9
என் சைகளின் முத்துக்களை நான் கோர்க்கும்போது
ஐயகோ, வாழ்வின் குறுகிய நூல் போதவில்லை.
பெரிய பெரிய பக்கங்களும் போதவில்லை
மனிதனின் முழு நம்பிக்கையையும் கொள்ள,
மனித வாழ்வோ ஒரு மகாதொகுப்பு.
10
பல இனங்களின்மீது பரவியது பகலவனின் வெளிச்ச வலை
அவிழ்த்தது தன் முத்துக்களை, ஒரு நூல் கூட விட்டுவிடாமல்.
இந்த பயங்கர உலகம் பரவசப்படுத்துகிறது,
அவள் பெற்றெடுக்கும் அனைவரும்
அநித்யக் கோப்பையிலிருந்தே குடித்தாலும்.
கெடுதிகளின் தேர்வு : எது வேண்டும் உனக்கு ?
மடிந்து வீழ்தலா வேதனையான வாழ்வா ?
11
தனது கேவலமான நோக்கங்களுக்காக
ஏறுகிறான் மேடை
மறு உயிர்ப்பில் நம்பிக்கை இல்லாவிடினும்
கேட்போரை அச்சுறுத்துகிறான்
நினைவுகொள்ளலை ஸ்தம்பிக்க வைக்கும் தன்
கடைசி நாளைப் பற்றிய கதையை அவிழ்த்துவிடும்போது.
12
உன் சிந்தனை தூண்டிய நெருப்பு
உன்னருகில் ஒரு பாதையைக் காட்டியது
உன்னை வழி நடத்த
ஒளியை நீ தேடிக்கொண்டிருக்கும்போது.
வானசாஸ்திர வல்லுனர்களும், மந்திரவாதிகளும்,
குறிசொல்பவர்களும் ஏமாற்றுக்காரர்கள்,
இவரெல்லாம் மறைக்கின்றனர் நேர்மையற்ற சுயநலப் பேராசையை.
வயசான பிச்சைக்காரனின் கைகள் நடுங்கினாலும்
வாங்கிக்கொள்ள மறுப்பதில்லை எப்போதுமே.
13
சத்தியத்தை மறைக்கிறது செல்வம்,
கிளம்பிவிடுகிறது வெளியில் குறைபாடுகளின் குரல்
அனைத்துப் பிரிவுகளும் அகமகிழ்கின்றன
அதற்கு மரியாதை செய்ய.
முஸ்லிமுக்கு கிடைக்கவில்லை ஜகாத்
பள்ளிவாசலை விட்டு செல்கிறான் பக்கத்து தேவாலயத்துக்கு.
14
யார் காப்பாற்றுவார் என்னை
பொருத்தமற்று புகழும் நகரத்தில் வசிப்பதினின்றும் ?
பணக்காரன், பக்திமான், பண்டிதன் : இப்படிப்பட்டது எனது புகழ்
எனினும் எனக்கும் அவற்றுக்கும் இடையில் எத்தனையோ தடைகள்.
* * *
அறியாமைக்குக் கடன்பட்டிருந்தேன், அறிஞனாக அறியப்பட்டபோது
சிலரால் - அதிவினோதமில்லையா என் நிலை ?
உண்மையில் நாமனைவரும் உருப்படாதவர்கள்
உன்னதமானவனல்ல நானோ அவர்களோ.
வாழ்வின் இறுக்கமான பிடியை பொறுக்கமுடியவில்லை எனது உடம்பால்
அழிவையும் எப்படி அணைக்க வைப்பது ?
ஓ மரணத்தின் மாபெரும் பரிசுகளே ! அவன் கொண்டுவருகிறான்
வலியின் பின் வசதியையும்
சப்தத்தின் பின் நிசப்தத்தையும்.
15
நின்று வணங்கு நாயனை நன் பகலில்
பொறுத்துக்கொள் கவனிப்பை, முடியும்போது.
உனக்குப் பிடித்த உணவை உன்
தாராளக் குதிரைக்கும் தந்து சமபங்களிப்பதே சரியானது.
மின்னும் எண்ணெயும் உலர்ந்த திராட்சையும்
உனக்கு முன்னால் வைத்துக்கொள் உணவாக ..
குறைவு என்றாலும் அதுவே நிறைவு.
குடிப்பதற்கொரு களிமண் ஜாடி போதும்
விரும்பாய் நீ வெள்ளியிலோ தங்கத்திலோ.
கோடையில்
உன் நிர்வாணம் மறைக்கும் துணிகளே போதும்;
பருத்த நாட்டுத்துணி பனிக்காலத்துக்கு.
நான் தடைசெய்கிறேன் நீ நீதிபதியாயிருப்பதை
பள்ளிவாசல்களில் பிரசங்கமும் வேண்டாம்
தொழுகையையும் நடத்த வேண்டாம்;
தளபதியாகவும் வேண்டாம் சாட்டையுடன்
வீரன் வெளிப்படுத்தும் வாளைப்போல.
நெருங்கிய உறவினரிடமும் நல்ல நண்பரிடமும்
நேசிக்கவில்லை நான் இவற்றை.
இஷ்டப்படி செலவு செய் உனது ஆன்மாவை
அல்லது காப்பாற்று.
அவமானமாயுள்ளது சிலரது ஆதரவு :
ஒப்படைத்துவிடு உன்னை
அவனது நித்திய அக்கறைகளிடம்
அவனைப் பற்றிய பயங்களினால் அலங்கரிக்கட்டும்
உன் மனைவி தன்னை
முத்துக்களையும் மரகதங்களையும் மிஞ்சி மின்ன.
அனைத்தும் புகழ்கின்றன அவனை :
காகங்களின் கரைசலும் வெட்டுக்கிளியின் வாய்மொழியும்
பறைசாற்றுகின்றன அவன் புனிதத்தை.
அவை உனது கண்ணியத்தை
எல்லாப்புகழும் உள்ள இடத்தில் :
மலை நாட்டுக் காற்றைத் தேடும்
பள்ளத்தாக்கில் வசிப்பவனல்ல அவன்.
16
இம்மையின் சிறப்புகள் வெளிப்படும் மனிதகுலமே -
தலைவர்கள் தங்களுக்குள் நிறுவும் ஆட்சியெல்லாம்
வளரும் அல்லது தேயும் நிலவின் காட்சிகள்தான்.
பிள்ளைகளின்மீது கொண்ட பாசத்தை
செய்கையினால் நிறுவமுடியுமெனில்
ஞானத்தின் ஒவ்வொரு சொல்லும்
பிள்ளை பெறாமலிருக்கச் சொல்லும்.
17
இரண்டு விதிகள் நம்மை இறுக்கிப்பிடிக்கின்றன இன்னும்
நாளையும் நேற்றும்
இரு பெரும் பாத்திரங்கள் இறுகத்தழுவுகின்றன
நம்மைச் சுற்றி - காலமும் இடமும்.
இயக்கியவனின் இலக்கு என்னவென
இயம்பும்போதெல்லாம் நாம்
கேட்கிறது ஒரு பதில் குரல்
மனிதர்கள் சொல்லாத சொல்.
18
குற்றத்தை தண்டிப்பது தவறு
குற்றவாளிகளாக விதிக்கப்பட்டிருப்பின்.
தாதுப்பொருளை கடவுள் படைத்தபோது
அவருக்குத் தெரியும் ஒரு காலத்தில்
அவைகள் காரணமாகும்
இரும்புச் சேணம் பூட்டப்பட்ட,
இரும்பு லாடமடிக்கப்பட்ட
குதிரைகளின் பிடரிகளிலிருந்து
ரத்தத் துளிகள் சொட்டும் வாட்களாய் மின்னும் என.
19
இவ்வுலகில் வடிவம் தரும் உடல்
ஒரு ஜாடி; ஏமாந்து விடாதே ஆன்மாவே !
நீ தேன் ஊற்றும் கோப்பை மலிவானது
உள்ளே உள்ளதோ விலை மதிப்பற்றது.
20
சிரிக்கிறோம் நாம், நமது நகைப்போ நகைப்புக்குரியது.
நாம் அழலாம், கடுமையாகவே
கண்ணாடியைப் போல சிதறடிக்கப்படுகிற நாம்
திரும்ப வடிவமைக்கப் படாமலே.
குறிப்புகள்
-------------
1. தவ்ராத், சபூர், இன் ஜீல், ஃபுர்கான்(குர் ஆன்) ஆகிய நான்கு வேதங்களும் முறையே தாவூது(டேவிட்),
மூஸா(மோசஸ்), ஈஸா(மரியத்தின் மகன் என்று குர் ஆனில் குறிப்பிடப்படும் இயேசு கிறிஸ்து), முஹம்மது
ஆகியவர்களுக்கு அருளப்பட்டதாக இஸ்லாம் கூறுகிறது.
2. கிஸ்ரா - பாரசீக (ஈரான்) மன்னர்
3. துர் நாற்றத்தின் தாய் - இந்த உலகம்.
ஒருவரைத் திட்டும்போதோ புகழும்போதோ ஒன்றின் தந்தை என்றோ தாய் என்றோ சொல்வது அரபியரின்
பழக்கம். முட்டாள் என்று திட்டுவதற்கு பதிலாக, அறியாமையின் தந்தையே (யா அபூ ஜஹில்!) என்பார்கள்.
ஒருவர் ரொம்ப தூசி படிந்த மேனியராக இருந்தால், தூசியின் தந்தையே (யா அபா துராப்!) என்பார்கள்.
அந்த முறையில்தான் இந்த உலகம் துர் நாற்றத்தின் தாய் என்று கவிஞரால் வர்ணிக்கப்படுகிறது. தந்தை என்பதும்
தாய் என்பதும் காரணகர்த்தா, பிறப்பிடம் என்ற அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது.
4. ஜகாத் - (முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான) ஏழை வரி.
-- புது எழுத்து 7, 2003
நன்றி திண்ணை / Thursday November 13, 2003