Monday 31 August, 2009

பவுனு பவுனுதான்

கடந்த 19.08.2009 ஆம் ஆண்டு புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு நாகூர் தர்கா உட்புறம் திறந்த வெளி அரங்கில் நாகூர் தர்கா ஆஸ்தான சங்கீத மகா வித்வான் உயர்திரு S.M.A. காதிர் அவர்கட்கு "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

25.08.1952 - ஆம் ஆண்டு நாகூர் தர்கா வித்வான் என்ற சிறப்புப் பதவி அளிக்கப் பெற்ற இவரை 57 வருடங்கள் கழித்து இதே மாதத்தில் இம்மாமனிதனின் மணிமகுடத்திற்கு மேலும் ஒரு சிறகினைச் சொருகி அழகு பார்த்திருக்கிறது நாகூர் தமிழ்ச்சங்கம்.

வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை என்று உணர்த்தியிருக்கிறது நாகூர் தமிழ்ச் சங்கம். பிறந்து இரண்டரை வயதான தத்தித் தவழுகின்ற இந்த குழந்தை 86 வயதான இந்த சங்கீத சாம்ராட்டினை வாழ்த்தியிருப்பது நமக்ககெல்லாம் பெருமை.

ஆங்கிலத்தில் "Better Late than Never" என்பார்கள். இந்த பாராட்டு தாமதமாக வந்தடைந்தாலும் தகுந்த நேரத்தில் கிடைத்திருப்பது நமக்கு மட்டிலா மகிழ்ச்சி.


யான் வாசித்தளித்த கவிதை இது :

"சுவைப்போர்" நிறைந்த ஊர்
இந்த ஊர் - என் சொந்த ஊர்
ருசியைச் சுவைப்போரும்
இசையைச் சுவைப்போரும்
வசிப்போர் இந்த ஊர்

"வாரரோ வாராரோ
ஞானக்கிளியே"
என்று பாடிய
கானக்குயிலுக்கு
வாழ்த்துப்பா பாட
[பாப் (Pop) ஆட அல்ல]
வாய்த்தமைக்கு
வல்லோனை வணங்குகிறேன் !

சரீரம் தளர்ந்தாலும்
சாரீரம் தளராத
வீரியமிக்க
ஆரிய வாசம் வீசும்
ஸ்வரம் இவர் வசம் - இது
இறைவன் கொடுத்த வரம் !

மரபிசைக்கு ஒரு ICON
இந்த மேதகு மரைக்கான்

இவருக்கு சங்கீதமும் தெரியும்
இங்கிதமும் தெரியும்

பாடிப் பாடியே
பாடி இப்படியே
(இப்போது தான் Body இப்படி!)
பணக்காரன் ஆனவர் இவர் !!

ஆம் .. .. ஒருகாலத்தில்
பெரும் பணக்காரனாய் இருந்து .. ..
பாடிப்பாடியே
பணக்காரன் ஆனவர் !!!

இவருக்கிருந்த செல்வத்தில்
மாளிகைகள் கட்டி இருக்கலாம்
ஆனால் ..
மாளிகைகள் ஒருநாளில்
மண்ணோடு மண்ணாக இடிந்து விடும்.

இவரிழைத்த
- ராகமாலிகை
- தாளமாலிகை
என்றென்றும்
எங்கள் காதுகளில்
தேனாய் இனிக்கும்.

பணக்கட்டுகளை காட்டிலும்
தாளக்கட்டுகளை கூடுதலாய் நேசித்தவர் - வீட்டின்
நடுக்கட்டில் இவர் பாடல்
களைகட்டும்

இவருக்கு இன்னும்
எத்தனையோ கோடிகள்
இறுக்கமாய் உண்டு
உண்மைதான் .. ..
சிஷ்ய-கோடிகள் பலவுண்டு

பாட்டென்றாலே
பலபேர் கத்துவான் - இந்த
பாட்டுடைத் தலைவன்
எல்லோருக்கும் வித்துவான்

இவருக்கு மணியான சீடர்கள்
many many - அதில்
தலையாய சீடர்தான்
இந்த "இசைமணி"

இவர் மட்டும்
ஐயர்வாளாய் இருந்திருந்தால்
இந்நேரம்
ஐநா வரை இவர் குரல்
எட்டியிருக்கும்

நாகூரில் பிறந்ததினால்
நாற்சுவரில் இவர் புகழ்
அடங்கிப் போனதோ?

திருட்டுத் தொழில்
இவர் தொழில்.
எத்தனை உள்ளங்களை
இவர் குரல் இதுவரை
கொள்ளை கொண்டிருக்கும்???

இவர் கலப்படக்காரர் ..
செய்ததோ முறையான கலப்படம்
கலப்படத்தில் அதுவென்ன
முறையான கலப்படம்?

இந்துஸ்தானியையும்
கர்னாடகத்தையும்
கலப்படம் செய்தது
நிருபணம்

- பாகேசீரி (நமக்கு ரவாகேசரிதான் தெரியும்(
- மால்கோஸ் (நமக்கு தெரிந்தது வெறும் முட்டைகோஸ்)
- மோகனம்
- சஹானா
- சுபபந்துவராளி
இவையனைத்தையும்
ஒன்றாக இணைத்து
பாடவல்ல வல்லமை
இவருக்குள்ள பெருமை

தர்பாரில்
கானடா ராகம்
இசைப்பவர் இவர்.
ஆம் ..
நாகூரார் தர்பாரில் !

தலைக்கனமில்லா இவருக்கு
ஆரோகணம் முதல்
அவரோகணம் வரை
அத்தனையும் அத்துப்படி

இவர் தொடாத ராகமில்லை .. ..
இவர் பாடாத புலவர்களில்லை ..

- உமறுப் புலவர்
- காசீம் புலவர்
- காலகவிப் புலவர்
- வண்ணக் களஞ்சியப் புலவர்
- ஆரிபு நாவலர்
- ஆபிதீன் புலவர்
- பண்டிட் உசைன்
- குணங்குடி மஸ்தான்
- கலைமாமணி சலீம்

ஆம் ..
இவர் தொடாத ராகமில்லை .. ..
இவர் பாடாத புலவர்களில்லை ..

- கும்மிப்பாட்டு
- குறவைப் பாட்டு
- ஞானப் பாட்டு- சாஸ்திரிய
கானங்கள் பாடியது பலநூறு
இவரை இவ்வூர் பெற்றது
நாம் செய்த பெரும்பேறு

தாளம் அறிந்த இவரை
ஞாலம் கண்டு கொள்ளாதது
காலத்தின் கோலம்

"சேதுசாரா" என்ற
ஆதிதாள உருப்படி - இவரை
உயரே கொண்டு சென்றது ஒருபடி

கிட்டப்பா பயின்ற
தாவுது மியான்
இந்த காதருக்கு
குருநாதர்

சென்னை சபாக்களில்
டிசம்பர் மாதமென்றாலே
சங்கீதம் களைகட்டும்
ஏன் தெரியுமா?
எங்கள் பாகவதர்
பிறந்த மாதம் அது.

சமய நல்லிணக்கத்திற்கு
இமயம்
இச்சங்கீதச் சிகரம்.
சமாதானத் தூதர்
இந்த காதர்

இவரை அழைப்பது
பவுனு வீட்டுத் தம்பி.
பவுனு பவுனுதான் !!

ஏழிசை கற்ற இவரை
வாழிய வாழியவென
வாயார வாழ்த்துகிறேன் !

- அன்புடன் அப்துல் கையூம்





ஆரம்பகால கட்டங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் நாகூர் வருகை தந்தபோது எடுதத படம்
ஆஸ்கார் நாயகனும் ஆஸ்தான பாடகனும்


இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒருமுறை நாகூர் தர்கா ஆஸ்தான வித்வான் எஸ்.எம்.ஏ. காதிர் அவர்களது சங்கீத மேன்மையைக் கேள்விப்பட்டு அவரைக் காண அவரது இல்லம் தேடி வந்திருக்கிறார்.

உலகமே போற்றி வியக்கும் ஆஸ்கார் நாயகனை நடுக்கட்டில் அமர வைத்துவிட்டு தந்தையை அழைப்பதற்காக உள்ளே சென்றிருக்கிறார் அவர் புதல்வன்.

“ஏ.ஆர்.ரஹ்மான் உங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்காஹா வாப்பா” என்று மகன் சொல்ல கசங்கிப்போன கைலியும், கிழிந்துப்போன முண்டா பனியனும் அணிந்திருந்த சங்கீத மேதை, அவரை சந்திப்பதற்காக அப்படியே கிளம்பியிருக்கிறார்.

“வாப்பா!~ பனியன் கிழிஞ்சிருக்கு வேற உடுப்பு போட்டுக்கிட்டு போங்க” என்று மகன் அன்புக்கட்டளை போட வித்வானுக்கு வந்ததே கோவம்.

“ஓய் அவரு என்னை பார்க்க வந்திருக்காரா? இல்லே என் சட்டையை பார்க்க வந்திருக்காரா?” என்று எரிந்து விழ, மீறி வற்புறுத்தினால் எங்கே முரண்டு பிடித்து ஏ.ஆர்.ரஹ்மானை பார்க்க மறுத்து விடுவாரோ என்று மகன் அமைதியாகி விட்டார்.

கவிஞர் ஜபருல்லாஹ்வின் பாஷையில் சொல்லப்போனால்
“அட.. இப்படியும் ஒரு மனிதரா..?



நாகூரின் பொக்கிஷம்


- நாகூர் ரூமி

நாகூரின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான நாள். மதிக்க வேண்டியவர்களையும், மதிக்க வேண்டியவைகளையும் மதிக்காமல் போவதும், மதிக்கக் கூடாதவற்றையெல்லாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவதும்தான் நாம் படும் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம். அதை மாற்றி, நாகூர்த் தமிழ்ச்சங்கம் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஒரு காரியத்தைச் செய்திருக்கிறது. அதற்காக முதலில் என் பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன். நேரில் வந்து என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாத என் சூழ்நிலைக்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

நாகூருக்கென்று பல சிறப்புக்களுண்டு. அவற்றில் மிகமிக முக்கியமானவை ஆன்மிகம், இலக்கியம், இசை என்ற இம்மூன்றும். மூன்றுமே ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவைதான். அந்தக் காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் பெரும்பாலும் ஆன்மிக இலக்கியங்களாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. குலாம் காதிர் நாவலர் அவர்களின் ‘கன்ஜுல் கராமாத்' தொடங்கி, என்னுடைய ‘நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர்' என்ற நூல்வரையிலும் அந்த ஆன்மிக இலக்கிய பாரம்பரியம் நீள்கிறது. இன்னும் நீளும்.

இசையைப் பொறுத்தமட்டில் நிறைய ஆளுமைகளை நாம் பார்க்க முடியவில்லை. இசையில் மிகப்பெரிய ஆளுமையாக முதலில் இருந்தது பெரிய எஜமான்தான். இதுகூட எனக்கு எனது இசை குருநாதர், என் நண்பர் நூர் சாதிக்கின் வாப்பா அவர்கள் சொல்லித் தெரிய வந்ததுதான். எஸ்.எம்.ஏ.காதர் என்று சட்டென்று பெயரைக் குறிப்பிட என் மனம் தயங்குகிறது. எனவே தேவைப்படும் இடங்களில் ‘எஸ்.எம்.ஏ.கே.' என்று குறிப்பிட அனுமதி கோருகிறேன். அவர்களோடு எனக்கு ஏற்பட்ட இரண்டு ஆண்டுகால நெருக்கமான அனுபவம் என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த ஒரு அருள் என்றுதான் நான் சொல்லுவேன்.

இசை என்பது இஸ்லாத்துக்கு விரோதமானது என்று சொல்பவர்கள் அல்லது நினைப்பவர்கள் கற்பூர வாசனை அறியாதவர்கள். இறைவனோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு சில சிறந்த வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று இசை என்பது என்னுடைய அனுபவம். ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்கள் ஒரு இசை மேதை என்பதை நான் புரிந்து கொண்ட, ஒவ்வொரு நாளும் அனுபவித்த காலகட்டம் அது.

நான் எம்.ஏ. படித்து முடித்து வேலையில்லாமல் இருந்த காலகட்டம் அது. ஒருநாள் நானும் நண்பர் பிலாலும் கடற்கரையில் அமர்ந்து இசை பற்றியும் பாடல் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அவர்தான் ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களிடம் சங்கீகதம் கற்றுக்கொண்டால் என்ன என்ற ஒரு கருத்தை எனக்குள் ஏற்படுத்தினார். உடனே தாமதம் செய்யாமல் நேரே புதுமனைத் தெருவில் இருக்கும் ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களின் வீட்டுக்கு நாங்கள் சென்றோம்.
அடடே, நீங்க ஷரீஃப் பே மாமாட பேரனாச்சே என்று சிரித்துக் கொண்டே சொன்னாலும், சங்கீதம் ரொம்ப கஷ்டமாச்சே என்றும் சொன்னார்கள். என்றாலும் ஒரு பாட்டுப் பாடுங்கள் என்று என்னிடம் சொன்னார்கள். நான் திருவிளையாடல் திரைப்படத்தில் வரும், ‘ஒரு நாள் போதுமா' பாடலைப் பாடிக் காட்டினேன். சொல்லிக் கொடுத்தால் எனக்கு சங்கீதம் வரும் என்று அவர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். உடனே நல்ல நாள், நேரம் பார்த்து என்னை வரச் சொன்னார்கள்.

அன்று தொடங்கியது என் இசை வாழ்வு. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம் பயிற்சி. ஒவ்வொரு நாளும் ஒரு அல்லது இரண்டு கச்சேரிகள் செய்வது போன்ற களைப்பு அவர்களுக்கு ஏற்படும். தம்பூரா மீட்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ஸ்வரங்கள் சொல்ல வேண்டும். தப்பாமல் தாளம் போட வேண்டும். இப்படி நிறைய நுணுக்கமான விஷயங்கள் அதில் உண்டு.

ஏழெட்டு ஆண்டுகள் பயின்றால் எவ்வளவு கற்றுக்கொள்ள முடியுமோ அவ்வளவு பாடத்தை எனக்கு ஆறே மாதங்களில் அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு அதில் சந்தோஷம் இருந்தது. எனக்கு ஆர்வம் இருந்தது. அவ்வப்போது சோட்டு மியான், நன்னு மியான், தாவுத் மியான் கான் ஆகியோரின் வரலாறுகளையும் எனக்கு சொல்லிக் காட்டுவார்கள்.

எனக்கு பிரமிப்பாக இருக்கும். அதற்கு பல காரணங்கள். இந்தியாவைப் பொறுத்தவரை இசை என்று சொன்னால் வடக்கில் முஸ்லிம்களின் ஆதிக்கமும், தெற்கில் பிராமண வித்வான்களின் ஆதிக்கமும்தான். ஷெனாய் என்றால் பிஸ்மில்லாஹ் கான், சரோத் என்று சொன்னால் அலி அக்பர் கான், தப்லா என்று சொன்னால் அல்லாஹ் ரக்கா அல்லது ஜாகிர் ஹுசைன் - இப்படித்தான் வடக்கில் பெயர்கள் இருக்கும். ஹிந்துஸ்தானி இசையில் வடக்கில் முஸ்லிம்களின் கொடிதான் பறந்து கொண்டிருந்தது. இன்னும் இருக்கிறது. தெற்கே கர்நாட இசை என்று சொன்னால் அது பெரும்பாலும் பிராமண வித்வான்களின் கையிலும் வாயிலும்தான் இருந்தது. மற்ற ஜாதிக்காரர்கள் இருந்தாலும் எண்ணிக்கையில் ரொம்பக் குறைவு. இதை நான் விமர்சனமாகச் சொல்லவில்லை. நடப்பு நிஜமாகச் சொல்கிறேன். மணி அய்யரிலிருந்து உன்னி கிருஷ்ணன் வரை இதுதான் உண்மை. சினிமா இசையில்கூட இளையாராஜாவுக்கு முன் அதுதான் உண்மையாக இருந்தது. இந்த சூழ்நிலையில் ஒரு முஸ்லிம், அவர்களுக்கு இணையாக, சமயங்களில் அவர்களைவிட சிறப்பாக இசைத்துறையில் மின்ன முடியும் என்பது ஒரு அற்புதம்தான்.

அந்த அற்புதத்துக்கு சொந்தக்காரர் என்னுடைய குரு ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்கள் என்று சொன்னால் அது மிகையே அல்ல. இதை நான் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன். எனக்குத் தெரியும். அவர்களுடைய குருநாதர் தாவூத் மியான் அவர்கள் கர்நாடக இசையிலும், ஹிந்துஸ்தானியிலும் வல்லுணர். எனவே ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களும் இரண்டிலுமே பாண்டித்தியம் பெற்றிருந்தார்கள். மிக விரிவாக என்னால் பேச முடியும் என்றாலும் கேட்பவர்களுக்கு இசை ஞானம் இல்லாதிருப்பின் புரியாமல் போகக்கூடும் என்ற அச்சத்தால் ஒரு சில உதாரணங்களை மட்டும் நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களின் கச்சேரி எங்கே நடந்தாலும் நானும், நண்பர்கள் பிலாலும் ஆபிதீனும் போய் முடியும்வரைக் கேட்போம். ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களுடைய ஸ்வர ஞானமும் தாளம் பிசகாத பாடலும் எங்களுக்கு மட்டுமல்ல, இசை அறிந்தவர்களுக்கும் பிரமிப்பு ஊட்டக்கூடியவை.

உதாரணமாக, ஸ்வரம் பாடுவதில் முதல் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் காலம் என்று ஒரு கணக்கு உண்டு. ஒரு பாடலுக்கு ஸ, க, ரி, க என்று நான்கு ஸ்வரங்களை ஒரு தாளத்தில் முதல் காலத்தில் பாடினால், அடுத்த காலத்தில், அதே தாளத்தில், அதாவது அதே நேரத்துக்குள், எட்டு ஸ்வரங்களைப் பாடவேண்டும். மூன்றாம் காலத்தில் அது பன்னிரண்டாக இருக்க வேண்டும். இது ஒரு பாரம்பரிய சங்கீத கணக்கு. இந்த கணக்கின்படி இன்றைக்கு மூன்று காலத்திலும் பாடும் ஒரு வித்வான்கூடக் கிடையாது. ஒரே ஒருவர்தான் உண்டு. அது எனது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்கள் மட்டும்தான் என்று நான் அடித்துக் கூறுவேன்.

பால முரளி கிருஷ்ணா, பீம்ஷன் ஜோஷி, ஜேசுதாஸ், ஸ்ரீனிவாஸ், எம். எஸ்., சுதா ரகுநாதன் என்று பலருடைய பாடல்களை நான் தொடர்ந்து கேட்டுள்ளேன். மிகத்துரிதமாகப் பாடும் மூன்றாம் காலத்தில் யாருமே பாடுவதில்லை. காரணம் அது அவ்வளவு கடினமான சாதகம் என்பதுதான். இந்தக் காலத்து வித்வான்கள் எல்லாருமே ஃபாஸ்ட் ஃபுட் மாதிரியான வித்வான்கள்தான். நான் மேலே சொன்ன யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனாலும் ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்கள் ஒவ்வொரு கச்சேரியிலும் கொடுக்கும் அந்த துரித கால இசையனுபவத்தை அவர்கள் கொடுக்கவில்லை என்பதே உண்மை.

நான் இதுவரை சொன்னதற்கு நேர் மாறான ஒரு திறமையும் ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களிடம் நான் கண்டேன். அதுதான் தாளக்கட்டு பின்னோக்கிப் போய்க் கொண்டே இருப்பது. வரையறை செய்யப்பட்ட தாள கதியில் ஒவ்வொரு காலத்துக்கும் தாளம் பின்னால் போய்க்கொண்டே இருப்பதைப் போன்றது இது. இதை வார்த்தைகளில் என்னால் விளக்க முடியவில்லை. ஆனால் பல முறை ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்கள் இப்படிப் பாடும்போது வயலின் வித்வான்கள், மிருதங்க வித்வான்கள் தங்களால் வாசிக்க முடியவில்லை என்று கைகூப்பி வணங்கி மன்னிப்புக் கேட்டுவிட்டு வாத்தியங்களைக் கீழே வைத்ததை நான் பார்த்திருக்கிறேன்.

‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்கள் நாகூருக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். ஆனால் அவர்கள் முஸ்லிமாக இருந்துவிட்ட காரணத்தினால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அளவுக்கு மரியாதையும் அங்கீகாரமும் கிடக்காமல் போய்விட்டது துரதிருஷ்டமே. இஸ்லாத்தில் இசை கூடாது, கோயில்களில் பாடக்கூடாது என்றெல்லாம் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சாதனையின் உச்சத்துக்குப் போகமுடியாமல் அவர்களைத் தடுத்துவிட்டன என்பதுதான் உண்மை. இல்லையெனில், ஒரு ஏ.ஆர்.ரஹ்மானை இந்த உலகம் அறிந்திருப்பது மாதிரி சங்கீத உலகம் ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களையும் கொண்டாடி இருக்கும்.

எனக்கு வேலை கிடைத்துவிட்ட காரணத்தினால் சங்கீதப் பாடங்களைத் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது, ஒரு நாள் நானும், ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களும், அவர்களுடைய பேரர் ராஜாவும் உட்கார்ந்திருந்தோம். அப்போது நான் வர்ணம் என்ற பாடம் வரை வந்திருந்தேன். அடுத்தது ராகம்தான். அவர்கள் இல்லாமலே நான் எப்படி மேலும் கற்றுக்கொண்டு அப்பாடங்களைத் தொடர்ந்து வித்வானாவது என்று அன்று ராகங்களுடைய அடிப்படைகளையெல்லாம் ஆரோகரணம், அவரோகணத்தோடு அவர்கள் பாடிக்காட்டினார்கள். என் நண்பர் பிலால் சிறப்பான முறையில் அதைப் பதிவு செய்தார். அந்த ஒலிநாடா என்னிடம் இன்னும் உள்ளது. அதைப் போன்ற ஒரு காரியத்தை வேறு யாரும் செய்ய முடியாது. நான் இதை ஒரு சவாலாகவே இங்கே சொல்லுவேன்.

அவர்கள் என்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கும் உழைப்புக்கும் ஏற்ற மரியாதையை செய்யவில்லையோ என்ற குற்ற உணர்ச்சி என்னிடம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

மால்கோஸ் ராகம் பாடச் சொல்லி தாவூத் மியானின் கால் வியாதியைக் குணப்படுத்திய பெரிய எஜமான் வாழும் இந்த ஊரில் எஸ்.எம்.ஏ.கே. அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களைக் கௌரவப்படுத்தும் இந்த முயற்சியானது சரியானதும், பாராட்டத்தக்கதும், நமது கடமையும் ஆகும்.

SMA காதர் என்று அவர்கள் அறியப்படுவது மிகவும் பொருத்தமானது என்று நினைக்கிறேன். SMA என்பதை ‘சங்கீத மேதை ஆன' என்பதன் சுருக்கமாக வைத்துக் கொள்ளலாம். SMA காதர் என்றால் ‘சங்கீத மேதையான' காதர் என்று பொருள். ஆங்கிலத்திலேயே சொல்ல வேண்டுமெனில், Sacred-music Master Artist காதர் என்று சொல்லலாம். ஏனெனில் இஸ்லாமிய வரலாற்றையும், இஸ்லாத்தின் புகழையும் பரப்ப கர்நாடக சங்கீதத்தைப் பயன்படுத்திய மேதை ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்கள் ஒருவர்தான்.

அவர்களுடைய எல்லா எல்.பி. ரெகார்டுகளும், கேஸட்டுகளும் சேகரிக்கப்பட்டு வலைத்தளத்தில் ஏற்றப்பட்டு இந்த உலகமே கேட்டுமாறு வழிவகை செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளை கையூம், ஆபிதீன் போன்ற இணையம் அறிந்த நண்பர்கள் செய்யலாம். நானும் அதில் நிச்சயம் உதவுவேன். தமிழ்ச்சங்கம் அதற்காக பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் ஒரு வேண்டுகோளையும் வைக்கிறேன்.

நேரில் வரமுடியாவிட்டாலும், ‘எஸ்.எம்.ஏ.கே.' அவர்களின் காலைத் தொட்டு மரியாதை செய்து அவர்களின் ஆசி பெற்றவனாக இதை முடித்துக் கொள்கிறேன். அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வேண்டும் என்று உங்களைப் போலவே நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

நாகூர் ரூமி
டாக்டர் ஏ.எஸ்.முஹம்மது ரஃபி
ஆங்கிலத் துறைத்தலைவர்
மஜ்ஹருல் உலூம் கல்லூரி
ஆம்பூர்.

தொடர்புடைய சுட்டி : இசையும் இறைவனும்

அவரோகணம்

இஸ்லாத்தில் கவிதை



அட.. இப்படியும் ஒரு மனிதரா..?
- கவிஞர் இஜட். ஜபருல்லாஹ்
வாழ்க்கையை எல்லோருக்கும்
பகிர்ந்து கொடுத்துவிட்டு
இசையை மட்டுமே –
சொத்தாய் வைத்துக் கொண்ட
இவர் – மனிதனுக்கும் மேலே..!
இதனால்தான் என்னவோ?
இரும்புப் பெட்டியை தூரப் போட்டுவிட்டு
கிராமபோஃன் பெட்டியை
பக்கத்தில் வைத்துக்கொண்டு இருக்கிறாரோ?

இவர் வீட்டில்
வெள்ளித் தட்டுகள்
உணவு மேசையில்
சாதாரணமாய் கிடக்கும்..!
இசைத்தட்டுகள் மட்டும்
பூட்டிய அல்மாரிக்குள்
பத்திரமாக இருக்கும்..!

அட இப்படியும் ஒரு மனிதரா..?
“மனைவிக்கு மரியாதை”
இவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்..
“வாங்க.. போங்க.. என்னங்க..
சொல்லுங்க..” – “அவங்க சொன்னாங்க”
இவைகள் எல்லாம் – இவரின்
இல்லற அகராதியில் –
மனைவியுடன் பேசும்
அன்பில் தோய்ந்த சொற்கள்..!

இவர் –
நல்ல குடும்பத் தலைவர்
நல்ல கணவர் ..
நல்ல தந்தை .. மட்டும் அல்ல..
நல்ல நடத்தைகளை
சொல்லிக் கொடுத்த ஆசான்..!

இவர் தங்கம்..
அதனால்தான் இவர் பிள்ளைகள்
வைரமாக ஜொலிக்கிறார்கள்..!

அட.. இப்படியும் ஒரு மனிதரா..?
இவர் - சட்டக் கல்லூரிக்குப் போகாத
நீதிபதி..!
இவரின் “நடுக்கட்டு சபை”
நாகூரில் பிரபலம்.
இது – கோர்ட்டு அல்ல ..
சான்றோர் சபை..!
இதில் – சட்டம் பேசாது..!
நீதி – சொல்லும்..!
தர்மம் – தீர்ப்பு வழங்கும்..!
“மேல் முறையீடு”
இன்றுவரை இல்லை..!

சம்பந்திகள் சச்சரவு
சொத்துப் பிரச்சனைகள்
முகத்தில் இனி முழிக்கவே மாட்டேன்
என வருபவர்கள் – நெஞ்சோடு நெஞ்சு
அணைத்துக் கொண்டு –
சிரிப்போடும் - சிறப்போடும் போகும் காட்சி
மந்திரம் அல்ல..
இந்த மனிதரின் சாதனை..!

“உங்களாலேத்தான்
எல்லாம் நல்லபடியா முடிஞ்சுச்சு..!
ரொம்ப நன்றிங்க..” என்று சொன்னால் –
நம்மகிட்ட என்னா இருக்குது..
பேசவைத்தவனும் அவன்தான்..!
எல்லாம் அவன் கையிலே..!
செய்ய வைத்தவனும் அவன்தான்..!
நம்ப கையிலே ரேகைதான் இருக்குது..!
- என்றுச்சொல்லி கலகலவென சிரிப்பார்..!

இந்த சபையில் ஜூரிகளும் உண்டு…
B.A., காக்கா என்ற ஜலீல் காக்கா
இமாம் கஜ்ஜாலி காக்கா
M.G.K. மாலிமார் காக்கா
நாகை தமீம் மாமா ..

இந்த சரித்திர சபையில்
ஒருமுறை நான்
சாட்சியாய்ப் போனேன்
என் மதிப்பு கூடியது..!

நிதிபதிகள் –
அபராதம் போடுவார்கள்…
இவரோ – சிற்றுண்டி தருவார்
வடையும்/ தேநீரும்..!

இவர் சபையில் –
மனிதர்கள் வருவார்கள்…
மதங்கள் வந்ததில்லை..!

அட… இப்படியும் ஒரு மனிதரா..?
கற்பனையால் கயிறு திரித்து
மற்றவர்கள் எழுதிவைத்த
சரித்திரத்தால் –
வரலாற்று நாயகர்களாய்
வலம் வருவோர் நிறைய உண்டு..!

இவர் வாழ்க்கை வரலாற்றை
நேரில் சென்று கேட்டோம்..
இரண்டு மணி நேரம் சொன்னவர்
அவர் வரலாற்றை அல்ல..
அவர் குருவின் சரித்திரத்தை..!

அவர் உஸ்தாத் தாவூது மியான்
பிறந்த தேதி/ இறந்த நாள்
இவர் நினைவில் நிற்கிறது..!
இவர் – நாகூர் தர்கா ஆஸ்தான வித்வானாக
நியமனம் பெற்ற நாள் அல்ல..!
வருடமே நினைவில்லை..!
அட.. இப்படியும் ஒரு மனிதரா..?

“உமர் இஸ்லாத்தை தழுவிய சரிதை”
இவரின் – உன்னதமான பாடல்..!
இந்த பாட்டை பத்தாம் வயதில் கேட்டேன்..!
இன்றுவரை –
கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்..!
பாட்டு காதில் விழுகிறது..!
காட்சி கண்ணில் விரிகிறது..!

இவர் சுருதி –
இன்றுவரை மாறியதில்லை
இசையில் மட்டுமல்ல..!
வாழ்க்கையிலும்..!
ஏற்றம்/ இறக்கம் என்பதை
இசையில் ஆரோகணம்/ அவரோகணம்
என்பார்கள் – இசையில்
இவர் ஆரோகணம்/ அவரோகணம் அதிசுத்தம்..!
வாழ்க்கையில்.. ஆரோகணம் மட்டுமே..!

இவர் தாளம் –
எப்போதும் தப்பாது…
பாட்டில் மட்டுமல்ல..
வீட்டிலும்..!

86 வயது ஆயினும்
இதுவரை – அவரின் கைத்தடி
தம்பூராதான்..!

பாட்டால் நமக்கு அவர்
சொக்குப்பொடி போடுவார்..!
அவரோ – பட்டணம் பொடி போடுவார்..!

பாடிக்கொண்டு இருக்கும்போதே
அவர் வெள்ளை கைக்குட்டை
சமாதான கொடியைப் போல
மூக்கு வரை ஏறும்
உடன் இறங்கும்..!
பொடி போட்டது மூக்குக்கு மட்டுமே புரியும்..!
தும்மல் வராமல் பொடி போடும் மந்திரம்
இவருக்கு மட்டுமே/ தெரியும்..!

புனித மாதங்களின் முதல் பிறையில்
எல்லோரும் ஒதுவார்..!
இவர் பாடுவார்..!
இறைவனைத் துதித்து..!
அவன் –
தூதரை நினைத்து..!

மனிதர்கள் போல –
வாழ்ந்துக் கொண்டிருக்கும்
இந்த நாட்களில்
நாகூர் தமிழ்ச் சங்கம்
ஒரு உண்மையான மனிதரை கண்டுபிடித்து
“வாழ்நாள் சாதனையாளர் விருது”
கொடுக்கிறது..
விருது அவர்களுக்கு என்றாலும்
எங்களுக்கு அல்லவா
புகழ் வருகிறது..!

மாறி மாறி வேஷங்கள்
போடுகின்ற மனிதரிடை
தேறிவந்த மனிதர் இவர்
தெளிவான மனதுடையார்..!
கூறுகின்ற இவர் சொற்கள்
ஆறுதலை பிறக்க வைக்கும்..!
சேருகின்ற இடமெல்லாம்
வரவேற்பு சிறந்திருக்கும்..!

இசையாத பேர்களையும்
இசையவைக்கும் அன்பாளர்..!
இசையாலே மனம் தொட்டு
இன்பம் தரும் இசை ஆளர்..!
இறைநெறியில் நபிவழியில்
இணைந்திருக்கும் பண்பாளர்..!
இம்மைக்கும் மறுமைக்கும்
நலம் சேர்க்கும் நல்லடியார்..!

எப்போதும் சிரித்திருக்கும்
குழந்தை உள்ளம்..!
இவர் இசையை கேட்போரின்
இதயம் துள்ளும்..!
ஒப்பில்லா இவர்வாழ்க்கை
அன்பின் வெள்ளம்..!
உள்ளபடி இவர் நிறைவை
நாளை சொல்லும்..!

வல்லவனே..! யா அல்லாஹ்
யாசிக்கின்றேன்..! இவர்
வாழ்நாளை நலத்தோடு நீடிக்கச் செய்..!

- இஜட் ஜபருல்லாஹ்

Nagore Sessions - Sufi Songs

Ya Allah - Sufi Songs

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP