Monday 31 August, 2009

காரை தாரகை

கவிஞர்கள் உருவாக்கப் படுவதில்லை. கருவிலேயே உருவாகிறார்கள் என்பதற்கு காரை கஃபூர் தாசன் ஒரு நற்சான்று. பற்பல ஆண்டுகட்குப் பின் அவரை சந்தித்து உரையாடுவதற்கான ஒரு நல்வாய்ப்பு சென்ற வாரம் ஏற்பட்டது.

இயல்பாகவே இவருக்குள் கவித்துவம் குடிகொண்டிருப்பதை அடையாளம் காண முடிந்தது. அவரை இளமையில் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம்.

எழுதுகோல் மன்னருக்கு, நடப்பதற்கு ஊன்றுகோல் தேவைப்பட்டதைக் கண்டபோது, என் இதயத்துக்குள் யாரோ கன்னக்கோல் இட்டது போன்ற ஓர் உணர்வு.

இவர் இயற்பெயர் செ.மு.வாப்பு மரைக்காயர். பாரதிக்கு ஒரு தாசன் பாரதிதாசன் போல, அந்த பாரதிதாசனுக்கு ஒரு தாசன் சுப்பு ரத்தின தாசன் போல (சுரதா), என் ஆசான் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூருக்கு மானசீக சீடராய் வாய்த்தவர் இந்த சீலர். அவர்களின் எழுத்தாற்றலின்பால் காதற்கொண்டு தன்பெயரையே கஃபூர்தாசன் என்று மாற்றிக் கொண்ட காதலர்.

நானெழுதிய “போன்சாய்” கவிதை நூலை படித்துவிட்டு பாராட்டிய அவர் தானெழுதிய சில குறுங்கவிதைகளை – நினைவிலிருந்த சில வரிகளை - மனமுவந்து மொழிந்தபோது மெய்மறந்து போய்விட்டேன்.

“வெடிப்பன எரிமலைகள்
அணைக்க நீலிக் கண்ணீர்
வடிப்பன முதலைகள் !”

“பசுங்கொடிகள் படர்கின்றன
தோட்டம் காத்த வேலிக்குப்
பொன்னாடை !”

“பனிச்சறுக்கு விளையாட்டு’ என்றது ஊர்
வழிக்கி விழுந்தவள்
பணக்காரப் பெண் !”

“சுடர்முடி சுமப்பதென்றால் சும்மாவா?
திரிகளே .. .. !
தலை கருகுமே தயாரா ?”

இவையாவுமே கவிஞர் கைவண்ணம். என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியவை.

“வெட்டு வெட்டு வெட்டு, நகத்தை வெட்டு வெட்டு, அழுக்கு சேருகிறது !” என்று எழுதுபவர்களையெல்லாம் ‘கவிஞர்’ என்று ஏற்றுக் கொள்ளும் இவ்வுலகம் இவரைப்போன்ற அறிவாற்றல் மிக்கவரை கண்டு கொள்ளாமல் இருப்பதை நினைத்தபோது கண்கள் கசிந்தது.

‘குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிய கதையாக’ இவரின் கவித்திறமை வெளியுலகத்திற்கு தெரியாமல் போய்விட்டதே என்று மனது காயப்பட்டது.

கவிஞரின் கவித்துவ ஆற்றலை அறிந்துக் கொண்ட கவிஞர் சுரதா ஒருமுறை கஃபூர் தாசனை கவியரசு கண்ணதாசனிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். பெயர் காரணத்தை அறிந்துக் கொண்ட கவியரசர் “அட ! நம்ம அப்துல் கபூருடைய சிஷ்யனா?” என்று உரிமையோடு அரவணைத்து உபசரித்திருக்கிறார்.

பேச்சுப் போக்கில் கவியரசரைப் பற்றி தான் ஒரு கவிதை எழுதி வைத்திருப்பதாக நம் கவிஞர் கூற, கவிதை வரிகளைக் கேட்டு கவியரசர் வியந்துப் போயிருக்கிறார். ஒரு நோட்டு புத்தகத்தில் அவ்வரிகளை அவர்கைப்பட எழுதுமாறு உத்தரவிட்டு, கவிஞரின் கையொப்பத்தையும் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறார்.

இதுவரை எத்தனையோ பிரபலமான கவிஞர்கள், எத்தனையோ தருணத்தில், எத்தனையோ மேடைகளில் வானாளவ புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். அவைகளிள் ஏறாத போதை இவர் வரிகளைக் கேட்டதும் ஏற்பட்டிருக்கிறது.

இந்த பிரபலமாகாத சாதாரணக் (?) கவிஞனிடத்திலிருந்து பிறந்த முத்தான வரிகளை ஏன் கவியரசர் ஏன் விரும்பிக் கேட்டு பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்? இந்த சிலேடை வரிகளை படித்தாலே அந்த காரணம் நமக்கு புரிந்துப் போகும்.

“கண்ணாதாசனுக்கு” என்று தலைப்பிட்டு கஃபூர்தாசன் எழுதி வைத்த வரிகள் இவை :

“தாளில் எழுதுகிறோம்
தங்குவதே இல்லை
தண்ணீரில் எழுதுகிறாய்
நிலைத்து விடுகிறதே !

ஆனால்,
காடியில் கரையும்
முத்தையா நீ !”

ஆகா ! என்ன அற்புதமான காவிய வரிகள்..?

தமிழகமே போற்றிப் புகழும் ஒரு மகாகவிஞனிடம் போய் “நீ தண்ணி அடித்து விட்டு எழுதுகிறாய்” என்று சொல்வதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்?

தன் குறைபாடுகளை அறிமுகமேயில்லாத ஒருவன் சுட்டிக் காட்ட அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும் ஒரு மனப்பக்குவம் கவியரசர் கண்ணதாசன் ஒருவருக்குத்தான் இருக்க முடியும்.

இறுதி வரிகளில் காணப்படும் “காடி” என்ற வார்த்தைக்கு Vinegar என்று பொருள். ‘காடியில் கரையும் முத்து’ என்பது இங்கு ஒரு அருமையான குறியீடு. “முத்தையா !” என்று சிலேடையாக வருணிக்கப்பட்டிருக்கும் இவ்வார்த்தை கவியரசு கண்ணதாசனின் இயற்பெயர் என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

“அரிய ஆணிமுத்தாக ஜொலிக்க வேண்டிய நீ வினிகரில் போட்ட போட்ட முத்தாக உன்னை நீயே பாழாக்கிக் கொள்கிறாயே?” என்ற கஃபூர்தாசனின் ஆதங்கம் நம்மையும் ஆட்கொள்கிறது.

“ஓர் கையிலே மதுவும் ஓர் கையிலே மங்கையரும்
சேர்ந்திருக்கும் வேளையிலே சீவன் பிரிந்தால்தான்
நான் வாழ்ந்த வாழ்க்கை நலமாகும்; இல்லையெனில்
ஏன் வாழ்ந்தாய் என்றே இறைவன் எனைக் கேட்பான்”

என்று பாடிய கவியரசனை இந்த காரை தாரகையின் வரிகள் நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கும் அல்லவா?

தொடர்புடைய சுட்டி :

என் ஆசான்

கடலாய் விழுந்த மழைத்துளி

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP