Tuesday 21 April, 2009

கவிஞர் ஜபருல்லாஹ்வின் தூது




கவிஞர் இஸட் ஜபருல்லாஹ் எழுதிய "நிலவு சொன்னது!" என்ற வித்தியாசமான கவிதையை நான் அண்மையில் படித்து இரசித்தேன். "தூது விடு படலம்" என்பது ஒரு தனி 'ட்ராக்' இலக்கியம். பக்தியை ஊட்டும் நூலாகப் பிறந்த இது, நாளடைவில் சிற்றின்ப இலக்கியமாக மாறியது தனிக்கதை. 'அஃறிணை' பொருட்களை; அவை பேசாது என்று நன்கு தெரிந்திருந்தும் அவைகளோடு உரையாடுவது கவிஞர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள 'ஸ்பெஷல் லைசன்சு'.

அன்னம் விடுதூது, புறா விடு தூது, நாரை விடு தூது, கார் விடுதூது, வண்டு விடு தூது என்று நிற்பன, நடப்பன, பறப்பன என்று அனைத்தையும் (போஸ்ட்மேனைத் தவிர) தூது அனுப்புவார்கள் இந்த 'லைசன்சு ஹோல்டர்கள்'. "நாராய் நாராய்! செங்கால் நாராய்!" என்ற செய்யுளை பள்ளிப்பாடத்தில் படித்தது நினைவிருக்கலாம்.

(நாகூர்ப்புலவர்களாக இருந்திருந்தால் காடை, கவுதாரி, கொசு உல்லான், கோட்டுல்லான், குயில், பொன்னாந்தட்டான் என்று உண்ணும் பறவைகளாகப் பார்த்து தூது அனுப்பியிருப்பார்கள்)

காளிதாசன் 'மேக சந்தேசம்' என்ற காவியம் படைத்தான். "ஓடும் மேகங்களே! ஒரு சொல் கேளீரோ" என்று கண்ணதாசன் டி.எம்.எஸ். வாயிலாக மேகத்தை தூது விட்டான். "தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு; எங்கள் திருநபியிடம் போய்ச் சொல்லு" என்று கவிஞர் தா.காசிம் இசைமுரசு நாகூர் ஹனீபா வாயிலாக தூதுவிட்டார். "போகும் மேகங்களே! பூமான் நபிக்கு ஸலாத்தைச் சொல்லுங்களேன்! மதினாவில் வாழும் மஹ்மூது நபிக்கு மனத்தூதைக் கூறுங்களேன்" என்று அடியேனும் பாடகர் ஜெய்னுல் ஆபிதீன் மூலமாக தூதுவிட்டேன்.

இவையாவும் 'ஒன் வே டிராபிக்' தூது. இதோ கவிஞர் இஸட் ஜபருல்லா விடுத்திருக்கும் தூதை கவனியுங்கள். இது "டூ வே டிராபிக்". இங்கிருந்து நிலவை அனுப்புகிறார் தூது. அது போகிறது. போய் பதில் செய்தியையும் கொண்டு வருகிறது

"அண்ணல் நபி பொன்முகத்தை கண்கள் தேடுதே" என்ற இசைமுரசின் இனிமையான பாடலில் ஒரு அற்புதமான வரி வரும். "தென்றல் அதை தூது விட்டேன் திரும்பவில்லையே..!" என்று. அது எப்படி திரும்பி வரும்? காரணம் அது போன இடம் அப்படிப்பட்ட இடம். திரும்பி வர மனம் இசையாது. புஷ்பங்களின் மகரந்தாமாம் மதினப் பூமியில் அதற்கு புரள வேண்டும்; உருள வேண்டும்; போலிருந்திருக்க வேண்டும். இல்லாமல் போனால் அந்த கஸ்தூரி மணத்தில் லயித்துப் போய் அங்கேயே சங்கமித்திருக்க வேண்டும். அதனால்தான் தூத் போன தென்றல் திரும்பவில்லை.

கவிஞர் இஸட் ஜபருல்லாஹ் தூதுவிட்டது நிலவை அல்லவா? தென்றல் திரும்பாமல் போனால் என்ன? இருக்கவே இருக்கிறது வாடைக் காற்று. அதை வைத்து நாம் 'அட்ஜ்ஸ்ட்' செய்துக் கொண்டு போய் விடலாமே?

ஆனால் நிலவு அப்படியா? இருப்பது ஒன்றே ஒன்று அல்லவா? அது இல்லாமல் போனால் இரவு வெளிச்சத்திற்கு என்னச் செய்வது? எப்படி பிறை பார்ப்பது? எங்ஙனம் பெருநாள் கொண்டாடுவது? மாதத்தை எப்படி கணக்கெடுப்பது? இடுப்பில் இருக்கும் குழந்தைகளுக்கு தாய்மார்கள் எப்படி நிலாச்சோறு ஊட்டுவது? கவிஞர்கள் கவிதை எழுதுவதற்கு ஒரு முக்கியமான 'கரு' மிஸ்ஸிங் ஆகி விடுமே? இவ்வளவு பிரச்சினை இருக்கிறதே?

எனவேதான் எங்கள் பூமான் நபியைக் கண்டபின்பும் அதை திரும்ப வரச் செய்கிறார் நம் கவிஞர். விவரமான மனிதரிவர். அத்தனை ஒரு மகத்துவம் நிறைந்த இடத்திற்குச் சென்ற நிலவானது வெறுமனே எப்படி வரும்?

சில நல்ல செய்திகளைத் தாங்கி வருகிறது. அறிவுரைகளைச் சுமந்து வருகிறது. புத்திமதிகளை ஏந்தி வருகிறது. போதனைகளோடு புறப்பட்டு வருகிறது. இனி கவிஞர் இஸட் ஜபருல்லாஹ் அவர்களின் கவிதை வரிகளில் மூழ்குவோம் :


நிலவு சொன்னது---------------

விண்ணகத்தில் சதிராடும்
வெண்ணிலவை நான் கேட்டேன்
அண்ணல்நபி பூமுகத்தைக் கண்டாயா....? அவர்
சொன்னமொழி எனக்கெடுத்துச் சொல்வாயா?

கன்னல்நபி நாயகத்தை
கண்டுவந்த உணர்வதனை
விண்டுரைக்க வார்த்தையில்லை என்றது..! அதை
விடவில்லைநான் அதனால் சொன்னது...!

அண்ணலாரின் ஒளிமுகத்தை
என்முகத்துக் கீடாக்கி
பாட்டெழுதும் அறியாமை சொல்லிவந்தேன்..! - நெஞ்சைப்
பண்படுத்தும் போதனைகள் அள்ளி வந்தேன்..!

ஏழைகளுக் கிரங்கச் சொல்லி
என்னிடத்தில் சொல்லச் சொன்னார்...!
ஏற்றுவந்து கூறிவிட்டேன் செல்வர்களே..! பணம்
எத்தனை நாள் நிலைத்திருக்கும் சொல்லுங்களேன்...?

இம்மைதரும் சுகங்களிலே
மறுமையினை மறந்திடாதீர்..!
என்றுஎன்னை நினைவூட்டச் சொன்னார்கள்..! நபிகள்
என்றும் உலகம் சதமில்லை என்றார்கள்..!

ஆளுகின்ற பதவியெல்லாம்
'அல்லாவின் அடிமை' யென்ற
பதவிக்குமுன் ஈடாகாது என்றார்கள்..! நபிகள்
பக்குவமாய் எடுத்துரைக்கச் சொன்னார்கள்..!

மூமீன்கள் பிளவுபட்டால்
ஏமாளி ஆனார்கள்...!
ஏனிந்த வேற்றுமைகள்..? என்றார்கள் - நபிகள்
என்னைத்தான் கேட்டுவரச் சொன்னார்கள்..!

சுவனசுகம் துறந்தவராய்
நரகநெருப்பை நாடுகின்றார்..!
சொல்லிவிடு வெண்ணிலவே என்றார்கள்...! இதை
சொல்லும்போது முகத்தில்வாட்டம் கொண்டார்கள்...!

எம்பெருமான் சொன்னவைகள்
எல்லாமும் சொல்வதென்றால்
எந்தன்மனம் தாங்காது என்றது..! நிலவு
என்னை விட்டு வானில்விரைந்து சென்றது...!

(இந்த தேர்தல் களத்தில் ஒற்றுமை காட்ட வேண்டிய மூமீன்களாகிய நாம் பிளவுபட்டு ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும் இத்தருணத்தில் இக்கவிதை மிகவும் பொருத்தமாக உள்ளது)

- அப்துல் கையூம்

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP