Thursday 16 April, 2009

நீதிபதி மு.மு.இஸ்மாயீல்




(நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் அவருடனிருந்து பழகிய வழக்கறிஞர் த. இராமலிங்கம், தம் நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்)

நாகூரில் ஒர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர், நீதிபதி இஸ்மாயீல் அவர்கள். வறுமை சூழ்ந்த இளமை என்றாலும் படிப்பிலும் இலக்கியத்திலும் இளமை யிலேயே சிறந்து விளங்கியவர். பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் பேச்சுப் போட்டிகளில் பரிசுகள் பெற்ற கதையை, ஓய்வாகப் பேசும் நேரங்களில் சொல்லிக் கொண்டே இருப்பார்.

முயற்சியினால் முன்னுக்கு வந்தவர், அவர். டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதி பதியாகப் பதவியேற்று அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் தலைமை நீதிபதியாகவும், நீதித் துறைக்கு அவர் ஆற்றிய சேவை மகத்தானது.

பண்பட்ட இலக்கியவாதியாக அவர் திகழ்ந்தார். இலக்கியத்தில் நயம் பாராட்டிப் பேசிக்கொண்டிருப்பது அவருக்குப் பிடிக்காது. நகைச்சுவை சொன்னால் கோபமே வந்துவிடும். மேடையில் பேசப்படும் ஒவ்வொரு சொல்லும் இலக்கியத்துக்கோ, சமுதாயத்துக்கோ நேரிடையாகப் பயன்படவேண்டும் என்பார்.

சென்னை கம்பன் விழாவில் ஒருமுறை மாலை நிகழ்ச்சிக்கு அவர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பேச்சாளர் ஒருவர், ஒரு நகைச்சுவை சொன்னார். துரதிருஷ்டவசமாக அதே நகைச் சுவையைக் காலை நிகழ்ச்சியிலும் வேறு பேச்சாளர் ஒருவர் சொல்லியிருந்தார். இவரும் அதையே சொல்ல, தலைமைப் பொறுப்பிலிருந்த நீதிபதி இஸ்மாயீல் அவர்களுக்குச் சட்டென்று கோபம் வந்துவிட்டது. “இந்த கத்திரிக்கா ஜோக்கெல்லாம் காலையிலேயே சொல்லிவிட்டாங்க, நீங்க உங்க கருத்தைப் பேசுங்க’ என்று ஒலிபெருக்கியிலேயே சொன்னார்.

நீதித் துறையில் மட்டுமல்ல. இலக்கிய உலகிலும் அவர் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அவர் மேடையில் இருக்க வேண்டும் என்பதில்லை. பார்வையாளர்கள் வரிசையில் இருந்தால் கூட பேச்சாளர்கள் தயங்கித் தயங்கிப் பேசுவார்கள்.

இலக்கிய உலகில் அடுத்த தலைமுறை வளர வேண்டும் என்பதில் உறுதியான எண்ணம் கொண்டிருந்தார். அவருடைய எண்ணத்தைச் செயலாக்கத் துணை நின்ற பெருமை, செயலாளராக இருந்த பழ.பழநியப்பன் அவர்களையே சாரும். நீதிபதி இஸ்மாயீல் அவர்களும் பழ.பழநியப்பன் அவர்களும் வழி காட்டாமல் இருந்திருந்தால் நாங்கள் எல்லாம் இலக்கிய உலகத்திற்குள் காலடி வைத்து இருக்கமுடியாது.

மாநில அளவில் மாணவ-மாணவியர்க்குப் பேச்சு, கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளை அவருடைய வழியில் கம்பன் கழகம் இன்றும் நடத்தி வருகிறது. பேச்சுப் போட்டியில் வெற்றிபெறும் மாணவ-மாணவியரைக் கம்பன் விழா மேடையில் ஏற்றிப் பேச வைக்கும் வழக்கத்தை நீதிபதி இஸ்மாயீல் அவர்களும் பழ.பழநியப்பன் அவர்களும்தான் உருவாக்கினார்கள். இன்று பல கழகங்கள் அதைப் பின்பற்றி வருகின்றன.

மதுரை கம்பன் கழகம், அவருடைய தமிழ்த் தொண்டைப் பாராட்டி பெரும் தொகை ஒன்றை விருதாகக் கொடுத்தது. அவர் வீட்டுக்கே சென்று நாங்கள் அனை வரும் வழங்கினோம். அப்போது பெற்றார். ஆனால் மறுநாள் ஒரு கடிதம் எழுதி, அந்தப் பணத்தையும் வைத்து, கம்பன் கழகத்தின் துணைத் தலைவர் ஏ.வி.எம்.சரவணன் அவர்களுக்கு அனுப்பிவிட்டார். “இந்தப் பணத்தை நான் வைத்துக்கொள்வது முறையாக இருக்காது’ என்று கடிதத்தில் எழுதியிருந்தார். பின் அவருடைய அனுமதியின் பேரில், கம்பன் கழகத்தின் அறக்கட்டளையில் அப்பணம் சேர்க்கப்பட்டது.

எவருக்கும் எக்காலத்திலும் தலை வணங்காத தகைமையாளராக வாழ்ந்து, தன் வாழ்வை நிறைவு செய்து கொண்டிருக்கிறார், நீதிபதி இஸ்மாயீல் அவர்கள். வளர்ந்து வரும் தலை முறைக்கு அவரது நேர்மையும் மன உறுதியும் தலைவணங்காத் தன்மையும் என்றும் வழிகாட்டி நிற்கும்.

- நன்றி (SIFY - TAMIL)

மறைவுச் செய்தி (The Hindu)

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP