Monday, 26 May 2008

தமிழ் மணி




நியூஸிலாந்தைக் கண்டுபிடித்தது தமிழர்களா?
-ஆய்வுக் கட்டுரை:எச்.எஸ். முகம்மது ராஃபி

நியூஸிலாந்து அருங்காட்சியகம் கப்பல் மணிதிரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முதுமொழியை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கடைபிடித்து பல நாடுகளில் வியாபாரத்தில் கோலொச்சியவர்கள் தமிழர்கள். முற்கால இந்தியாவில் கப்பலோட்டும் கலை தமிழருக்கே உரித்தாயிருந்தது என்றால் அது மிகையில்லை.



ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கப்பல்களைக் கட்டி கடலிலே செலுத்தியதை ஹரப்பா, மொகதஞ்சரோ நாகரிகங்களைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. சோழ மன்னர்கள் பலம் வாய்ந்த கப்பற் படைகளை உடையவராயிருந்தனர்.


இராஜராஜசோழன் லட்சக்கணக்கான தமிழ் வீரர்களை கப்பலில் கொண்டு சென்று இலங்கை, மலாய் முதலியத் தீவுகளை வென்றதாக வரலாறு கூறுகின்றது. மேலும் தமிழர்களின் கடல் கடந்த வணிகத்திற்கு முத்திரைப் பதிக்கும் விதமாக அமைந்துள்ளது நியூஸிலாந்து நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருக்கும் தமிழ் மணி. நியூஸிலாந்து நாட்டில் வெங்கேரி என்னுமிடத்திடத்தருகே கண்டெடுக்கப்பட்டு தற்சமயம் நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டன் அருங்காட்சியத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் 'கப்பல்மணி' தமிழர்களின் கடல் கடந்த வணிபத்திற்கு சான்றாக மட்டும் இல்லாமல், நியூஸிலாந்து நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய தொன்மையானப் பொருளாகவே இதுக் கருதப் படுகின்றது.



இங்கிலாந்திலிருந்து நியூஸிலாந்திற்கு அனுப்பப்பட்ட சமயப்பரப்புக் குழுவில் இடம் பெற்ற வில்லியம் கோல்ன்ஸோ எனும் பாதிரியாரால் கண்டுபிடிக்கப் பட்ட இந்த வெண்கல மணியின் வாய் விழிம்பில் 'முகைதீன் வக்குசுடைய கப்பல் உடைய மணி' என்று மணியைச் சுற்றிலும் பொறிக்கப் பட்டுள்ளது. இம்மணியில் காணப்படும் எழுத்தைக் கொண்டு இது 17-ஆம் அல்லது 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். முற்றிலும் வெண்கலத்தினால் ஆன இம்மணியை சுற்றிலும் 23 தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளது. 1836ஆம் ஆண்டில் இந்த மணியை வில்லியம் கோல்ன்ஸோ கண்டுபிடிப்பதற்கு முன்னர் இதில் உருளைக் கிழங்கை சமைத்துக் கொண்டிருந்தனர் நியூஸிலாந்து மௌரி இனப் பழங்குடியினர்.


வில்லியம் கோல்ன்ஸோ மௌரி இனப் பழங்குடியினரிடம் ஒரு இரும்பிலான சமையல் பாத்திரத்திற்கு இந்த மணியை பண்டம் மாற்று செய்து கொண்டார். மௌரி இனப் பழங்குடியினரோ இந்த மணியை பெரும் சூறாவளியில் கரையடைந்து, ஒரு பெரிய மரத்தின் வேர்களால் சூழப்பட்ட நிலையில் இதனைக் கண்டனர். பாதிரியார் மணியைக் காண்பதற்கு முன்னர் மௌரிகள் இதனை எத்தனை காலம் சமையல் பாத்திரமாக உபயோகித்தார்கள் என்றோ, மௌரிகள் எந்த ஆண்டில் கண்டெடுத்தனர் என்றோ குறிப்புகளும் இல்லை. இறுதியாக பாதிரியாரின் உயிலின் பிரகாரம் இந்த மணி நியூஸிலாந்து நாட்டின் தேசிய அருங்காட்சியத்தில் ஒப்படைக்கப்பட்டது.


நியூஸிலாந்தைக் கண்டுபிடித்தல் 15-ஆம் நூற்றாண்டின் வாக்கிலேயே தமிழர்கள் ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு சென்று வாணிபம் செய்திருக்கலாம் என்று நம்பப் படுகின்றது. ஐரோப்பியக் கண்டத்து கடல் ஆய்வாளர்கள் தங்களது வியாபார நோக்கத்திற்காக பல்வேறு புதிய நாடுகளைக் கண்டுபிடித்தனர். இவ்வாறு அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களைக் கண்டுபிடித்த பிறகு வேறு புதிய நாடுகளை கண்டுபிடிக்க பசிபிக் பெருங்கடலில் பல ஆண்டுகள் வெள்ளையர் சலித்தெடுத்தனர்.


இறுதியாக இங்கிலாந்தின் ஜேம்ஸ் குக் எனும் கடல் ஆய்வாளர். 1769-ஆம் ஆண்டில் நியூஸிலாந்தை அவர் கண்டுபிடித்தார். நியூஸிலாந்து நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் தமிழர் ஒருவரின் பெயர் பொறிக்கப்பட்ட கப்பல் மணி இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிடைத்தது என்றால் அது ஆச்சர்யமான விஷயமில்லை தான். ஆனால் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு தமிழர்கள் வெள்ளையர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னரே தடம் பதித்தது மட்டுமின்றி வாணிபமும் செய்ததற்கும் இந்த கப்பல் மணி ஒன்றே போதுமான ஆதாரமாகவும் இதனைக் கருதலாம்.



வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த மணிக்கு தமிழகத்தில் மூன்று ஊரார்கள் உரிமை கோருகின்றனர் இதோ கீழே.வேதாளை மற்றும் மரைக்காயர்பட்டிணம் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் மண்டபத்திற்கு மேற்கே இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ள சிற்றூர்கள் வேதாளை மற்றும் மரைக்காயர் பட்டிணம். பெயருக்கு ஏற்றார் போல் இவ்வூர்வாசிகள் கப்பல் வணிகராகவும், கப்பல் உரிமையாளராகவும், கடல் சார்ந்த தொழில் வித்தகர்களாவும் விளங்கினர். சேது நாட்டின் சிறந்த துறைமுகமாக வேதாளை மற்றும் மரைக்காயர் பட்டிணம் திகழ்ந்தது என்றால் அது மிகைன்று. 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரையினிலும் இவர்கள் கப்பல் வணிகத்தில் ஈடுபட்ட காலங்கள் பொற்காலம் என்றே வர்ணிக்கலாம்.


நியூஸிலாந்து நாட்டில் கண்டெடுக்கப் பட்ட மணி எங்களுக்குச் சொந்தமானது என ஒ.மு.சே.மு. உம்மு சல்மா பீவி மற்றும் அவரின் சகோதரர் ஒ.மு.சே.மு. செய்யது முகையதீன் ஆகியோர்; எங்கள் பாட்டனார் சேகப்பா அவர்களின் தாத்தாவே வக்காஸ் ஆவார். அவருக்கு சில கப்பல்களை வைத்திருந்ததாவும் அவற்றில் ஒரு கப்பலின் மணியாக இது இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். மரைக்காயர் பட்டிணத்து வாசிகள் வக்காஸ் எனும் பெயரை காலகாலமாக தங்களின் குழந்தைகளுக்கு இன்று வரை சூட்டிவருகின்றனர். மேலும் வக்காஸ் எனும் பெயர் தமிழகத்தில் வேறு எந்த ஊர்களிலும் புழக்கத்தில் கிடையாது. இன்று வேதாளை மற்றும் மரைக்காயர் பட்டிணத்தில் வாழும் மக்களில் பெரும்பாலோனோர் முகையதீன் வக்காஸ் அவர்களின் வழியில் வந்தவர்களே என்கின்றக் காரணத்தினாலும் இந்த மணியின் உரிமையை இவர்கள் பெற முனைவதாகத் தெரிகின்றது. வக்காஸிற்குப் பின்னர் அவரது மகன் முகையதீன் மீராசா ஷையாரின் பேரன் சேகப்பா, சேகப்பாவின் மகன்கள் ஐவரும் கப்பல் வணிகர்களாகவே வாழ்ந்து மறைந்திருக்கின்றார்கள். ஹபீபு முகம்மது அரசர் கீழக்கரையைச் சேர்ந்த ஹபீபு முகம்மது அரசர் மரைக்காயர் பட்டிணத்தை நிறுவினார். 1822ஆம் ஆண்டு மதுரை ஜில்லா கலேக்டர் மௌதா ரொசுபீத்தா என்பவர் ஹபீபு முகம்மது அரசரின் சகோதரர் அப்துல் காதர் சாகிபு மரைக்காயர் அவர்களுக்கு எழுதிக் கொடுத்த ஆவணம் ஒன்றின் மூலம் இது நிரூபணமாகின்றது. முதலில் ஹபீபு மம்மது புரம் என்று அழைக்கப் பட்டாலும் பின்னர் மருவி மரைக்காயர் பட்டிணம் என்றானது. இந்த மணி-கீழக்கரை வள்ளல் ஹபீபு மரைக்காயரின் நாப்பது கப்பல்களின் ஒன்றின் மணி எனவும் கீழக்கரை வாசிகள் கருதுகின்றனர். மரைக்காயர் பட்டிணத்தை ஹபீபு முகம்மது அரசர் உருவாக்கினாலும் கீழக்கரையினிலேயெ அவர் வாழ்ந்து மறைந்ததால் இந்த மணியை கீழக்கரைவாசிகள் உரிமை கோருகின்றனர்.மேலும் கீழக்கரை சேதுநாட்டின் முதன்மை துறைமுகமாக இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஆயினும் பல இஸ்லாமிய எழுத்தாளர்கள் இந்த மணி ஹபிப் அரசருக்குச் சொந்தமானது என்று பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தாலும் போதிய ஆதாரங்களை இதற்காக அவர்கள் மேற்கொள் காட்டவில்லை.முகையதீன் பக்ஸ் சமீபகால ஆய்வுகளில் பழவேற்காட்டில் மீர் முகம்மது ஷபீ மற்றும் ஜேன் டி மட்டு டி அக்வாரரெஸ் என்னும் டச்சுக்காரரும் இணைந்து கூட்டாக ஒரு கப்பலை நடத்தி வந்தனர். அந்தக் கப்பலுக்கு முகையதீன் பக்ஸ் என்று பெயர். இந்த கப்பல் பழவேற்காடு, நாகப்பட்டிணம் ஆகிய துறைமுகங்களிலிருந்து தூரகிழக்கு நாடுகளான ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளுக்கு வாணிபத்தில் ஈடுபட்டிருந்தது. இந்த மணி இது போன்ற கப்பலைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்கின்றார் பிரபல தொல்லியல் ஆய்வாளர் மற்றும் எழுத்தாளருமான முனைவர்: ஜெ.ராஜாமுகம்மது (இவர் முன்னாள் புதுக்கோட்டை அருங்காட்சியகத் தலைவரும்; கூட) இலங்கைத் தமிழர்களின் மணியா! இந்த மூன்று ஊரார்களின் உரிமை போராட்டம் ஒரு புறம் இருக்கட்டும் என்சைக்ளோபீடியா ஆஃப் நியூஸிலாந்தில் (நுnஉலடழிநனயை ழக நெற ணநயடயனெ ) இந்த மணியை ஸ்ரீலங்கா நாட்டின் தமிழ் மணி என்று கூறப்படடிருந்தாலும் அதனை மெய்பிக்க எவ்விதமான சான்றுகளும் அதில் இணைக்கப்பட்டிருக்கவில்லை.தபால் தலை தமிழர்களின் கடல் கடந்த வாணிபத்திற்கு ஒரு மணி மகுடமாகவேத் திகழும் இந்த கப்பல் மணியை தபால்தலையாக வெளியிட்டு கப்பலோட்டியத் தமிழர்களுக்கு மகுடம் சூட்டவேண்டும் செய்வார்களா?.


ஆதார நூல்கள்:


1.வரலாற்றில் ஹபிப் முகம்மது அரசர்- இலங்கை எழுத்தாளர் மானாமக்கீன், மணிமேகலைப்பிரசுரம் (2004)

2.கீழக்கரை இலங்கை இனியத் தொடர்புகள் இலங்கை எழுத்தாளர் மானாமக்கீன், மணிமேகலைப்பிரசுரம் (1995)

3.விடியல் வெள்ளி மாதஇதழ் 2005-பிப்ரவரி மற்றும் 2005-அக்டோபர்

4.இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்- அப்துற்றகீம் (1979)

5.தமிழககத்தில் இஸ்லாமியர்கள் வரலாறு- ஏ.கே.ரிபாயி 1988

6.எம்கே.ஈ.மவ்லானா அவர்கள் எழுதிய 1.8.90ல் எழுதியக் கட்டுரை


படம்: 1836-ஆம் ஆண்டில் நியூஸிலாந்து நாட்டில் கண்டெடுக்கப்பட்ட தமிழர்களின் கப்பல் மணி.

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP